“சிறந்த வெர்சன் உங்களுக்காக..” - The G.O.A.T. படத்தின் டிரெய்லர் குறித்த அப்டேட் அறிவிப்பு!
வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து உருவாகியிருக்கும் படம் 'The Greatest of all time' (The GOAT). இந்தப் படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம் கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட பல நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்த படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், திரை வெளியீட்டிற்கான இறுதிகட்ட வேலைகளில் நடந்துவருகின்றன.
படத்தின் கிளிம்ப்ஸ் வெளியாகி வரவேற்பை பெற்றநிலையில், மூன்றாவதாக வெளியான பாடல் (ஸ்பார்க் பாடல்) அதிக வரவேற்பை பெறவில்லை. குறிப்பாக அதில் De Aging செய்யப்பட்டிருக்கும் இளம் விஜயின் கெட்டப் வெளியானதிலிருந்தே ட்ரோல் மெட்டீரியலாக மாறியுள்ளது.
இதனால் படத்தின் டிரெய்லர் மீது ஒட்டுமொத்த விஜய் ரசிகர்களும் நம்பிக்கை வைத்துள்ளனர். சமீபத்தில் வெளியான பிற உச்ச நடிகர்களின் படங்கள் மற்றும் டிரெய்லர்கள் நல்ல வரவேற்பை பெறுவதால், கோட் படத்துக்கும் அது கிடைக்கும் ஒரு பாசிட்டாவான வைப்போடு எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர் ரசிகர்கள்.
டிரெய்லர் குறித்து வெளியான அப்டேட்..
இப்படியாக தி கோட் படத்தின் மீது அதிகப்படியான எதிர்பார்ப்பை வைத்திருக்கும் விஜய் ரசிகர்கள், அப்டேட் குறித்து மிகுந்த ஆவலாக இருந்து வருகின்றனர்.
இதை அறிந்து கடந்த 12ம் தேதி (நேற்று முன்தினம்), எக்ஸ் தளத்தில் தி கோட் பட தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, “உங்களுக்காக ஒரு அற்புதமான டிரெய்லரை நாங்கள் தயார் செய்கிறோம். எனவே தயவுசெய்து அமைதியாக இருங்கள். எங்களுக்கு இரண்டு நாட்கள் அவகாசம் கொடுங்கள்” என்று அறிவித்திருந்தார்.
தொடர்ந்து நேற்றும் ஒருபதிவை பதிவிட்ட அவர், “டிரெய்லர் வெளியீட்டு தேதி நாளை மாலை 6:00 மணிக்கு அறிவிக்கப்படும், உங்களுடன் நாங்களும் காத்திருக்கிறோம்” என்ற தரமான அப்டேட்டை வழங்கினார். இந்த அறிவிப்பை பார்த்த ரசிகர்கள், 'டிரெய்லர் என்னைக்கு வரும்' என்ற மோடுக்கு சென்றுவிட்டனர்.
இந்நிலையில் இன்று மாலை 6 மணிக்காக எல்லோரும் காத்திருந்த நிலையில் புதிய அப்டேட் தயாரிப்பாளர் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.
காரணம், அந்த அறிவிப்பில் “இன்று டிரெய்லர் வெளியீட்டு தேதியை அறிவிப்பதாக கூறியிருந்தேன். ஆனால் சிறந்த வெர்ஷனை உருவாக்க இன்னும் நேரம் தேவைப்படுகிறது. இப்போதைக்கு இந்த சின்ன ட்ரீட், விரைவில் தளபதியை திரையில் காண்போம்” என்று படத்தில் இருக்கும் நடிகர்களின் கெட்டப்களுடன் ஒரு புகைப்படம் பதிவிடப்பட்டுள்ளது. மற்றபடி டிரைலர் பற்றிய எந்த தகவலும் இல்லை.
இருப்பினும், அந்தப் புகைப்படத்தை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். தி கோட் திரைப்படம் செப்டம்பர் 5-ம் தேதி வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.