"இவர்கள் வந்திருந்தால், அரசியலுக்கு வராமல் இருந்திருப்பேன்" - பவன் கல்யாண் | OG | Pawan Kalyan
பவன் கல்யாண் நடிப்பில் சுஜீத் இயக்கியுள்ள `OG' படம் செப்டம்பர் 25ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனை முன்னிட்டு OG கான்செர்ட் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் பேசிய பவன் கல்யாண், "என் வாழ்க்கையில் சுஜித் செய்த வேலை என்னவென்றால், நான் எப்போதும் ஆடியோ நிகழ்ச்சிகளுக்கு இப்படி வந்ததில்லை, ஆனால், முதன்முறையாக சினிமா காஸ்ட்யூமுடன் நான் வந்திருக்கிறேன். இவ்வளவும் எதற்காக? உங்களுக்காக. ஒரு ரசிகர், அதுவும் சாதாரண ரசிகர் இல்லை, `ஜானி' படம் பார்த்து பல நாட்கள் ஹெட் பேண்ட் கட்டிக் கொண்டு, அதற்காக அவரின் அம்மாவிடம் திட்டு வாங்கினாராம், அப்படிப்பட்ட ரசிகர். `சாஹோ' படத்திற்குப் பிறகு த்ரிவிக்ரம் மூலமாக எனக்கு அறிமுகமானார் சுஜீத். சுஜீத் நமக்கு விளக்குவது குறைவு, ஆனால் செய்வது அதிகம். கதையை துண்டுதுண்டாகத்தான் சொல்வார். ஆனால் எடுக்கும்போதே அவரது திறமை புரியும்.
இந்த சினிமாவுக்கு இருவரே ஸ்டார்கள், பவன் கல்யாண் கிடையாது. முதல் கிரெடிட் சுஜீத்துக்கு, இரண்டாவது அவருக்கு சமமாக உழைக்கும் தமனுக்கு. இவர்கள் இருவரும் ஒரு ட்ரிப்பில் இருந்தார்கள், அதற்குள் என்னையும் இழுத்துக் கொண்டார்கள். அது எந்த அளவுக்கு என்றால், நான் ஒரு துணை முதலமைச்சர் என்பதையே மறந்துவிட்டேன். ஒரு துணை முதலமைச்சர் கத்தியை பிடித்துக் கொண்டு வந்தால் யாராவது ஏற்றுக் கொள்வார்களா சொல்லுங்கள். `குஷி' படத்தில் கட்டானா (சாமுராய்கள் பயன்படுத்தும் ஜப்பானிய வாள்) பயன்படுத்தினேன். எனவே இந்தப் படத்திலும் கொண்டு வரவேண்டும் என அதற்கு ஒரு கதை எழுதி படத்தில் சேர்த்திருக்கிறார்கள்.
ப்ரியங்கா அருள் மோகன் 80களில் வரும் திரைப்படங்களில் வரும் நாயகி போன்று படத்தில் வருவார். சில காட்சிகளே வந்தாலும் மிக அழகாக இருக்கும். நமக்கு இப்படியான வாழ்க்கை இருந்தால் நன்றாக இருக்குமே எனத் தோன்றும். மிகச் சிறப்பான நடிகை ஸ்ரேயா ரெட்டி. அவர் ஒரு பெண் சிங்கம், அவருடைய ஃபிட்னெஸ் பார்த்தால், அவருடன் சண்டையிட வருபவர்கள்கூட யோசிப்பார்கள். எதிர்காலத்தில் உங்களுடன் இன்னும் பவர்புல் வேடத்தில் பணியாற்ற வேண்டும் என விரும்புகிறேன். இம்ரான் ஹாஸ்மியுடன் நடிக்கும் சிறந்த வாய்ப்பு இப்படத்தில் கிடைத்தது. இவ்வளவு சிறந்த நடிகருடன் நடித்தது சந்தோஷமாக இருந்தது. ஒளிப்பதிவாளர்கள் ரவி கே.சந்திரன், மனோஜ் பரமஹம்சா இருவரும் பெரிய உழைப்பை கொடுத்திருக்கிறார்கள்.
இதை எல்லாம் தாண்டி ஒரு சினிமாவை இவ்வளவு எதிர்பார்ப்பாகளா என்பது எனக்கே ஆச்சர்யமாக இருக்கிறது. ’குஷி’ பட வெளியீட்டு சமயத்தில் இந்த எதிர்பார்ப்பைப் பார்த்தேன். சினிமாவைவிட்டு அரசியலுக்குச் சென்றாலும் நீங்கள் என்னை விடவில்லை என்பதை இது உணர்த்துகிறது. இன்று அரசியலில் நான் போராடுகிறேன் என்றால், அதற்கான பலத்தைத் தந்ததும் நீங்கள்தான். சினிமா என்று வந்தால், நான் ஒரு தீவிரமான சினிமா விரும்பி. சினிமா செய்யும்போது அதைத் தவிர்த்து வேறு யோசனைகள் இருந்ததில்லை. அரசியலுக்குச் சென்ற பின் அரசியல் தவிர வேறு சிந்தனைகள் இல்லை. இந்த சினிமா செய்யும்போது எப்படிச் சிறப்பாகச் செய்ய வேண்டும், இயக்குநருக்கு பிடித்த மாதிரி எப்படிச் செய்வது என இருந்தேன். எனக்கு ஜப்பானீஸ் தெரியாது. ஆனால் அவருக்காக நான் ஜப்பானீஸ் கற்றுக் கொண்டேன். மேலும் சுஜீத்தின் இயக்குநர் குழுவை வாழ்த்த வேண்டும். நான் சினிமாவில் இருந்தபோது இப்படியான குழு இருந்திருந்தால் அரசியலுக்கு வராமல்கூட இருந்திருப்பேன்" எனப் பேசினார்.