கால்ஷீட் தராமல் தனுஷ் இழுத்தடிக்கிறார் என்று தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனுஷ், மேகா ஆகாஷ் நடிப்பில், கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கிய படம், ‘எனை நோக்கி பாயும் தோட்டா’. இந்தப் படத்தை எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ் மதனுடன் இணைந்து கவுதம் வாசுதேவ் மேனன் தயாரித்தார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு எப்போதோ முடிந்திருக்க வேண்டும். ஆனால், தனுஷ் கால்ஷீட் தராததால் படப்பிடிப்பு முடியவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதன், தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், ‘இன்னும் 12 நாட்கள் தனுஷ் கால்ஷீட் தந்தால்தான் எனை நோக்கி பாயும் தோட்டா படத்தை முடிக்க முடியும். அவர் கால்ஷீட் தராததால் படத்தை முடிக்க முடியவில்லை. இதுபற்றி அவரிடம் பேசி கால்ஷீட்டை வாங்கித் தர வேண்டும்’ என்று கூறியுள்ளார்.
’தனுஷ் நடித்த ’கொடி’ படத்தை மதன் தயாரித்தார். அந்தப் படம் முடிந்தும் ரிலீஸ் பண்ண செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. ஒன்பது கோடி ரூபாயை தனுஷ் விட்டுக்கொடுத்தால்தான் படத்தை ரிலீஸ் செய்ய முடியும் என்ற நிலை உருவானது. மதனுக்காக அதை தனுஷ் விட்டுக்கொடுத்தார். பிறகுதான் ’கொடி’ பறந்தது. இப்போது இந்தப் படத்துக்கும் தனுஷுக்கு சம்பளம் கொடுக்கப்படவில்லை. சம்பளம் கொடுத்தால்தான் ஷூட்டிங்கிறகு தனுஷ் வருவதாகக் கூறியிருக்கிறார். இதில் என்ன தவறு இருக்கிறது?’ என்று தனுஷ் தரப்பில் கூறப்பட்டது.