பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா தனது காதலரான அமெரிக்க பாப் பாடகர் நிக் ஜோனாசை இந்திய பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்து கொள்ள உள்ளதுதான் பாலிவுட்டின் ஹாட் டாப்பிக்காக வலம் வந்து கொண்டிருக்கிறது.
தமிழில் விஜய்க்கு ஜோடியாக‘தமிழன்’ என்ற படத்தில் நடித்த பிரியங்கா சோப்ரா தற்போது இந்தியில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். மேலும் குவாண்டிகா என்ற தொலைக்காட்சி தொடரில் பிரபலமாகி ஹாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார்.
அப்போது அமெரிக்க பாப் பாடகராக இருக்கும் நிக் ஜோனாசுடன் காதல் கொண்டு கடந்த ஜுலை மாதம் இருவருக்கும் மும்பையில் உள்ள பிரியங்கா சோப்ரா வீட்டில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
நிக் ஜோனாஸ் பிரியங்கா சோப்ராவை விட 10 வயது இளையவர். இவர்கள் திருமணம் டிசம்பர் மாதம் நடைபெறும் என ஏற்கனவே அறிவித்திருந்தனர்.
இந்நிலையில், இவர்களின் திருமண ஏற்பாடுகள் கோலாகலமாக ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன. கடந்த மாதம் இருவரும் ஜோத்பூர் சென்று திருமணம் நடக்க உள்ள கோட்டையை பார்வையிட்டனர். திருமணத்துக்கு பிறகு குடியேற கலிபோர்னியாவில் உள்ள பெவர்லி ஹில்ஸ் பகுதியில் ஆடம்பர வீடு ஒன்றை விலைக்கு வாங்கி உள்ளனர்.
இவர்களின் திருமண ஏற்பாடுகள் கடந்த நவம்பர் 29 ஆம் தேதி மெகந்தி விழாவுடன் ஆரம்பித்தது. அதைத்தொடர்ந்து நான்கு நாட்கள் நடைபெற உள்ளது. திருமணத்திற்காக இருவரும் ஜோத்பூர் சென்றுள்ளனர். நாளை இந்து பாரம்பரிய முறைப்படி ஜோத்பூர் உமைத் பவனில் திருமணம் நடைபெற உள்ளது. அதற்கு முன்பு கிரிஸ்துவ முறைப்படியும் திருமணம் நடைபெற உள்ளது.
இதனிடையே கடந்த செவ்வாய்கிழமை மும்பையில் உள்ள வீட்டில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பிரியங்கா சோப்ராவும் நிக் ஜோனாசும் இந்திய பாரம்பரிய முறையில் உடை அணிந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டது அனைவரையும் பிரமிப்பில் ஆழ்த்தியது.