’90 வருட சினிமாவில் இப்படி நடந்ததே இல்லை’: மலையாள நடிகருக்கு எதிராக போர்க்கொடி

’90 வருட சினிமாவில் இப்படி நடந்ததே இல்லை’: மலையாள நடிகருக்கு எதிராக போர்க்கொடி
’90 வருட சினிமாவில் இப்படி நடந்ததே இல்லை’: மலையாள நடிகருக்கு எதிராக போர்க்கொடி

தலைமுடியை மாற்றிய விவகாரத்தில், மலையாள சினிமாவின் இளம் நடிகருக்கு எதிராக தயாரிப்பாளர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

மலையாள சினிமாவின் இளம் ஹீரோ ஷேன் நிகம். ‘இஷ்க்’, ‘கும்பளங்கி  நைட்ஸ்’ உள்பட பல படங்களில் ஹீரோவாக நடித்துள்ள இவர், வெயில், குர்பானி ஆகிய 2 படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருந்தார். ’வெயில்’ படத்தில் நீளமாக முடி வளர்த்த நிலையில் நடிக்க வேண்டும். படப்பிடிப்பு முடியும் வரை முடியை வெட்டக்கூடாது என்று இயக்குநர் கூறியிருந்தார். ஷூட்டிங் தொடங்கி நடந்து வந்த நிலையில், மற்றொரு படத்தில் நடிப்பதற்காக ஷேன் நிகம் தனது தலைமுடியை வெட்டினார். இதனால் இயக்குநர் சரத் மற்றும் தயாரிப்பாளர் ஜோபி ஜார்ஜ் இருவரும் நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்தனர். 

(ஷேன் நிகம் - ஜார்ஜ்)

இதற்கிடையே தயாரிப்பாளர் மற்றும் நடிகர் இடையே சமரசம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர் ’வெயில்’ படத்தில் நடிப்பதாகவும், தனது கெட்டப்பை இனி மாற்ற மாட்டேன் என்றும் உறுதி அளித்திருந்தார்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் ஷேன் நிகம், தனது கெட்டப்பை மாற்றி, அந்தப் புகைப்படங்களை சமூக வலைத் தளங்களில் வெளியிட்டார். அதில் தனது தலை முடியை இருபுறமும் ஷேவ் செய்திருந்தார். இதைக் கண்டு ‘வெயில்’ இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து மலையாள தயாரிப்பாளர் சங்கத்தில் தயாரிப்பாளர் புகார் அளித்தார். இதையடுத்து அவசர ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.  

கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த நிர்வாகிகள், ’ஷேன் நிகம் நடிக்கும் படங்களுக்கு இனி ஒத்துழைப்பு அளிக்க மாட்டோம், அவர் நடித்துவரும் வெயில், குர்பானி உள்ளிட்ட படங்கள் கைவிடப்படுகின்றன. அதற்காகச் செலவழிக்கப்பட்ட ரூ.7 கோடியை ஷேன் நிகம் திரும்பத் தர வேண்டும்’ என்றனர்.

(புதிய கெட்டப்பில் ஷேன் நிகம்)

மேலும் அந்த சங்கத்தின் தலைவர் ரஞ்சித் கூறும்போது, ‘’ஒப்பந்தத்தை மீறி, மீண்டும் நடிக்க வேண்டும் என்றால் அதிக சம்பளம் வேண்டும் என்று கேட்டிருக்கிறார்  ஷேனு. அவர் மீது பல புகார்கள் வந்தன. 90 வருட மலையாள சினிமா வரலாற்றில், ஷேனு நடந்துகொண்ட விதம் போல, எப்போதும் நடந்ததில்லை’’ என்றார். 

மலையாள சினிமாவில் இளம் நடிகர்கள் போதை மருந்து பயன்படுத்துவது பற்றிய கேள்விக்கு, அது உண்மைதான் என்றும் இளம் நடிகர்கள் பயன்படுத்தும் கேரவன் உள்ளிட்ட இடங்களில் போலீசார் ஏன் சோதனை நடத்தவில்லை என்றும் தயாரிப் பாளர்கள் கேள்வி எழுப்பினர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com