அல்லு அர்ஜூனின் ‘புஷ்பா 2’ படத்தில் பிரியாமணி? - வெளியான தகவல்

அல்லு அர்ஜூனின் ‘புஷ்பா 2’ படத்தில் பிரியாமணி? - வெளியான தகவல்
அல்லு அர்ஜூனின் ‘புஷ்பா 2’ படத்தில் பிரியாமணி? - வெளியான தகவல்

அல்லு அர்ஜூனின் ‘புஷ்பா 2’ படத்தில் நடிகை பிரியாமணி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜூன், பகத் பாசில், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் வெளியான திரைப்படம் ‘புஷ்பா: தி ரைஸ்’. செம்மரக் கடத்தலை மையமாகக் கொண்டு உருவான இந்தப் படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் திரையரங்குகளில் வெளியானது. முதலில் கலவையான விமர்சனங்களை பெற்ற இந்தப் படம் எதிர்பார்ப்புகளையும் மீறி வசூல் சாதனை புரிந்தது. குறிப்பாக பாலிவுட்டில் இந்தப் படம் பாக்ஸ் ஆபீஸில் வசூல் வேட்டை நடத்தியது.

அல்லு அர்ஜூனின் நடை, நடனம் ஆகியவற்றை இமிடேட் செய்து, ரசிகர்கள், கிரிக்கெட் மற்றும் பாலிவுட் பிரபலங்கள் சமூகவலைத்தளங்களில் வீடியோவாக வெளியிட்டது வைரலானது. படத்தின் பாடல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன. இதையடுத்து ‘புஷ்பா: தி ரூல்’ என்ற இரண்டாம் பாகம் உருவாக உள்ளது. இதற்கான கதை, திரைக்கதை பணிகள் முடிந்தநிலையில், தெலுங்கு திரையுலகில் தற்போது நடந்துவரும் வேலைநிறுத்தப் போராட்டத்தால் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தாமதாகியுள்ளது. ஆகஸ்ட் இறுதி அல்லது வேலைநிறுத்தப்போராட்டம் முடிவு பெற்றவுடன் ‘புஷ்பா: தி ரூல்’ படப்பிடிப்பு நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் பாகத்தில் ஏற்கெனவே நடிகர் விஜய்சேதுபதி நடிக்க உள்ளதாக தகவல் வெளியானநிலையில், தற்போது ‘பருத்தி வீரன்’ படத்திற்காக தேசிய விருது வென்ற பிரியாமணி இந்தப் படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. விஜய் சேதுபதியின் மனைவியாக முக்கிய கதாபாத்திரத்தில் பிரியாமணி நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. இதுகுறித்து விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com