கேரளா ஸ்டோரிக்கு தேசிய விருது
கேரளா ஸ்டோரிக்கு தேசிய விருதுfb

கேரளா ஸ்டோரி படத்துக்கு தேசிய விருது கொடுப்பதா?? கடும் கண்டனம் தெரிவித்த பினராயி விஜயன்!

தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்காக தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளதற்கு, கேரள முதல்வர் பினராயி விஜயன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
Published on

தி கேரளா ஸ்டோரி’ படத்தை இயக்கிய சுதிப்தோ சென்னுக்கு சிறந்த இயக்குநருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டதற்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஆண்டுதோறும் மத்திய அரசு தேசிய திரைப்பட விருதுகள் வழங்கி, திரைக்கலைஞர்களை கெளரவித்து வருகிறது. அந்த வகையில், 2023ஆம் ஆண்டுக்கான 71வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டன.

இதில் சிறந்த திரைப்படமாக ‘12த் ஃபெயில்’ தேர்வு செய்யப்பட்டுள்ளது ’பார்க்கிங்’ திரைப்படம் 3 விருதுகளை அள்ளியுள்ளது. மேலும், சிறந்த இசையமைப்பாளர் விருது ’வாத்தி’ படத்திற்காக ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த துணை நடிகை விருது, ’உள்ளொழுக்கு ’ படத்திற்காக நடிகை ஊர்வசிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய இந்தித் திரைப்படமான கேரளா ஸ்டோரிக்கு இரண்டு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சிறந்த இயக்குநருக்கான விருது ‘கேரளா ஸ்டோரி’ படத்துக்காக சுதிப்தோ சென்னுக்கும் சிறந்த ஒளிப்பதிவுக்கான விருது பிரசாந்தனு மொகாபத்ராவுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியிருப்பதாவது: “கேரளாவின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கத்துடன் தவறான தகவல்களை பரப்பி, வகுப்புவாத வெறுப்பை விதைக்கும் ஒரு திரைப்படத்தை கவுரவிப்பதன் மூலம், தேசிய விருதுகள் நடுவர் குழு, சங்பரிவாரின் பிளவுபடுத்தும் சித்தாந்தத்தில் வேரூன்றிய ஒரு கதைக்கு சட்டபூர்வ அங்கீகாரத்தை வழங்கியுள்ளது.

வகுப்புவாத சக்திகளுக்கு எதிராக எப்போதும் நல்லிணக்கம் மற்றும் எதிர்ப்பின் கலங்கரை விளக்கமாக நிற்கும் நிலமான கேரளாவுக்கு, இந்த முடிவு மிகப்பெரிய அவமானத்தை தந்துள்ளது. மலையாளிகள் மட்டுமல்ல, ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்ட அனைவரும், அரசியலமைப்பு மதிப்புகளைப் பாதுகாக்க தங்கள் குரலை எழுப்ப வேண்டும்” இவ்வாறு பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com