முதல் படம் to நூறாவது படம்.. மீண்டும் இணைந்த பிரியதர்ஷன் - மோகன்லால் கூட்டணி! | Mohanlal
இந்திய சினிமாவின் மூத்த இயக்குநர்களில் ஒருவர் பிரியதர்ஷன். தற்போது இவர் தனது 100வது படத்தை இயக்க தயாராகிவிட்டார். 1984-இல் இவருடைய முதல் படமான 'பூச்சக்கொரு மூக்குத்தி' (Poochakkoru Mookkuthi) திரைப்படம் வெளியானது. அதன்பின் மலையாளம் மட்டுமல்லாது தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் பல படங்களை இயக்கினார். 42 வருட சினிமா பயணத்தில் 99 படங்களை இயக்கி முடித்துவிட்டார் பிரியதர்ஷன். இப்போது 100ஆவது படத்துக்கு தயாராகிவிட்டார்.
இதில் சுவாரஸ்யம் என்ன என்றால், பிரியதர்ஷன் முதல் படமான ’பூச்சக்கொரு மூக்குத்தி’ படத்தில் மோகன்லால் கதாநாயகனாக நடித்திருந்தார். தற்போது, பிரியதர்ஷனுடைய 100-ஆவது படத்திலும் நாயகன் மோகன்லால்தான். உலக சினிமா வரலாற்றில் இப்படியான சம்பவம் நடப்பது இதுவே முதல்முறை. பிரியதர்ஷன் - மோகன்லால் கூட்டணி, மல்லுவுட்டில் மிக முக்கியமான ஹிட் காம்போ. இந்தக் காம்போவில் இருந்து 40க்கும் மேற்பட்ட படங்கள் வெளிவந்திருக்கின்றன. இந்தக் கூட்டணி, கடைசியாக 2021-இல் வெளிவந்த 'மரக்கர்' படத்தில் இணைந்திருந்தது.
இத்திரைப்படம் குறித்தான அதிகாரபூர்வ அறிவிப்பை காணொளி வாயிலாக வெளியிட்டிருந்தனர். அதில் பேசிய பிரியதர்ஷன், "டிராமாவுடன் கூடிய சிறந்த பொழுதுபோக்குப் படமாக இது இருக்கும். மோகன்லால் போன்ற ஸ்டாருடன் படம் எடுப்பது ஆக்ஷன் இல்லாமல் இனி சாத்தியமில்லை. அதனால் அது நிச்சயமாக இருக்கும்" எனப் பேசியிருக்கிறார்.
அந்த வீடியோவை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்த மோகன்லால், "சில மைல்கற்கள் ஒரு நபருக்கு மட்டும் சொந்தமானவை அல்ல. அந்தப் பயணத்தை அருகில் நின்று பார்த்த அனைவருக்கும் சொந்தமானவை. என் அன்பான பிரியன் தனது 100ஆவது படத்திற்குள் அடியெடுத்து வைக்கிறார். இது எனக்கு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. நூறு படங்கள் என்பது வெறும் எண்ணிக்கை அல்ல. இந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக இருப்பது எனக்குப் பெருமை. சில தருணங்கள் விளக்கப்பட வேண்டியவை அல்ல. அது உணரப்பட வேண்டியவை மற்றும் நன்றியுடன் மனதில் நிறுத்தப்பட வேண்டியவை. பிரியதர்ஷன் உருவாக்கிய எல்லாவற்றுக்கும், இன்னும் சொல்லப்பட வேண்டிய கதைகளுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

