அரசியல் படங்களில் தனிமனித தாக்குதல் கூடாது... ஆர்.கே.செல்வமணி
அரசியல் ரீதியான படங்களில் தனிமனித தாக்குதல் இருக்கக்கூடாது என ஃபெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், சமூக அக்கறையுள்ள சில படைப்பாளிகள் சமூகத்தில் ஏற்படுகின்ற சில குறைகளையும், தவறுகளையும் சுட்டிக்காட்டி திரைப்படங்கள் எடுப்பது அரிய நிகழ்ச்சி அல்ல எனத் தெரிவித்துள்ளார்.
சர்கார் திரைப்படத்தின் சர்ச்சைக்குரிய காட்சிகள் இருப்பதாகவும், அதனால் சிலர் திரைப்பட பேனர்களை கிழிப்பதும், திரையரங்குகளில் சட்ட ஒழுங்கை குலைப்பதும் ஏற்புடைய செயல் அல்ல எனத் தெரிவித்துள்ள செல்வமணி, எந்த ஒரு குடிமகனும் எளிதில் சந்தித்து குறைகளை தெரிவிக்க கூடிய அரசாக தற்போதைய அரசு உள்ளது எனக் கூறியுள்ளார்.
மேலும், தனிமனித காழ்ப்புணர்ச்சி கருத்துகள் இல்லாமல் திரைப்படங்கள் இயக்குவது கருத்து சுதந்திரத்திற்கும், திரைப்படத்துறைக்கும் நன்மை பயக்கும் எனவும் ஆர்.கே.செல்வமணி கூறியுள்ளார்.
முன்னதாக சர்கார் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இருப்பதாக கூறி அதிமுகவினர் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதன் தொடர்ச்சியாக படத்தில் இருந்து சர்ச்சைக்குரிய காட்சிகளை படக்குழு நீக்கியது. இதனால் தற்போது பிரச்னை முடிந்துவிட்டதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.