புதிய உச்சத்தில் பிரபாஸ்... ரூ.100 கோடி ஊதியம் பெறும் முதல் இந்திய நடிகர்?

புதிய உச்சத்தில் பிரபாஸ்... ரூ.100 கோடி ஊதியம் பெறும் முதல் இந்திய நடிகர்?
புதிய உச்சத்தில் பிரபாஸ்... ரூ.100 கோடி ஊதியம் பெறும் முதல் இந்திய நடிகர்?


அதிக வருவாய் ஈட்டும் திரைப்பட நட்சத்திரங்கள் பட்டியலில் புதிய உச்சத்தைப் பெறும் பிரபாஸ், புதிய படம் ஒன்றுக்காக ரூ.100 கோடி ஊதியம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகர் பிரபாஸ் சில ஆண்டுகளுக்கு தென்னிந்திய சினிமா ரசிகர்களுக்கு மட்டுமே பிரபலமான நடிகராக இருந்து வந்தார். ஆனால், 'பாகுபலி' அனைத்தையும் மாற்றியது. 'பாகுபலி' படத்தின் பிரமாண்ட வெற்றி, அவரை இந்தியா முழுவதும், இந்தியா தாண்டியும் அறியவைத்தது. இதனால் தற்போது தெலுங்கு, தமிழைத் தாண்டி இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் பிரபாஸுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது.

இதன் காரணமாக இப்போது தெலுங்கு மொழி மட்டும் இல்லாமல் தமிழ், இந்தி உட்பட இந்தியாவின் பல மொழிகளில் 'பான் இந்தியா' திரைப்படமாக தனது படங்களை எடுத்து வருகிறார். கடைசியாக வெளியான 'சாஹோ' இந்தியா முழுவதும் 'பான் இந்தியா' திரைப்படமாக வெளியானது. தற்போது நடித்து வரும் 'ரதே ஷ்யாம்', 'சலார்', 'ஆதிபுருஷ்' ஆகிய மூன்று படங்களும் கூட 'பான் இந்தியா' திரைப்படமாக தயாராகி வருகிறது. 'பாகுபலி' வெளியானதிலிருந்தே இந்திய சினிமாவில் பிரபாஸுக்கு நல்ல மவுசு இருந்து வருகிறதாக கூறப்படுகிறது.

அவரின் திரைப்படங்கள் மொழியைப் பொருட்படுத்தாமல், வடக்கு மற்றும் தெற்கு இரண்டிலும் சமமான நிலையில் படங்கள் ஓடும் ஒரு நிலையை எட்டியுள்ளன. அவரது கடைசி படமான 'சாஹோ' இந்தி சந்தைகளில் நன்றாகவே ஓடியது எனக் கூறப்படுகிறது. இதன் காரணமாக தற்போது ஒரு படத்துக்கு பிரபாஸ் ரூ.100 கோடி ஊதியம் பெறுகிறார் என 'பிங்க் வில்லா' தளம் செய்தி வெளியிட்டுள்ளது. பிரபாஸுக்கு நெருக்கமான வட்டாரம் சொன்ன தகவல்களின் அடிப்படையில் இந்தச் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

"பிரபாஸ் மட்டுமே இந்த அளவுக்கான ஊதியத்தை இன்று வாங்கும் நிலையில் இருக்கிறார். தனது தயாரிப்பாளர்களுக்காக அவர் அதிகம் சம்பாதித்து தருவதால் 100 கோடி என்பது அவருக்கு முற்றிலும் நியாயமானது" என்று அவருக்கு நெருக்கமான ஒருவர் பேசி இருக்கிறார். இதற்கிடையே, ரதே ஷ்யாம்', 'சலார்', 'ஆதிபுருஷ்' ஆகிய மூன்று படங்களைத் தாண்டி தீபிகா படுகோனே, அமிதாப் பச்சன் ஆகியோருடன் பெயரிடப்படாத படத்தில் பிரபாஸ் இணைய இருக்கிறார் என்று கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com