பத்மாவத் படத்திற்கு ஹரியானாவில் எதிர்ப்பு: டிக்கெட் கவுன்ட்டரை அடித்து நொறுக்கிய கும்பல்
பத்மாவத் திரைப்படம் 25ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் ஹரியானா மாநிலத்தில் படத்திற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் உருவான ஹிந்திப் படம்‘பத்மாவதி’. தீபிகா படுகோனே, ஷாகித் கபூர், ரன்வீர் சிங், அதிதி ராவ் ஆகியோர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.
ராஜஸ்தானின் சித்தூர் ராணி பத்மாவதியின் வரலாற்றை சித்தரிக்கும் விதமாக பத்மாவதி திரைப்படம் உருவாகியிருப்பதாக கூறி படத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனையடுத்து கடந்த டிசம்பர் 1ம் தேதி வெளியாவதாக இருந்த படம் நிறுத்தப்பட்டது. இதையடுத்து படத்தின் பெயர் ‘பத்மாவத்’ என மாற்றம் செய்யப்பட்டும், காட்சிகளில் மாற்றம் செய்தும் சென்சார் போர்டு அனுமதி வழங்கியது.
இந்நிலையில் சர்ச்சைக்குள்ளான பத்மாவத் திரைப்படம் உலகம் முழுவதும் ஜனவரி.25ஆம் தேதி வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்நிலையில் ஹரியானா மாநிலத்தில் படத்திற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
குருகிராம் பகுதியில்,அடையாளம் தெரியாத சிலர் தியேட்டர்களை உள்ளடக்கிய வணிக வளாகத்தில் தாக்குதல் நடத்தினர். டிக்கெட் கவுன்ட்டர், தியேட்டரில் உள்ள உணவகங்களை அந்த கும்பல் அடித்து நொறுக்கியது. படத்தை திரையிட எதிர்ப்பு தெரிவித்து, ஹரியானாவின் மற்றொரு பகுதியில் ஒரு பேருந்து அடித்து நொறுக்கப்பட்டது.