அஜித்திற்கு வில்லனாக மாறிய பிரசன்னா ? - ‘வலிமை’ அப்டேட்
அஜித்தின் ‘வலிமை’ படத்தில் நடிகர் பிரசன்னா வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கி வரும் திரைப்படம் ‘வலிமை’. இதில் கதாநாயகனாக அஜித் நடித்து வருகிறார். ‘நேர்கொண்ட பார்வை’யை அடுத்து அஜித் இப்படத்தில் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கியது. அதன்பின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு இன்னும் தொடங்கவில்லை. இதனிடையே அஜித், காஞ்சிபுரம் காவல்துறை அதிகாரிகளுக்கு குட்டி ஹெலிகாப்டர்களை இயக்க பயிற்சி கொடுத்ததாக கூறப்பட்டது. அதுதொடர்பான புகைப்படங்களும், சில தினத்திற்கு முன்பு சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவின.
இந்நிலையில் ‘வலிமை’யில் அஜித்திற்கு வில்லனாக நடிகர் பிரசன்னா நடிக்க உள்ளதாக தகவல் கசிந்துள்ளது. படக்குழு தன்னிடம் இது சம்பந்தமாக பேச்சுவார்த்தை நடத்தியதை பிரசன்னா உறுதி செய்துள்ளார். இது சம்பந்தமாக ஒருவர் ட்விட்டர் பக்கத்தில் பிரசன்னாவிடம் கேள்வி எழுப்பி இருந்தார். அதற்கு அவர், ‘இன்னும் உறுதியாகவில்லை. ஆகவே நான் காத்துக் கொண்டிருக்கிறேன்’ எனப் பதிலளித்துள்ளார். ஆகவே, பிரசன்னா நிச்சயம் ‘வலிமை’யில் நடிக்க இருக்கிறார் என அஜித் ரசிகர்கள் இப்போதே செய்தி பகிர ஆரம்பித்துவிட்டனர்.
ஏற்கெனவே அஜித்திற்கு ஜோடியாக யார் நடிப்பார் என்பது குறித்து பல்வேறு ஊகங்கள் வலம் வருகின்றன. யாமினி கவுதம் நடிக்க இருப்பதாகவும் அல்லது இலியானா டி’குருஸ் நடிக்கலாம் என்றும் கூறப்பட்டு வருகிறது. இதனிடையே கீர்த்தி சுரேஷ் பெயரும் அடிபட்டு வருகிறது. நடிகர் பிரசன்னா, அவரது ‘மாஃபியா’ படத்தின் வெளியீட்டிற்காக காத்துக் கொண்டிருக்கிறார். லண்டனில் நடந்து முடிந்த ‘துப்பறிவாளன்2’ படத்தின் படப்பிடிப்பை முடித்து கொடுத்துவிட்டு பிரசன்னா, சமீபத்தில்தான் வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.