‘பத்து தல’ படத்தின் போஸ்டர்களை வெளியிட்ட ஏ.ஆர்.ரஹ்மான் - ட்ரெண்டிங்கில் #PathuThala
சிலம்பரசன், கெளதம்கார்த்தி இணைந்து நடிக்கும் 'பத்து தல' படத்தின் போஸ்டர்களை ஏ.ஆர்.ரஹ்மான் அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
பொங்கல் பண்டிகையொட்டி ‘மாஸ்டர்’ படத்துடன் இணைந்து சிலம்பரசன் நடிப்பில் உருவான ‘ஈஸ்வரன்’ திரைப்படமும் வெளியானது. மாஸ்டர் படத்திற்கு ஒதுக்கப்பட்ட திரையரங்குகளை விட குறைவான திரையரங்குகள் ஈஸ்வரன் படத்திற்கு ஒதுக்கப்பட்டாலும் மக்களிடம் ஈஸ்வரன் நல்ல வரவேற்பையே பெற்று வருகிறது.
ஊரடங்கு காலங்களில் கடுமையான உடற்பயிற்சி மேற்கொண்டு உடல் எடையைக் குறைத்த சிலம்பரசன், அடுத்தடுத்த படங்களிலும் கமிட் ஆனார். மாநாடு தயாரிப்பாளருக்கும், சிலம்பரசனுக்கும் கடந்த 2019 ஆம் ஆண்டில் பிரச்னை ஏற்பட்டு, படப்பிடிப்பு நிறுத்தப்பட்ட நிலையில், அந்தப் படத்தின் படப்பிடிப்பும் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதனைத்தொடர்ந்து கன்னட திரைப்படமான ‘மப்டி’ ரிமேக்கில் சிலம்பரசனும், கெளதம் கார்த்தியும் இணைந்து நடிப்பது உறுதியானது. இந்தப் படத்தை ‘சில்லுனு ஒரு காதல்’, ‘நெடுஞ்சாலை’ உள்ளிட்ட படங்களை இயக்கி கவனம் ஈர்த்த கிருஷ்ணா இயக்குகிறார்.
ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். ‘பத்து தல’ எனப் பெயர் வைக்கப்பட்ட இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்தப் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.