"மாரி செல்வராஜ் உதவி செய்யலைன்னு தப்பா பரப்பாதீங்க!"- 'பரியேறும் பெருமாள்' தங்கராசு பேட்டி

"மாரி செல்வராஜ் உதவி செய்யலைன்னு தப்பா பரப்பாதீங்க!"- 'பரியேறும் பெருமாள்' தங்கராசு பேட்டி
"மாரி செல்வராஜ் உதவி செய்யலைன்னு தப்பா பரப்பாதீங்க!"- 'பரியேறும் பெருமாள்' தங்கராசு பேட்டி

பாராட்டுக்களையும் விருதுகளையும் குவித்த ’பரியேறும் பெருமாள்’ படத்தில் கூத்துக்கட்டும் கலைஞராகாவும், பரியனின் தந்தையாகவும் எதார்த்தமாக நடித்து நெகிழவைத்தவர் கூத்துக்கலைஞர் தங்கராசு. உடல்நிலை சரியில்லாத மனைவி, வேலை கிடைக்காத மகள் என வறுமையில் வாழ்ந்துவந்த தங்கராசுவின் குடிசை வீடும் சமீபத்தில் பெய்த பருவமழையால் சேதமடைந்தது. இந்நிலையில்தான், தமுஎகச அமைப்பினர் மேற்கொண்ட முயற்சியின் மூலம் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரை சந்தித்து தங்கள் நிலைமையை எடுத்துச்சொல்லி மனு கொடுத்தார் தங்கராசு. மாவட்ட ஆட்சியரும் குடிசை மாற்று வாரியம் மூலம் அடுக்கக வீடு ஒன்றை ஒதுக்கித்தருவது உள்ளிட்ட சில வாக்குறுதிகளை  அவருக்கு அளித்ததார்.

அதுகுறித்த, செய்தி ஊடகங்களில் பரவ, இச்செய்தியோடு சேர்த்து ’பரியேறும் பெருமாள்’ இயக்குநர் மாரி செல்வராஜ் ’உதவி செய்யவில்லை’ என்று சமூக வலைதளங்களில் பலர் விமர்சித்து வந்தார்கள். இந்நிலையில், தங்கராசுவிடம் பேசினோம்.

”ரெண்டு வருஷத்துக்கு முந்தியே உடம்புக்கு முடியாம கூத்துக்குப் போறதை நிறுத்திட்டேன். அதனால, வெள்ளரிப்பிஞ்சு, காய்கறிகளை வாங்கிட்டு வந்து மார்க்கெட்டுல விற்பேன். ஆனா, கொரோனாவால எந்த வியாபாரமும் செய்ய முடியல.  வறுமை அதிகமானதோட கடன் சுமையும் கூடிடுச்சி. எங்க வீட்டம்மா பேச்சுக்கனி மூச்சுக்குழல் சுறுங்கி மூச்சு விடமுடிதாத பல வருஷ நோயாளி. பார்க்காத டாக்டரே இல்ல. மாத்திரைப் போட்டாத்தான் கொஞ்சம் நல்லா மூச்சு விடமுடியும். எந்த வேலையும், அவங்களால செய்ய முடியாது. ஒரு குடம் தண்ணிக்கூடத் தூக்க முடியாது. நான்தான் கூட இருந்து பொறுப்பா பார்த்துப்பேன். கல்யாண வயசிலிருக்க மகள் அரசிளங்குமாரியை ஒருத்தன் கையில நல்லபடியா புடிச்சி கொடுக்கிற வரைக்குமாச்சும் வீட்டம்மா இருக்கணும்னு வேண்டாத கடவுள் இல்லை. இந்த கவலையிலேயே வறுமையும் வாட்டினா என்னப் பண்ணுவேன்?

 அரசாங்கம் கொடுக்கிற ரேஷன் அரிசிதான் வயித்துப் பசியைப் போக்கிட்டு இருக்கு. அதுவும், இல்லைன்னா எங்க நிலைமை என்ன ஆகிருக்கும்னு சொல்ல முடியாது. கூடப் பொறந்த தம்பி, தங்கச்சிகளும் கைவிட்டுட்டாங்க. கூத்துக்கு போயி உழைக்கவும் உடம்புல தெம்பில்ல. மகள் அரசிளங்குமாரி டீச்சர் ட்ரெயினிங் முடிச்சிருக்கு. இன்னும் வேலை கிடைக்கல. இதனால, எங்க ஊர் வி.ஏ,ஓ உள்ளிட்ட உயரதிகாரிங்கக்கிட்ட எல்லாம் உதவச்சொல்லி கோரிக்கை வச்சேன். எந்த உதவியும் கிடைக்கல. எதுவுமே, நடக்காத பட்சத்துலத்தான்  ’வீட்டை சீரமைச்சுக் கொடுக்கணும். வீட்டம்மா நோயாளியா இருப்பதால சமாளிக்க முடியல. பொண்ணுக்கு வேலை போட்டுக் கொடுத்தா உதவியா இருக்கும். இந்தக் கலைஞனுக்கு உதவி பண்ணுங்க அய்யா’ன்னு கலெக்டர் கிட்ட மனு கொடுத்தேன். அவரும் உதவி செய்றதா சொல்லியிருக்காரு. ரொம்ப சந்தோஷம்.

நான் ஒரு கலைஞன்னு தெரிஞ்சு உடனே, கலெக்டர் அய்யா உதவுறாங்கன்னா, அதுக்குக் காரணம் மாரி செல்வராஜு தம்பிதான்” என்று உருக்கமுடன் கண்கலங்கியபடி பேசும், தங்கராசுவிடம் ’இயக்குநர் மாரிசெல்வராஜ், உங்களுக்கு எந்த உதவியும் செய்யவில்லை என்று தகவல் பரவுகிறதே அது உண்மையா?’ என்று கேட்டோம்.

 ”ஒரு மனுஷன் செஞ்ச உதவியை நினைக்கலைன்னா ஆயுசு முழுசுக்கும் நாம வாழவே முடியாது. நல்ல சாப்பாடு சாப்பிட முடியாது. மனசாட்சின்னு ஒண்ணு இருக்கு. அவரை வச்சி உலகம் முழுக்க பேர் வாங்கிட்டேன். அவர் என்னை கைவிடுவாராம்மா?” என்று தொடர்கிறார் தங்கராசு.

“கழுத்தளவு தண்ணியில மூழ்குற மாதிரி என் குடும்பம் நின்னுச்சி. கையைக் கொடுத்து  தூக்கிவிட்டு காப்பாற்றினதே மாரி தம்பிதான். அவங்க ஊருக்கு 20 வருஷத்துக்கும் மேல அம்மன் கோயில் திருவிழாவுக்குப் போய் கூத்துக் கட்டுவேன். அப்போதிலிருந்தே எனக்கும் அவங்கக் குடும்பத்துக்கும் நல்ல பழக்கம் உண்டு. ’பரியேறும் பெருமாள்’ படம் எடுக்க ஆரம்பிச்சப்போ நேரா தேடிக்கிட்டு வீட்டுக்கு வந்து நீங்கதான் நடிக்கணும் பிடிவாதமா சொல்லிடுச்சி மாரி தம்பி.

ஊர் ஊரா ஆடிக்கிட்டிருந்த இந்தக் கூத்துக்கலைஞனை உலகத்துக்கே தெரிய வெச்சாரு தம்பி. படம் வெளியானபிறகு எங்க உறவு அதோட நின்னுடல. அவரும் விட்டுடல. அவரு பிஸியா இருப்பார்ன்னு நான்கூட ஃபோன் பண்ண மாட்டேன். ஆனா, மாரி தம்பி அடிக்கடி ஃபோன் பண்ணி நலம் விசாரிப்பார்.  ’என்னப்பா பண்றீங்க? சாப்ட்டீங்களா? அம்மாவ ஹாஸ்பிட்டல் கூட்டிக்கிட்டு போனீங்களா? செலவுக்கு ஏதாவது வேணுமான்னு கேட்டுக்கிட்டே இருப்பாரு. இடையில், அப்பா அம்மான்னு அவங்க குடும்பத்தோட வந்து பார்த்துட்டு செலவுக்கு  கொடுத்துட்டு போனாரு. இதுமட்டுமல்ல, மகள் அரசிளங்குமாரி டீச்சர் ட்ரெய்னிங் படிச்சுக்கிட்டிருக்கும்போது ஃபீஸ் கட்ட பணம் இல்லன்னு சொன்னேன். அப்போ, தம்பிதான் கடவுள் போல ஃபீஸ் கட்டி உதவினார்.     

எங்களுக்கு கல்யாணம் ஆகி ஆறேழு வருஷம் கழிச்சு பொறந்தவ அரசிளங்குமாரி. அவளுக்கு ஒரு நல்ல இடத்துல கல்யாணம் பண்ணி கொடுக்கணும். ஒரு நல்ல மாப்பிள்ளைக்கிட்ட கைய புடிச்சு கொடுக்கணும்ங்கிறதுதான் கனவே. அதனால, அவளுக்கு கல்யாணம் பண்ண வரன் பார்த்துக்கிட்டிருக்கோம். அவள் இல்லைன்னா நாங்க இல்ல. அவளுக்கு வரன் பார்க்கிறோம்னு தெரிஞ்சதும்  ’தங்கச்சி கல்யாணத்துக்கும் உதவுறேன்ப்பா’ன்னு சொல்லி நம்பிக்கை கொடுத்திருக்காரு மாரி தம்பி.

இடையில எனக்கு ஊருல ஒரு பிரச்சனை ஆகிடுச்சி.  தெரிஞ்சவங்களை எல்லாம் அனுப்பி, பெரிய பிரச்னையிலிருந்து என்னை மீட்டவதே தம்பிதான். இது, எல்லாத்தையும்விட தம்பியோட அடுத்தப் படமான ‘கர்ணன்’லேயும் நடிக்க வாய்ப்பு கொடுத்திருக்காரு. அதுமட்டுமில்லாம, இன்னும் ரெண்டு படங்களில் வாய்ப்பு கிடைச்சிருக்குன்னா அதுக்கு காரணம் அவர்தான். அவரு, உதவி செய்யலைன்னு யாராவது சொன்னா ஏத்துக்கவே முடியாது. கடவுள் மாதிரி தொடர்ந்து உதவிகளை செய்திட்டிருக்காரு.  அவரை ஒரு குறையும் சொல்லமுடியாது. நான் சொல்லவும் விடமாட்டேன். தயவு செஞ்சு யாரும் உதவி செய்யலைன்னு பொய்யை பரப்பிவிடாதீங்க உங்களுக்கு புண்ணியமா போகும். என்னை அப்பா மாதிரிதான் மதிச்சி நடக்கிறார் மாரி தம்பி. அவரால, நான் உலகம் முழுக்க பேர் வாங்கிட்டேன். அவர் குடும்பமும் குழந்தையும் ரொம்ப நல்லாருக்கணும்” என்கிறார் தங்கராசு.

- வினி சர்பனா

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com