
பாகுபலி மற்றும் பாகுபலி 2 படங்களுக்காக 5 வருடங்களை செலவழித்த பிரபாஸ், தனது அடுத்த படமான ’சாஹோ’ படப்பிடிப்பில் நேற்று கலந்துகொண்டார். பிரமாண்ட ஆக்ஷன் படமான இதில் பிரபாஸ் ஜோடியாக இந்தி நடிகை ஸ்ரத்தா கபூர் நடிக்கிறார். நீல் நிதின் முகேஷ் வில்லன்.
தமிழ், தெலுங்கு, இந்தியில் உருவாகும் இந்தப் படத்தின் பட்ஜெட் ரூ.150 கோடி!படத்தை இயக்கும் சுஜீத் கூறும்போது, ’பிரபாஸ் இந்தப் படத்தின் ஷூட்டிங்கில் இணைந்துவிட்டார். அடுத்த 3 வாரங்களுக்கு தொடர்ந்து படப்பிடிப்பு நடக்கும். இந்தப் படத்தின் ஆக்ஷன் காட்சிகள் இதுவரை இந்திய சினிமா பார்க்காததாக இருக்கும். புதுமையாகவும் இருக்கும். பட்ஜெட்டில் பாதி ஆக்ஷன் காட்சிகளுக்கே செலவாக இருக்கிறது. ’டை ஹார்ட்’, ’டிரான்ஸ்பார்மர்ஸ்’ உட்பட பல ஹாலிவுட் படங்களில் பணியாற்றியுள்ள சண்டை பயிற்சியாளர் கென்னி பேட்ஸ் இந்தப் படத்தில் பணியாற்றுகிறார்.
படத்தின் முக்கியமான ஆக்ஷன் காட்சிகள் அபுதாபியின் உயரமான கட்டிடங்கள் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் படமாக்கப்பட இருக்கிறது’ என்றார்.