‘ராவணின் கர்வத்தை முறியடிக்க வேண்டும்’ - பிரபாஸின் ‘ஆதிபுருஷ்’ ட்ரெய்லர் வெளியீடு
“உண்மை உடனுக்குடன்” என்ற நோக்குடன் நடப்பு செய்திகளை நடுநிலையோடு விரைந்து தரும் தமிழகத்தின் முன்னணி செய்தித் தொலைக்காட்சியான “புதிய தலைமுறை”யின் டிஜிட்டல் கட்டுரைகளை ஆண்ட்ராய்டு செயலியில் பெற https://bit.ly/PTAnApp - பதிவிறக்கம் செய்க!
IOS செயலியை அப்டேட் செய்து கொள்ள https://bit.ly/PTIOSnew
வால்மீகி எழுதிய ராமாயணம் கதையை அடிப்படையாகக் கொண்டு, பிரம்மாண்ட பட்ஜெட்டில் மோஷன் கேப்சருடன் 3டி தொழில்நுட்பத்தில் உருவாகி வந்தப் படம் ‘ஆதிபுருஷ்’. இந்தப் படத்தில் ராமராக நடிகர் பிரபாஸும், ராவணனாக சயீஃப் அலிகானும், சீதாவாக கீர்த்தி சனானும், ராமரின் சகோதரர் லக்ஷமனாக சன்னி சிங்கும் நடித்துள்ளனர். கடந்த 2021-ம் ஆண்டு ஜனவரி முதல் நடைபெற்று வந்த இந்தப் படத்தின் படப்பிடிப்பு, அதே ஆண்டு நவம்பர் மாதத்துடன் நிறைவடைந்தது.
பின்னர் சிஜி பணிகள் நடைபெற்று வந்தநிலையில், அமீர்கானின் ‘லால் சிங் சத்தா’ படத்தால், கடந்த 2022-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலிருந்து, 2023-ம் ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் தேதி மாற்றப்பட்டது. இதனை முன்னிட்டு, படத்தின் டீசர் கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் அயோத்தியில் வெளியான நிலையில், சமூகவலைத்தளத்தில் கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. ‘ஆதிபுருஷ்’ படத்தில் கிராபிக்ஸ் பணிகள் சரியாக இல்லாததாக நெட்டிசன்கள் கடுமையாக விமர்சனம் செய்திருந்தனர். தொலைக்காட்சியில் வெளியாகும் புராணக் கதைகளே நன்றாக இருப்பதாகவும் ரசிகர்கள் கூறிவந்தனர். அத்துடன் ராமரை இந்தப் படத்தில் தவறாக சித்தரித்துள்ளதாக வட இந்தியாவில் சர்ச்சைகள் எழுந்தது.
இதையடுத்து, கிராபிக்ஸ் பணிகளை மேற்கொள்வதற்காக படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழுவினர் மாற்றினர். அதன்படி, வரும் 2023-ம் ஆண்டு ஜுன் 16-ம் தேதி ‘ஆதிபுருஷ்’ படம் வெளியிடப்படும் என்று அப்படத்தின் இயக்குநர் ஓம் ராவத் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்தார். மேலும், பார்வையாளர்களுக்கு முழுமையான காட்சி அனுபவத்தை அளிக்க, படத்தில் பணிபுரியும் டெக்னீஷியன்களுக்கு இன்னும் அதிக நேரம் கொடுக்க வேண்டி உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டு இருந்தார்.
இந்நிலையில், சிஜி பணிகள் மேற்கொள்ளப்பட்டு, இன்று ஹைதாராபாத் நகரில் ‘ஆதிபுருஷ்’ படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. 600 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக உள்ளதாக கூறப்பட்ட இந்தப்படம், கொரோனா ஊரடங்கு மற்றும் சிஜி பணிகள் காரணமாக 700 கோடி ரூபாய் வரை செலவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. மேலும், முன்பு வெளியான டீசரில் சிஜி பணிகள் சரியாக இல்லாத நிலையில், தற்போது வெளியிடப்பட்டுள்ள ட்ரெய்லரில் சிறப்பாகவே உள்ளதாக சினிமா ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் 5 மொழிகளில் படம் வெளியாகவுள்ளது.