\
ஜப்பானில் வெளியாகிறது பிரபாஸின் ’சாஹோ’!

ஜப்பானில் வெளியாகிறது பிரபாஸின் ’சாஹோ’!

ஜப்பானில் வெளியாகிறது பிரபாஸின் ’சாஹோ’!
Published on

பிரபாஸ் நடித்துள்ள அதிரடி ஆக்‌ஷன் படமான ’சாஹோ’, ஜப்பானிலும் வெளியாக இருக்கிறது. 

’பாகுபலி’ மற்றும் ’பாகுபலி 2’ படங்களுக்காக 5 வருடங்களை செலவழித்த பிரபாஸ், அடுத்து நடிக்கும் படம், ’சாஹோ’. பிரமாண்ட ஆக்‌ஷன் படமான இதில் அவர் ஜோடியாக இந்தி நடிகை ஸ்ரத்தா கபூர் நடிக்கிறார். அருண் விஜய், நீல் நிதின் முகேஷ் வில்லன்களாக நடிக்கின்றனர். மற்றும் மந்திரா பேடி, ஜாக்கி ஷெராப் உட்பட பலர் நடிக்கின்றனர். மதி ஒளிப்பதிவு செய்கிறார். ஷங்கர் -எஹசான் -லாய் இசை அமைக்கின்றனர்.

சுஜித் இயக்கும் இந்தப் படம், தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் மெகா பட்ஜெட்டில் உருவாகிறது. ’டை ஹார்ட்’, ’டிரான்ஸ்பார்மர்ஸ்’ உட்பட பல ஹாலிவுட் படங்களில் பணியாற்றியுள்ள கென்னி பேட்ஸ், இதன் சண்டை காட்சிகளை அமைத்துள்ளார். படத்தில் இடம்பெறும் முக்கிய சண்டைக்காட்சியை அபுதாபியில் 60 நாட்களாக படமாக்கியுள்ளனர். இந்திய சினிமாவில் இதுவரை இடம்பெறாத வகையில் இந்த சண்டைக் காட்சி இருக்கும் என்று படக்குழு கூறியுள்ளது.

இந்நிலையில் பிரபாஸின் 39 பிறந்த நாளின் போது ’சாஹோ’ படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. ’ஷேட்ஸ் ஆஃப் சாஹோ’ என்று பெயரிடப்பட்ட அந்த டீசர் ரசிகர்களிடையே பலத்த வரவேற்பை பெற்றது. இந்திய ரசிகர்கள் மட்டுமல்லாது, ஜப்பானிய ரசிகர்களையும் அது கவர்ந்தது.

 பிரபாஸ் நடித்த பாகுபலி உள்ளிட்ட படங்கள் ஜப்பானிலும் வரவேற்பை பெற்றுள்ளதால், ஜப்பானிலும் டீசருக்கு வரவேற்பு கிடைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே ஜப்பான் ரசிகர்களையும் சந்திக்க திட்டமிட்டிருந்தார் பிரபாஸ். 

இந்நிலையில் ’சாஹோ’ படம் ஜப்பான் மொழியில் டப் செய்யப்பட்டு அங்கு ரிலீஸ் செய்யப்படுகிறது. இந்தப் படத்தை ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. ஒரே நாளில் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் படம் வெளியாகும். இந்த வருட இறுதியில் ஜப்பான் மொழியில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட இருக்கிறது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனப் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com