தயாரிப்பாளர் சங்கத்துக்கு பூட்டு - விஷாலுக்கு எதிராக போர் கொடி
விஷால் தலைமையிலான நிர்வாகத்தை கண்டித்து தயாரிப்பாளர்களில் ஒரு பிரிவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
நடிகர் விஷால் நடிகர் சங்க செயலாளராகவும் தயாரிப்பாளர் சங்க தலைவராகவும் இரண்டு பதவிகளை வகித்து வருகிறார். ஆனால் அவர் பதவியேற்ற சில நாட்களிலேயே அவர் மீது தயாரிப்பாளர்களும் பலரும் குற்றச்சாட்டை முன் வைத்து வந்த வண்ணம் இருக்கின்றனர்.
தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதவிக்கு நடிகர் விஷால் வந்த போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை, தமிழ் ராக்கர்ஸ் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி தமிழ் தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்களான பாரதிராஜா, டி ராஜேந்தர், ராதாரவி, ரித்தீஷ் உள்ளிட்டோர் விஷாலுக்கு எதிராக ஏற்கெனவே செய்தியாளர்கள் சந்திப்பு நடத்தி பல்வேறு கேள்விகளை முன் வைத்தனர்.
இந்நிலையில், விஷால் தலைமையிலான நிர்வாகத்தை கண்டித்து தயாரிப்பாளர்களில் ஒரு பிரிவினர் சென்னை திநகரில் உள்ள தயாரிப்பாளர்கள் சங்கம் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பன் கூறுகையில், “விஷால் கூறிய எந்தவிதமான வாக்குறுதிகளையும் கடந்த இரண்டு ஆண்டுகளில் நிறைவேற்றவில்லை எனவும் கடந்த நிர்வாகம் ஒப்படைத்த நிரந்தர வைப்பு தொகையில் 7 கோடி ரூபாய் காணாமல் போய்விட்டது. பிரச்னைகள் தொடர்பாக விவாதிக்க பொதுக்குழுவை கூட்ட வேண்டும். பொதுக்குழுவிடம் ஆலோசிக்காமல் விஷால் தன்னிச்சையாக முடிவெடுக்கிறார். நடிகர் சங்கத்தில் செயலாளராக உள்ள விஷால் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் தலைவரானது தவறு” என தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து போராட்டம் நடத்தி வருபவர்கள் தயாரிப்பாளர்கள் சஙகத்திற்கு பூட்டு போட்டு தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.