தயாரிப்பாளர்கள் சங்கம் ஈடுபட்டிருப்பது வேலை நிறுத்தம் அல்ல, தமிழ் சினிமாவை சீரமைக்கும் பணி என விஷால் தெரிவித்துள்ளார்.
திரையரங்குகளின் டிக்கெட் விலை, டிஜிட்டல் நிறுவனங்களின் கட்டணம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 1 ஆம் தேதி முதல் தயாரிப்பாளர்கள் சங்கம் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் புதுப்படங்கள் எதுவும் திரையிடப்படாமல் இருக்கிறது. அத்துடன் படப்பிடிப்புக்கள் உள்ளிட்ட பணிகளும் நிறுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் வேலை நிறுத்தம் தொடர்பாக இன்று செய்தியாளர்களிடம் பேசிய தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் விஷால், பொதுமக்கள் திரையரங்கிற்கு வந்து சிரமம் இன்றி படம் பார்க்க வேண்டும் என்றார். அனைத்துத் திரையரங்குகளிலும் புரொஜக்டர்கள் கட்டாயம் இருக்க வேண்டும் என்றும், டிக்கெட் விற்கும் முறையை கணினி மயமாக்க வேண்டும் எனவும் அவர் கூறினார். ஆன்லைனில் சினிமா டிக்கெட் புக் செய்தால் வசூலிக்கப்படும் ரூ.30 கூடுதல் தொகை மக்களுக்குப் பெரும் சுமையாக உள்ளதாக கூறிய அவர், அது யாருக்கான லாபம் என்று தெரியவில்லை என குறை கூறினார்.
சினிமாவிற்கு தொடர்பில்லாத ஒரு நிறுவனம் கோடி கோடியாகச் வருமானம் ஈட்டுவதாகவும், தயாரிப்பாளர்கள் நஷ்டமடைந்து கொண்டே இருப்பதாகவும் விஷால் வருத்தம் தெரிவித்தார். மேலும் தமிழ் சினிமாவைத் தனியாருக்குத் தாரைவார்க்க முடியாது எனவும் அவர் உறுதியாக கூறினார்.