ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் முதல் தமிழ் படம்..‘பொன்னியின் செல்வன்-1’ படத்தின் மாஸ் அறிவிப்பு

ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் முதல் தமிழ் படம்..‘பொன்னியின் செல்வன்-1’ படத்தின் மாஸ் அறிவிப்பு
ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் முதல் தமிழ் படம்..‘பொன்னியின் செல்வன்-1’ படத்தின் மாஸ் அறிவிப்பு

ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கல்கியின் நாவலான ‘பொன்னியின் செல்வன்’ கதையை, அதே பெயரில் திரைப்படமாக எடுத்து வருகிறார் மணிரத்னம். இவரது கனவுப் படமான இந்த திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகி வருகிறது. இதில் முதல் பாகம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வருகிற செப்டம்பர் 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்தப் படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், பார்த்திபன், ஜெயராம், பிரபு, ரகுமான், விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா லக்ஷ்மி, நிழல்கள் ரவி, சரத்குமார், ஷோபிதா, பிரகாஷ்ராஜ் உள்பட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப்படத்திற்கு இசையத்துள்ளார். பெரும் பொருட்செலவில் லைகா நிறுவனம், மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸுடன் இணைந்து இந்தப் படத்தை தயாரித்து வருகிறது. ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். சமீபத்தில் 9-வது முறையாக தேசிய விருது வென்ற ஸ்ரீகர் பிரசாத் இந்தப் படத்திற்கு படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார். ஏற்கனவே படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.

இதற்கிடையில், சென்னையில் செப்டம்பர் 6-ம் தேதியும், ஹைதராபாத்தில் 8-ம் தேதியும் இசை மற்றும் ட்ரெயிலர் வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது. சென்னையில் நடைபெறும் விழாவில் நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகியோர் பங்கேற்பார்கள் என்றும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு ட்ரெய்லரை வெளியிடுவார் எனவும் தகவல் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், ஐமேக்ஸில் வெளியாகும் முதல் தமிழ் திரைப்படம் என்கிற அறிவிப்புடன், இந்தப்படத்தை ஐமேக்ஸ் திரையரங்குகளில் கண்டுகளிக்கலாம் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. அதாவது வழக்கமான திரையரங்குகளில் நாம் சென்று பார்ப்பதைவிடவும், மிகவும் துல்லியமாகவும், மிகப் பெரியதாகவும், அதிக ஒலி, ஒளி தரத்தில் காட்சிகளை கண்டுக்களிக்க முடியும். ஹாலிவுட் படங்கள் பெரும்பாலும் இந்த தொழில்நுட்பத்தில் தான் உருவாகி இருக்கும். இந்தியாவில் ‘தூம் 3’, ‘பேங்க் பேங்க்’, ‘பாகுபலி 2’ (1.90:1 aspect ratio), ‘பத்மாவத்’, ‘கே.ஜி.எஃப் 2’, ‘ஆர்.ஆர்.ஆர்.’, ‘லால் சிங் சத்தா’, ‘சாஹோ’ உள்ளிட்ட ஒருசில படங்களே இந்த தொழில்நுட்பத்தில் வெளியாகியுள்ளன. இந்தியாவில் குறிப்பிட்ட திரையரங்குகளே உள்ள நிலையில், இந்த திரையரங்குகளில் டிக்கெட்டின் விலையும் அதிகம்.

மேலும் இயக்குநர் அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த ‘பிகில்’ திரைப்படம் தான் ஐமேக்ஸ் திரையரங்கில் வெளியான முதல் தமிழ்த் திரைப்படம். ஆனால், அந்தப் படம் ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்படாதநிலையில், ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ளதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com