“கொலை செய்ய முயற்சி.. பிரபலமானது மகிழ்ச்சி” - பார்த்திபன்
தன் மீது கொலை முயற்சி புகார் கொடுத்தவர் கவிஞனாக பிரபலமாகிவிட்டதாக நடிகர் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.
நடிகர் பார்த்திபன் தம்மை கொலை செய்ய முயன்றதாக, அவரது வீட்டில் வேலை பார்த்த ஜெயங்கொண்டான் என்பவர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கம் காவல்நிலையத்தில் அவர் அளித்துள்ள புகாரில், நடிகர் பார்த்திபனின் திருவான்மியூர் வீட்டில் நகை திருடுபோனது தொடர்பாக சில பணியாளர்களை அவர் வேலையில் இருந்து நீக்கியதாகத் தெரிவித்துள்ளார்.
அத்துடன் நுங்கம்பாக்கம் ஃபோர் பிரேம் திரையரங்கிற்கு தாம் சென்றதாகவும், அப்போது அங்கு வந்திருந்த நடிகர் பார்த்திபன் மற்றும் அவரது உதவியாளர் கிருஷ்ணமூர்த்தி இருவரும், வேலையில் இருந்து நீக்கப்பட்ட ஒருவரிடம் ஏன் பேசினாய்? எனக் கூறித் தம்மை தாக்கியதுடன், திரையரங்கின் மூன்றாம் மாடியில் இருந்து தம்மை கீழே தள்ளிவிட முயன்றதாகவும் புகார் தெரிவித்துள்ளார். தமக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் மனுவில் ஜெயங்கொண்டான் கோரியுள்ளார்.
இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள நடிகர் பார்த்திபன், “பார்த்திபன் கொலை செய்ய முயற்சி- Humour sense-க்கு அளவுவே இல்லாமல் போய் விட்டது. என் புகாரின் பெயரில் நேற்று மாலை ஆணையர் அலுவலகத்தில் நின்ற குற்றவாளி இன்று காலை அதே அலுவலகத்தில் என்மீது புகார் செய்ய அது எல்லா ஊடகங்களிலும் வர கவிஞனாக பிரபலமாகி விட்டார் ஒருவர்.மகிழ்ச்சி” எனத் தெரிவித்துள்ளார்.