ஆசிய திரைப்பட விருதுகள்-‘பொன்னியின் செல்வன்’, ‘ஆர்ஆர்ஆர்’ எந்தெந்த பிரிவுகளில் பரிந்துரை?

ஆசிய திரைப்பட விருதுகள்-‘பொன்னியின் செல்வன்’, ‘ஆர்ஆர்ஆர்’ எந்தெந்த பிரிவுகளில் பரிந்துரை?
ஆசிய திரைப்பட விருதுகள்-‘பொன்னியின் செல்வன்’, ‘ஆர்ஆர்ஆர்’ எந்தெந்த பிரிவுகளில் பரிந்துரை?

16-வது ஆசிய திரைப்பட விருதுகளுக்கு மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’  முதல் பாகம் 6 பிரிவுகளுக்கும், ராஜமௌலியின் ‘ஆர்.ஆர்.ஆர்.’ படம் 2 பிரிவுகளின் கீழும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

கடந்த வருடம் தென்னிந்திய சினிமாவுக்கு மிகப் பெரிய ஜாக்பாட் காலம் என்றே கூறலாம். ஏனெனில், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியானப் படங்களில் பலப் படங்கள் நல்ல வசூலை ஈட்டின. குறிப்பாக, ராஜமௌலியின் ‘ஆர்.ஆர்.ஆர்.’, யாஷின் ‘கே.ஜி.எஃப். 2’, கமல்ஹாசனின் ‘விக்ரம்’, மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’, ரிஷப் ஷெட்டியின் ‘காந்தாரா’ உள்ளிட்டப் படங்கள் எல்லாம் 400 கோடி ரூபாய் வசூலை தாண்டிய அதேவேளையில், ‘லவ் டுடே’, ‘777 சார்லி’, ‘கார்த்திகேயா 2’, ‘சர்தார்’, ‘திருச்சிற்றம்பலம்’ உள்ளிட்டப் படங்கள் எல்லாம் 100 கோடி ரூபாய் வசூலைப் பெற்றிருந்தன.

இதனால் இந்தியாவையும் தாண்டி சர்வதேச அளவில் தென்னிந்தியப் படங்களின் மீதான கவனம் பார்வையாளர்களை ஈர்க்க செய்தது. இந்நிலையில், ஹாங்காங்கில் நடைபெற இருக்கும் 16-வது ஆசிய திரைப்பட விருதுகளில் மணிரத்னம் இயக்கிய ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் முதல் பாகம் 6 பிரிவுகளில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

ஆசிய பிலிம் விருதுகள் அகாடெமி, 16-வது ஆசிய திரைப்பட விருதுகளுக்கான செய்தியாளர்கள் சந்திப்பை நேற்று நடத்தியது. இதில் ஆசிய திரைப்பட விருதுகளின் போட்டிப்பிரிவில் பரிந்துரை செய்யப்பட்ட படங்கள் மற்றும் கலைஞர்களின் விவரங்களை பரிந்துரைக் குழு அறிவித்தது. அதன்படி மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் முதல்பாகம், சிறந்த படம், சிறந்த ஒரிஜினல் இசை (ஏ.ஆர்.ரஹ்மான்), சிறந்த படத்தொகுப்பு (ஸ்ரீகர் பிரசாத்), சிறந்த ஒளிப்பதிவு (ரவி வர்மன்), சிறந்த கலை இயக்குனர் (தோட்டா தரணி), சிறந்த உடை அலங்காரம் (ஏகா லஹானி) உள்ளிட்ட 6 பிரிவுகளில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இதேபோல் எஸ்.எஸ். ராஜமெளலியின் ‘ஆர்.ஆர்.ஆர்.’ திரைப்படம், சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் (ஸ்ரீனிவாஸ் மோகன்), சிறந்த ஒலி (அஷ்வின் ராஜசேகர்) இரண்டு பிரிவுகளில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து கடந்த வருடம் ஏராளமான திரைப்படங்கள் வெளிவந்தாலும், இந்த இரண்டு படங்கள் மட்டுமே நாமினேஷன் பட்டியலுக்கு தேர்வாகியுள்ளன. வருகிற மார்ச் 12-ம் தேதி ஹாங்காங்கில் உள்ள ஹாங்காங் பேலஸ் மியூசியத்தில் இரவு 7.30 மணிக்கு விருதுகள் வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com