'Maa Vande' | பிரதமர் மோடியின் பயோபிக்.. உன்னி முகுந்தன் நடிப்பில் வெளியான புது அப்டேட்!
பிரதமர் நரேந்திர மோடியின் பயோபிக் பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது. இன்று, அவரது பிறந்தநாளையொட்டி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் `மா வந்தே' என்ற படத்தின் தலைப்பும் வெளியிடப்பட்டுள்ளது.
பிரதமர் மோடியின் சிறுவயது முதல் தேசத்தின் தலைவரான வரலாற்றையும், உண்மைச் சம்பவங்களையும் அடிப்படையாகக் கொண்டு அவருடைய பயோபிக் பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது. இந்த நிலையில், அவரது பிறந்தநாளையொட்டி இன்று படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் `மா வந்தே' என்ற தலைப்பும் வெளியிடப்பட்டுள்ளது. குறிப்பாக, மோடிக்கு எப்போதும் ஆதரவாக இருந்த அவரின் தாயார் ஹீராபென் மோடியுடனான ஆழமான பந்தத்தை இத்திரைப்படம் பதிவு செய்ய உள்ளது.
இப்படத்தில் நரேந்திர மோடியாக பிரபல மலையாள நடிகர் உன்னி முகுந்தன் நடிக்கிறார். படத்திற்கு `கேஜிஎஃப்', `சலார்' போன்ற படங்களுக்கு இசையமைத்த ரவி பஸ்ரூர் இசையமைக்க, `நான் ஈ', `பாகுபலி', `RRR' போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த கே.கே.செந்தில் குமார் ஒளிப்பதிவு செய்கிறார். கிராந்தி குமார் இயக்கும் இப்படம் சர்வதேச தரத்திலும், VFX தொழில் நுட்பங்களுடனும், இந்தியாவின் முன்னணி நுட்ப நிபுணர்களின் பங்களிப்புடனும் உருவாக்கப்படுகிறது. பான்-இந்தியா அளவில் இந்திய மொழிகள் அனைத்திலும் வெளியீடு செய்யப்படுவதோடு, ஆங்கிலத்திலும் தயாரிக்கப்படுகிறது.
இதற்கு முன்பு மோடியின் குழந்தைப் பருவத்தை மையமாக வைத்து `Chalo Jeete Hain' என்ற குறும்படம் 2018ல் வெளியானது, அரசியல் வாழ்க்கையை மையமாகக் கொண்டு விவேக் ஓபராய் நடிப்பில் `PM Narendra Modi' படம் 2019இல் வெளியானது. அதே ஆண்டில் அவரது இளமைக்கால வாழ்க்கையை மையமாக வைத்து `Modi: Journey of a Common Man' என்ற வெப் சீரிஸ் வெளியானது. இவற்றைத் தொடர்ந்து இப்போது `Maa Vande' படத்தில் மோடியின் ஆரம்ப காலம் மற்றும் அம்மாவுடனான அவரது பாசத்தை பற்றிச் சொல்ல இருக்கின்றனர்.