பிரியங்காவின் செல்லத்துக்கு ரூ.1 லட்சத்தில் டிராவல் வீடு!
பிரியங்கா சோப்ராவை போலவே, அவரது செல்ல நாய் டயானாவும் பிரபலங்கள் லிஸ்டில் இருக்கிறது! அதற்காகவே, ’டைரி ஸ் ஆஃப் டயானா’ என்ற பக்கத்தை இன்ஸ்டாகிராமில் வைத்திருக்கிறார் பிரியங்கா. இதற்கு 93.5 ஆயிரம் பாலோயர்கள் இருக்கிறார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். அதில், ஏகப்பட்ட புகைப்படங்கள் பதிவேற்றப்பட்டிருக்கின்றன. பிரியங் காவின் அப்பா, அம்மாவுடன் விளையாடுவது, விதவிதமான அலங்காரங்களுடன் போஸ் கொடுப்பது என அந்த இன்ஸ்டா, டயானாவின் அடடே பக்கமாக மாறியிருக்கிறது!
சமீபத்தில் அமெரிக்க பாப் பாடகர் கம் நடிகர் நிக் ஜோனாஸை திருமணம் செய்துகொண்ட பிரியங்கா, இப்போது ’ஸ்கை இஸ் பிங்’ என்ற இந்தி படத்தில் நடித்துள்ளார். இவர் நடித்துள்ள ’இஸ் நாட் இட் ரொமான்டிக்’ என்ற ஹாலிவுட் படம், காதல் தினத் தன்று ரிலீஸ் ஆகிறது. இப்போது அமெரிக்காவின் நியூயார்க் நகரில் வசிக்கும் பிரியங்கா, தனது செல்லம் டயானாவுடனேயே ஷாப்பிங் செல்கிறார். நேரத்தை செலவழிக்கிறார்.
இதற்கிடையே, 35 ஆயிரம் ரூபாயில் ஸ்பெஷலாக வடிவமைக்கப்பட்ட உடை அணிந்த டயானா, சமீபத்தில் பரபரப்பாகச் செய்தியில் அடிபட்டது. இப்போது மீண்டும் செய்திக்குள் வந்திருக்கிறது!
தனது, இன்ஸ்டாகிராமில் ஒரு புகைப்படத்தைப் பதிவு செய்திருக்கிறார் பிரியங்கா சோப்ரா. அதில் அவரது செல்லம் டயானா, அழகான டிராவல் பை ஒன்றில் பத்திரமாக உட்கார்ந்தபடி பார்த்துக் கொண்டிருக்கிறது. ’’டயானாவுக்கான டிராவல் வீட்டை
(அப்படித்தான் சொல்கிறார்) அழகாக வடிவமைத்துக் கொடுத்த, மிமிக்கு நன்றி’’ என்று அதில் கேப்ஷன் கொடுத்திருக்கிறார் பிரியங்கா. இனி கையில் தூக்கிக்கொண்டு அலையாமல், டிராவல் வீட்டில் வைத்து பிரியங்கா அழைத்து செல்வார் என்கிறார்கள்.
டயானாவின் இந்த டிராவல் வீட்டுக்கான செலவு, ரூ.1 லட்சம்!