அபுதாபியில் 60 நாள் கடும் சண்டை: திரும்பியது பிரபாஸின் 'சாஹோ' டீம்!
அபுதாபியில் 60 நாட்கள் நடந்த சண்டைக் காட்சிகளின் ஷூட்டிங்கை அடுத்து பிரபாஸின் சாஹோ டீம் இந்தியா திரும்பியுள்ளது.
’பாகுபலி’ மற்றும் ’பாகுபலி 2’ படங்களுக்காக 5 வருடங்களை செலவழித்த பிரபாஸ், இப்போது ’சாஹோ’வில் நடித்து வருகிறார். பிரமாண்ட ஆக்ஷன் படமான இதில் அவர் ஜோடியாக ஸ்ரத்தா கபூர் நடிக்கிறார். அருண் விஜய், நீல் நிதின் முகேஷ் வில்லன்களாக நடிக்கின்றனர். மற்றும் மந்திரா பேடி, ஜாக்கி ஷெராப் உட்பட பலர் நடிக்கின்றனர். மதி ஒளிப்பதிவு செய்கிறார். ஷங்கர் -எஹசான் -லாய் இசை அமைக்கின்றனர்.
சுஜித் இயக்கும் இந்தப் படம், தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாள மொழிகளில் உருவாகிறது. இந்தப் படத்துக்காக, ’டை ஹார்ட்’, ’டிரான்ஸ் பார்மர்ஸ்’ உட்பட பல ஹாலிவுட் படங்களில் பணியாற்றியுள்ள சண்டை இயக்குனர் கென்னி பேட்ஸ் சண்டை காட்சிகளை அமைக்கிறார். படத்தில் இடம்பெறும் முக்கிய சண்டைக்காட்சியை அபுதாபியில் கடந்த 60 நாட்களாக படமாக்கி வந்தனர்.
இதில் அருண் விஜய்யும் பங்குபெற்றார். இந்திய சினிமாவில் இதுவரை இடம்பெறாத வகையில் இந்த சண்டைக்காட்சி இருக்கும் என்று படக்குழு கூறியது. இந்த சண்டைக்காட்சியின் படப்பிடிப்பை முடித்துக்கொண்டு படக்குழு இந்தியா திரும்பியுள்ளது. இதன் மூன்றாவது கட்டப் படப்பிடிப்பு ஜூலை 11-ம் தேதி ஐதராபாத்தில் தொடங்குகிறது.