‘பொன்மகள் வந்தாள்’ - திரைவிமர்சனம்

‘பொன்மகள் வந்தாள்’ - திரைவிமர்சனம்
‘பொன்மகள் வந்தாள்’ - திரைவிமர்சனம்

பொது முடக்கம் காரணமாக திரையரங்குகள் செயல்படாமல் இருப்பதால் ஜோதிகா நடித்துள்ள ‘பொன்மகள் வந்தாள்’ திரைப்படம் இன்று அமேசான் தளத்தில் வெளியாகியுள்ளது. இப்படத்தில் இயக்குநர் பாக்யராஜ், பார்த்திபன், பாண்டியராஜன், தியாகராஜன், பிரதாப் போத்தன், ஜோதிகா உள்ளிட்ட பிரபலங்கள் நடித்துள்ளனர். இப்படத்தை ஜேஜே ப்ரட்ரிக் இயக்கியிருக்கிறார்.

குழந்தைகளைக் கடத்தி கொலை செய்யும் வடநாட்டு சைக்கோ பெண் ஒருவர், போலீசாரால் என்கவுண்ட்டர் செய்யப்படுகிறார். ஆனால் அதற்குபின் இருக்கும் உண்மைக் காரணம் வேறு. அது என்ன என்பதும் அதனையொட்டிய திருப்புமுனைக் காட்சிகளும்தான் ‘பொன்மகள் வந்தாளின்’திரைக்கதை.

குழந்தைகளை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்யும் ஊட்டியைச் சேர்ந்த இருவரை பெண் ஒருத்தி சுட்டுக் கொன்று விடுகிறாள். கொல்லப்பட்ட குற்றவாளி அந்த ஊரின் பெரும் புள்ளியான வரதராஜனின் (தியாகராஜன்) மகன். இந்த சம்பவம் 2004’ல் நடக்கிறது. பிறகு அந்த வழக்கு அப்போதே முடித்து வைக்கவும்படுகிறது.

பிறகு 15 ஆண்டுகள் கழித்து அவ்வழக்கில் மறு விசாரணை கோரும் வெண்பா (ஜோதிகா) ஒரு வழக்கறிஞராக தானே அவ்வழக்கை எடுத்து நடத்துகிறார். அவ்வழக்கும் பல முடிச்சுகளை அவிழ்க்கிறது. ஜோதிகாவிற்கு எதிராக வழக்காடும் கதாபாத்திரத்தில் பிரபல வக்கீலாக பார்த்திபன் நடித்திருக்கிறார். கதை எடுத்துக்கொண்ட கரு வலிமையானது என்பதிலும் இன்றைய சூழலுக்கு விவாதிக்க அவசியமானது என்பதிலும் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் அதனை அழுத்தமாக விவாதத்திற்கு உட்படுத்தாமல் மெத்தனமாக இயக்குநர் கடந்து போயிருப்பதுபோல் தெரிகிறது. முதல் பாதியில் கதையை இன்னும் தெளிவாகவும், வேகமாவும் கூறியிருக்கலாம் என்பது பார்வையாளர்களின் எதிர்பார்ப்பு. அதேசமயம், இரண்டாம் பாதியில் குழப்பங்களையும், சந்தேகங்களையும் தீர்த்துக் கொள்ள படத்தின் இறுதிவரை காத்திருக்க வேண்டிய சூழல் இருக்கிறது. இது, பார்வையாளர்களுக்கு மனச் சோர்வைக் கொடுக்கிறது.

1970 - 80’களின் திரைப்படங்களில் வருவது போன்ற நீதிமன்ற காட்சிகள், மனதில் ஒட்டாத கோவிந்த் வசந்தாவின் இசை, இப்படத்தின் பாடல் வரிகள், திரைக்கதை என எல்லாமே சராசரி ரகம் தான். அரைத்த மாவையே புது மிக்ஸியில் அரைத்திருக்கிறார்கள். ராம்ஜி தன் ஒளிப்பதிவின் மூலம் ஊட்டியின் க்ளைமேட்டை அழகாக நமக்கு கடத்துகிறார். ஆனாலும் ஏனோ கொஞ்சம் அலட்சியமாக இப்படத்தினை அவர் கையாண்டிருப்பது போல உணரமுடிகிறது. என்றாலும் கதைக்குத் தேவையான ஒளிப்பதிவை அவர் நிறைவாகவே கொடுத்திருக்கிறார்.



சினிமா வடிவமாக இந்தக் கதை வொர்க்கவுட் ஆகவில்லை என்பதுபோல தெரிந்தாலும், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறித்து ஒரு கலைப் படைப்பு பேசத் துவங்கியிருப்பதை இருகரம் பற்றி ஆதரிக்க வேண்டியது நமது கடமை. வழக்கமாக ஜோதிகாவின் நடிப்பு ஓவர் ஆக்டிங் என விமர்சிக்கப்படும். ஆனால் இப்படத்தில் சரியான மீட்டரில் தனது நடிப்பை அவர் வழங்கியிருக்கிறார். சரியாகச் சொல்லவேண்டும் என்றால் அக்கதாபாத்திரத்தில் சரியாக பொருந்தி கெத்து காட்டியிருக்கிறார் அவர். குரு சிஷ்யர்கள் பாக்யராஜ், பார்த்திபன் இருவரின் கவுண்ட்டர் வசனங்கள் நன்றாக வொர்க் அவுட் ஆகியிருக்கிறது. பாண்டியராஜனின் கதாபாத்திரம் அவசியமற்றது. படத்தின் குறைகளைக் கடந்து இன்றைய சூழலில் ஒரு பெரிய படம் OTT'ல் வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்க நிகழ்வு எனலாம். இது எதிர்கால இந்திய சினிமாவின் போக்கை நிர்ணயம் செய்யப்போகும் முக்கிய நாளும் கூட.


‘பொன்மகள் வந்தாள்’ ஜொலிக்கத் தவறிய தேவதை.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com