’இப்படி பண்ணிட்டாரே...’ நடிகர் சுதீப் மீது மோசடி புகார்!
வாடகை பாக்கி தரவில்லை எனக்கூறி நடிகர் சுதீப் மீது, போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
கன்னட நடிகர் சுதீப், டிவி சீரியல் ஒன்றைத் தயாரித்துவருகிறார். இதன் படப்பிடிப்பு சிக்கமகளூரு மாவட்டம் மல்லந்தூர் அருகே உள்ள பைகூர் கிராமத்தில் நடத்த திட்டமிடப்பட்டது. அங்கு தீபக் என்பவருக்கு சொந்தமான காபி தோட்டத்தில் இருக்கும் பண்ணை வீட்டை படப்பிடிப்புக்கு தேர்வு செய்தனர். அதற்கு வாடகையாக நாளொன்றுக்கு ரூ.6 ஆயிரம் கொடுப்பதாகக் கூறினர். தீபக் ஒப்புக் கொண்டார். இதையடுத்து படப்பிடிப்பு நடந்தது. பின்னர் அங்கு வந்த சுதீப், எங்கள் டீம் தங்குவதற்கு இந்த இடம் போதுமானதாக இல்லை. அதனால் நீங்கள் இங்கே கட்டிடம் கட்டித்தாருங்கள் என்று கேட்டாராம்.
இதையடுத்து தனது தோட்டத்தில் பயிரிடப்பட்டிருந்த பயிர்ச் செடிகளை அழித்துவிட்டு ஒரு பெரிய கட்டிடத்தை கட்டித் கொடுத்துள்ளார். அங்கு படப்பிடிப்பு நடந்து முடிந்தது. பின்னர் தீபக்கின் வீட்டில் இருந்து அனைவரும் சென்றுவிட்டனர். தீபக்கிற்கு சேர வேண்டிய ரூ.1.5 லட்சம் வாடகை பாக்கியை தரவில்லையாம். இதுபற்றி சீரியல் இயக்குனரிடம் கேட்டார் தீபக். நீங்கள், சுதீப்பிடம்தான் கேட்க வேண்டும் என்று கூறிவிட்டார் அவர். பிறகு தீபக் பல்வேறு முயற்சிக்குப்பின் சுதீப்பை தொடர்பு கொண்டு குறித்து கேட்டதாகத் தெரிகிறது. அவர் சரியாகப் பதில் சொல்லவில்லையாம். இதையடுத்து சிக்கமகளூரு மாவட்ட போலீஸ் எஸ்.பியிடம் தீபக் புகார் செய்தார்.