புற்றுநோயால் பாதித்த ரசிகர் - வீட்டிற்கே சென்று ரூ5 லட்சம் நிதியுதவி அளித்த பவன் கல்யாண்!
’தெலுங்கு சினிமா உலகின் அஜித்’ என்று அழைக்கப்படும் பவன்கல்யாண் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தனது ரசிகரின் வீட்டிற்கு திடீர் விசிட் செய்து 5 லட்சம் நிதியுதவி அளித்து தைரியம் ஊட்டிய செயல் பாராட்டுக்களை குவித்து வருகிறது.
தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர் சிரஞ்சீவியின் தம்பியான பவன் கல்யாண் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருகிறார். அவருக்கென தனி ரசிகர் கூட்டமே உள்ளது. கடந்த 2008 ஆம் ஆண்டு சிரஞ்சீவி ’பிரஜா ராஜ்யம்’ கட்சியை ஆரம்பித்தபோது அவருடன் இணைந்து அரசியல் பணிகளை மேற்கொண்டார் பவன் கல்யாண். ஆனால், சிரஞ்சீவி கட்சியை கலைத்துவிட்டு காங்கிரஸில் இணைந்தபோது, அதில் மாற்றுக்கருத்து ஏற்பட்டு கடந்த 2014 ஆம் ஆண்டு ’ஜன சேனா’ என்ற கட்சியை ஏற்படுத்தி முழுநேர அரசியல்வாதியாய் மாறினார்.ஆனால், அவர் நினைத்தது போல் அரசியல் வெற்றிகரமாக அமையவில்லை.
அதனால், மீண்டும் தற்போது நடிப்பில் முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார். இந்தியில் வெளியாகி பெரும் வெற்றியடைந்த ‘பிங்க்’ படத்தின் ரீமேக்கான ‘வக்கீல் சாப்’பில் தற்போது நடித்து வருகிறார். இப்படமே தமிழில் அஜித் நடிப்பில் ‘நேர்கொண்ட பார்வை’யாக வெளியானது. அடுத்ததாக மலையாளத்தில் வெற்றி பெற்ற ‘அய்யப்பனும் கோஷியும்’ படத்தின் ரீமேக்கில் பவன் கல்யாண் நடிக்கவிருக்கிறார்.
இந்நிலையில் ஆந்திராவின் கிருஷ்ணா மாவட்டத்தில் லிங்கலா கிராமத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தனது ரசிகர் பார்கவ் என்பவரைப் பற்றி கேள்விப்பட்டு அவரின் மருத்துவ சிகிச்சைக்கு 5 லட்சம் நிதியுதவி அளித்து தைரியமாக இருக்க வெள்ளி கணபதி சிலையையும் வழங்கியுள்ளார். பவன் கல்யாணின் இந்த மனிதாபிமான செயல் பாரட்டுகளைக் குவித்து வருகிறது.