தமிழ் ராக்கர்ஸ் உள்ளிட்ட 2 இணையதளங்கள் மீது வழக்குப்பதிவு
தமிழ் ராக்கர்ஸ் உள்ளிட்ட 2 இணையதளங்கள் மீது அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப்பிரிவு வழக்குப்பதிவு செய்துள்ளது.
தமிழ் திரைப்படங்களை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிடுவதாக தமிழ் ராக்கர்ஸ், தமிழ் கன் உள்ளிட்ட சில இணையதளங்கள் மீது நீண்ட நாட்களாக புகார் எழுப்பப்பட்டு வருகிறது. ஆரம்ப காலம் முதலே இதுபோன்ற இணையதளங்களுக்கு எதிராகவும், திருட்டு விசிடிகளுக்கு எதிராகவும் குரல் கொடுத்து வந்த விஷால், தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவரானதும் திருட்டுத்தனமாக படங்களை வெளியிடும் இணையதளங்களை முடக்குவதில் தீவிரம் காட்டத் தொடங்கினார். அத்துடன் தமிழ் ராக்கர்ஸை முடக்கும் வரை ஓயமட்டேன் என்று தெரிவித்திருந்தார்.
இருப்பினும் தமிழ் ராக்கர்ஸ் குழுவினரை ஒழிக்க முடியவில்லை. அவர்கள் தொடர்ந்து இணையதளங்களில் படங்களை வெளியிட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். அதிலும் சில படங்களை வெளியாகும் நாளிலோ அல்லது வெளியாவதற்கு முன்னரோ இணையதளத்தில் வெளியிட்டு விடுகின்றனர். இதனால் தயாரிப்பாளர்கள் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தும் நிலை ஏற்படுகிறது. இந்நிலையில் ‘இப்படை வெல்லும்’ என்ற படத்தை தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் வெளியிட்டதாக, நடராஜன் என்பவர் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில், அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப்பிரிவு தமிழ் ராக்கர்ஸ் உள்ளிட்ட 2 இணையதளங்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.