'பிரியங்கா முதல் ஷாரூக் வரை' வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்ட பாலிவுட் பிரபலங்கள்!

'பிரியங்கா முதல் ஷாரூக் வரை' வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்ட பாலிவுட் பிரபலங்கள்!
'பிரியங்கா முதல் ஷாரூக் வரை' வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்ட பாலிவுட் பிரபலங்கள்!

பிரபல பாலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ரா, அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பாடகரான நிக் ஜோனஸை கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் இந்தத் தம்பதி வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்டதாக (Surrogacy), தங்களது சமூகவலைத்தள பக்கங்களில் அறிவித்துள்ளனர். இதையடுத்து அந்த தம்பதிக்கு. கத்ரீனா கைஃப், ஃபர்கான் அக்தர் உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் வாழ்த்துகள் தெரிவித்துவருகின்றனர். பொதுவாக பாலிவுட் பிரபலங்கள், வாடகைத் தாய் முறையை தேர்ந்தெடுத்து குழந்தை பெற்றுகொள்வது ஒன்றும் புதிதல்ல. பிரியங்கா சோப்ரா - நிக் ஜோனஸ் தம்பதி போன்றே, பிரசவத்திற்காக வாடகைத் தாய் முறையைத் தேர்ந்தெடுத்த பாலிவுட் பிரபல ஜோடிகளைப் பற்றிய சிறு தொகுப்பை இங்கு காணலாம்.

1. ஷாருக்கான் - கௌரிகான்

பாலிவுட்டின் சூப்பர் ஸ்டாரான ஷாருக்கான் மற்றும் கௌரிகான் தம்பதிக்கு, ஏற்கனவே ஆர்யன் என்ற மகனும், சுஹானா என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில், கடந்த 2013-ம் ஆண்டு வாடகைத் தாய் மூலம், ஆப்ராம் என்ற மகனை பெற்றெடுத்தனர்.

2. அமீர்கான் - கிரண் ராவ்

நடிகர் அமீர்கான் மற்றும் அவரது முதல் மனைவி ரீனா தத்தா தம்பதிக்கு இரா கான், ஜுனைத் கான் என்ற இரு மகள்கள் உள்ளனர். இந்நிலையில், அமீர்கான் இரண்டாவதாக திரைப்பட இயக்குநரான கிரண் ராவ் என்பரை கடந்த 2005-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இந்தத் தம்பதி, கடந்த 2011-ம் ஆண்டு ஐ.வி.எஃப். எனப்படும் செயற்கை கருத்தரிப்பு முறை மூலம், ஆசாத் ராவ் என்ற மகனை பெற்றுக்கொண்டனர். மேலும், நடிகர் அமீர்கான், “ஐ.வி.எஃப். மற்றும் வாடகைத் தாய் முறை மூலம் தம்பதிகள், குழந்தை பெற்றுக்கொள்வதை அவமானமாக கருதாமல், அதனை முயற்சி செய்ய வேண்டும்” என ஊக்குவித்துள்ளார். இந்த தம்பதி, கடந்த ஆண்டு தங்களது திருமண வாழ்க்கையில் இருந்து பிரிவதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

3. ஷில்பா ஷெட்டி - ராஜ் குந்த்ரா

நடிகையான ஷில்பா ஷெட்டியும், அவரது கணவர் ராஜ் குந்த்ராவும், கடந்த 2020-ம் ஆண்டு வாடகைத் தாய் மூலம், சமிஷா என்ற பெண் குழந்தையைப் பெற்றெடுத்தனர். ஏற்கனவே இந்த தம்பதிக்கு வியான் ராஜ் குந்த்ரா என்ற மகன் உள்ளார். சமூக வலைதளங்களில் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும் நடிகையான ஷில்பா ஷெட்டி, தனது அபிமான மகள் சமிஷா பற்றிய விஷயங்களை பகிர்ந்துகொண்டே இருப்பார்.

4. ஃபராகான் - ஷிரிஷ் குந்தர்

பாலிவுட்டில் நடன இயக்குநர், நடிகை, இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகத் தன்மைக் கொண்டவர் ஃபராகான். இவர், கடந்த 2004-ம் ஆண்டு திரைப்பட தயாரிப்பாளரான ஷிரிஷ் குந்தரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதி அட்வான்ஸ்டு ஐ.பி.எஃப். எனப்படும் உயர்ந்த செயற்கை கருத்தரிப்பு மூலம், கடந்த 2008-ம் ஆண்டு, 3 குழந்தைகளை பெற்றெடுத்தனர். தனது 43 வயதில் ஃபராகான், சிஸர் என்ற மகனையும், அன்யா, திவா என்ற இரு மகள்களையும் ஒரே நேரத்தில் பெற்றெடுத்தது குறித்து கூறுகையில், “ஐ.பி.எஃப். ஆசீர்வாதம் நிறைந்தது. அது என் வாழ்க்கையை மகிழ்ச்சிகரமானதாக மாற்றியமைத்ததற்கு நான் மிகவும் நன்றியுள்ளவளாக இருக்கிறேன். இன்று பல காரணங்களால், சில தம்பதிகளுக்கு கருத்தரிப்பது என்பது கடினமாக உள்ளது. ஆனால் சிகிச்சையின் வடிவில், இந்தப் பிரச்சனைகளுக்கு நம்மிடம் தீர்வுகள் உள்ளன" என்று குழந்தைகளைப் பெற முயற்சிக்கும் தம்பதிகளுக்கு வாடகைத் தாய் முறை எவ்வாறு அதிசயமாக இருக்கும் என அவர் தெரிவித்திருந்தார்.

5. கரண் ஜோஹர்

பாலிவுட்டில் இயக்குநர்-தயாரிப்பாளராக வலம் கரண் ஜோஹர் திருமணம் செய்துகொள்ளாமலே, கடந்த 2017-ம் ஆண்டு, வாடகைத் தாய் முறை மூலம், ஆண்-பெண் என இரட்டை குழந்தைகளுக்கு அப்பாவானர். தனது ஆண் குழந்தைக்கு யாஷ் என்றும், பெண் குழந்தைக்கு ரூஹி ஜோஹர் என்றும் பெயரிட்டுள்ளார். கரண் ஜோஹர் தாம் தந்தையாக மாறியது தனது வாழ்க்கையை மாற்றிவிட்டது என்று பல சந்தர்ப்பங்களில் கூறியுள்ளார். இரட்டை குழந்தைகள் இருவரையும் வளர்ப்பதற்கு கரண் ஜோஹரின் தாயார் ஹிரூ ஜோஹர், அவருக்கு உதவி புரிந்து வருகிறார்.

6. துஷார் கபூர்

பாலிவுட்டின் பழம்பெரும் நடிகரான ஜீதேந்திரா மற்றும் ஷோபா கபூரின் மகன் துஷார் கபூர். இவர், திருமணம் செய்துகொள்ளாமலேயே வாடகைத் தாய் முறையை தேர்ந்தெடுத்து குழந்தை பெற்றுக்கொண்டார். கடந்த ஜூன் 2016-ம் ஆண்டு பிறந்த தனது ஆண் குழந்தைக்கு லக்ஷ்யா என்று, துஷார் கபூர் பெயரிட்டுள்ளார்.

7. ஏக்தா கபூர்

தனது சகோதரர் துஷார் கபூரைப் போன்று, தயாரிப்பாளரான ஏக்தா கபூரும், கடந்த ஜனவரி 2019-ல் வாடகைத் தாய் மூலம் தனது மகன் ரவிக்கு ஒற்றைத் தாயானார்.

8. பிரீத்தி ஜிந்தா - ஜெனி குட்இனஃப்

பாலிவுட் நடிகையான பிரீத்தி ஜித்தா மற்றும் ஜெனி குட்இனஃப் தம்பதிக்கு வாடகைத் தாய் முறை மூலம், கடந்த வருடம் நவம்பர் மாதம் இரட்டை குழந்தை பிறந்தது. இந்த தம்பதிக்கு பிறந்த இரட்டை குழந்தைகளில், மகனுக்கு ஜெய் என்றும், மகளுக்கு ஜியா என்றும் பெயரிட்டுள்ளனர்.

9. சொஹைல்கான் - சீமா சச்தேவ் கான்

பாலிவுட்டின் நடிகர், இயக்குநர், எழுத்தாளர், தயாரிப்பாளர் என்று வலம் வரும் சொஹைல்கான், சீமா சச்தேவ் கான் என்பவரை கடந்த 1998-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு நிர்வான் கான் என்ற மகன் உள்ளார். முதல் குழந்தை நிர்வான் பிறந்து பத்து வருடங்கள் கழித்து, செயற்கை கருத்தரிப்பு, வாடகைத் தாய் முறை மூலம் யோகன் என்ற மகனை, கடந்த 2011-ம் ஆண்டு இந்த தம்பதி பெற்றெடுத்தனர். ஷாருக்கான் மற்றும் கௌரிகான் தம்பதிக்கு வாடகைத் தாய் முறையை அறிமுகப்படுத்தியதே, சொஹைல்கான் - சீமா சச்தேவ் கான் என்று தகவல்கள் கூறுகின்றன.

10. சன்னி லியோன் - டேனியல் வெபர்

மாடலும், பாலிவுட் நடிகையுமான சன்னி லியோன், கடந்த 2011-ம் ஆண்டு டேனியல் வெபர் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதி. நிஷா கௌர் வெபர் என்ற பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வந்தநிலையில், கடந்த 2018-ம் ஆண்டு வாடகைத் தாய் முறை மூலம் இரட்டை குழந்தை பெற்றெடுத்தனர். இந்த இரட்டை குழந்தைகளில் மகனுக்கு ஆஷர் சிங் வெபர் என்றும், மகளுக்கு நோவா சிங் வெபர் என்றும் பெயரிட்டுள்ளனர்.

11. ஸ்ரேயாஸ் தால்படே - தீப்தி தால்படே

இந்தி மற்றும் மராத்தி படங்களில் நடித்து வரும் ஸ்ரேயாஸ் தால்படேவுக்கு, வாடகைத் தாய் முறை மூலம் ஆத்யா என்ற பெண் குழந்தை கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் பிறந்தது. ஸ்ரேயாஸ் தால்படே - தீப்தி தால்படே தம்பதிக்கு திருமணமாகி 14 ஆண்டுகள் கழித்து இந்த குழந்தை பிறந்தது குறிப்பிடத்தக்கது.

- சங்கீதா

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com