பிக் பாஸ் சர்ச்சை... கமல் வீட்டின் முன் போலீசார் குவிப்பு
நடிகர் கமல்ஹாசன் வீட்டை இந்து மக்கள் கட்சியினர் முற்றுகையிடப்போவதாக தகவல் வெளியாகி உள்ளதால் அவரது வீட்டின் முன்பாக காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதேபோல் விஜய் தொலைக்காட்சி அலுவலகம் முன்பாகவும் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
கமல் நடத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தடை கோரியும், கமலை கைது செய்யக் கோரியும் இந்து மக்கள் கட்சியினர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் சில தினங்களுக்கு முன் மனு அளித்தனர். சமூகச்சீர்கேடுகளை விளைவிக்கும் வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சி உள்ளதாகவும், தமிழ்தாய் வாழ்த்தை கேலி செய்யும் வகையில் நிகழ்ச்சி இருந்ததாகவும் அந்தப்புகாரில் கூறப்பட்டு இருந்தது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த கமல்ஹாசன், அவர்கள் தன்னை சிறையில் போட்டுப்பார்க்க வேண்டும் என விரும்புகிறார்கள். அவர்களும் என் ரசிகர்கள்தான். அதே சமயத்தில் என்னை கைது செய்யச் சொல்லும் கூட்டத்திற்கு பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் இல்லை. கைது செய்வோம் என்றால் அது நடக்கட்டும். சட்டம் என்னைப் பாதுகாக்கும். முத்தக்காட்சியில் சீரழியாத சமூகம் பிக்பாஸில் சீரழிந்து விடுமா? எனக் கேள்வி எழுப்பி இருந்தார். இதனையடுத்து இந்து மக்கள் கட்சியினர் கமல்ஹாசன் வீட்டை முற்றுகையிடப்போவதாக தகவல் பரவியதால் அவரது வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.