‘வில்லன்’ கெட் அப்பில் ‘வலிமை’ அஜித் - ரசிகர்கள் புதிய உற்சாகம்
அஜித்தின் புதிய புகைப்படங்கள் மற்றும் ஒரு வீடியோ பதிவும் சமூக வலைத்தளத்தில் வைரலாக மாறி வருகிறது.
‘வலிமை’ படப்பிடிப்பின் போது அஜித், சின்ன பைக் விபத்தில் சிக்கினார். ஆனால் அவருக்கு காயம் ஒன்றும் பெரிதாக ஏற்படவில்லை. இருப்பினும் படப்பிடிப்பை மீண்டும் தொடங்குவதற்கு முன்பு சில நாட்கள் ஓய்வு எடுத்துக் கொள்ளுமாறு மருத்துவர்கள் அஜித்திற்கு அறிவுரை கூறியிருந்தனர். ஆகவே அவர் படப்பிடிப்பில் பங்கேற்காமல் இருந்து வந்தார். இடையில் அவர் கல்லூரி மாணவர்களுக்கு ஆள் இல்லாத குட்டி ஹெலிகாப்டர் தயாரிப்பது குறித்து கற்று தந்ததாகத் தகவல் வெளியானது.
இந்நிலையில் இப்போது சமூக வலைத்தளத்தில் அஜித் ஒரு விழாவில் கலந்து கொண்ட புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. மேலும் அவற்றுடன் ஒரு குட்டி வீடியோ பதிவும் வலம் வருகிறது. அதில் அஜித்திடம் ஒருவர் ஏதோ விளக்கம் அளிப்பதைபோல் உள்ளது. அவருக்கு காயம் ஏற்பட்டதற்குப் பிறகு அவர் முதன்முறையாக ஒரு பொது விழாவில் கலந்து கொள்கிறார். ஆகவே அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் உற்சாகமாகியுள்ளனர்.
மேலும் அந்தப் புகைப்படங்களில் அஜித், மிகவும் இளமையான தோற்றத்தில் இருக்கிறார். அதாவது தாடி இல்லாமல் அவரது தலைமுடி கருப்பாக இருக்கிறது. இந்தப் படங்கள் வெளியான சில மணிநேரத்திற்குள் அவரது ரசிகர்கள் போஸ்டர் தயாரித்து வலைத்தளத்தில் பதிவேற்றி உள்ளனர். கோட் சூட் உடையில் அஜித் தனது பழைய கெட் அப்-பிற்கு திரும்பி உள்ளதாகப் பலர் கருத்திட்டு வருகின்றனர். சிலர் 18 ஆண்டுகளுக்கு முன் வெளியான ‘வில்லன்’ தோற்றத்துடன் ஒப்பிட்டு கருத்து கூறி வருகின்றனர்.
கடந்த சில தினம் முன்பு ஒரு விருது விழாவில் பேசிய ‘வலிமை’ தயாரிப்பாளர் போனி கபூர், அஜித் குறித்து சில கருத்துகளை பகிர்ந்து கொண்டிருந்தார். அப்போது அவர், “அஜித்தின் சாகசத்தை இந்தப் படத்தில் அதிகமாகப் பார்க்கலாம். இந்த வாய்ப்புக்காக என் மனைவிக்கு நான் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளேன். அவர்தான் அஜித்துடன் எனக்கு ஒரு தொடர்பை ஏற்படுத்தித் தந்தார். முழுமையாக நான் தமிழ் சினிமா துறையில் இயங்க இருக்கிறேன்” எனக் கூறியிருந்தார்.
‘வலிமை’ படத்தினை ஹெச். வினோத் இயக்கி வருகிறார். படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். பாலிவுட் நடிகை ஹுமா குரேஷி மற்றும் டோலிவுட் நடிகர் கார்த்திகேயா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்து வருகிறார். இந்தப் படத்தை இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியிடப் படக்குழு திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.