‘பிகில்’ போஸ்டருக்கு எதிர்ப்பு.. கோவை ஆட்சியர் அலுவலகத்தில் மனு..!
பிகில் போஸ்டரில் கறி வெட்டும் கட்டை மீது விஜய் செருப்புக் கால் வைத்து போஸ் கொடுத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
விஜய் இரண்டு கதாபாத்திரங்களில் நடித்து உருவாகியுள்ள படம் ‘பிகில்’. நயன்தாரா இப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். படத்தின் போஸ்டர்கள் அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. அத்துடன், சமீபத்தில் நடந்த அதன் இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது பலரது கவனத்தையும் ஈர்த்தது.
இந்நிலையில் பிகில் போஸ்டரில் கறி வெட்டும் கட்டை மீது விஜய் செருப்புக் கால் வைத்து போஸ் கொடுத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. தாங்கள் தெய்வமாக மதிக்கும் கறி வெட்டும் கட்டை மீது விஜய் செருப்புக் கால் வைத்து போஸ் கொடுப்பது தங்களை மன உளைச்சலுக்கு ஆளாக்குவதாக கூறி கறிக்கடை நடத்தும் நபர்கள் சிலர் புகார் மனு கொடுத்துள்ளனர். அத்துடன் கோழிக்கடை கோபாலு என்பவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன், பிகில் பட போஸ்டரை கிழித்ததுடன் அந்த காட்சியை படத்தில் நீக்கி வெளியிட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.