“சினிமா பின்னணி இல்லாமல் வளர்வது கஷ்டம்” - நடிகர் கதிர்

“சினிமா பின்னணி இல்லாமல் வளர்வது கஷ்டம்” - நடிகர் கதிர்

“சினிமா பின்னணி இல்லாமல் வளர்வது கஷ்டம்” - நடிகர் கதிர்
Published on

‘பரியேறும் பெருமாள்’  நாயகன் கதிர் தனது சினிமா வாழ்க்கை குறித்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டுள்ளார். 

‘மதயானைக் கூட்டம்’ படத்தில் அறிமுகமான கதிர், தனது முதல் படத்திலேயே கவனிக்க வைத்தவர். அடுத்தடுத்து ‘கிருமி’, ‘விக்ரம் வேதா’ என தனித்துவமான படங்களில் நடித்தவர். தற்போது ‘பரியேறும் பெருமாள்’ என்கிற படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படத்தில் நடித்த அனுபவங்களை குறித்து அவர் சில விஷயங்களை பகிர்ந்து கொண்டார். 

“இந்தப் ‘பரியேறும் பெருமாள்’ படம் நானாக தேடிப்போய் வாங்கிய வாய்ப்பு. நண்பர் ஒருவர் மூலமாக இயக்குனர் மாரி செல்வத்திடம் இப்படி ஒரு கதை இருக்கிறது எனக் கேள்விப்பட்டதும் மறுநாளே அவரை தேடிப்போய் நின்றேன். அவருக்கும் நான் சரியாக இருப்பேன் என பட்டது. இந்தப்படத்தில் ஒரு நிஜ வாழ்க்கை இருக்கிறது. 

மொத்தம்  47 நாட்கள் கொளுத்தும் வெயிலில் திருநெல்வேலியில் வைத்து படப்பிடிப்பு நடந்தது. மாலையில் கூட ஓய்வெடுக்க நேரம் இருக்காது. அந்தச் சமயத்தில்தான் ஒரு கி.மீ தூரத்திற்கும் அதிகமாக ஓடுவது, குதிப்பது, கீழே விழுவது ஆகிய காட்சிகளை படமாக்கினோம். மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே திரும்பி நடந்து வருவோம் இல்லையா? அதுதான் எனக்கு ஒய்வான நேரம். 

என்னுடன் நடித்த கருப்பி நாய் வேட்டை ரகம். பார்க்க பயங்கரமாக இருந்தாலும் பாசம் காட்டுவதிலும் அசர வைத்துவிடும். ஆரம்ப நாட்களில் வேட்டைக்குத்தான் போகிறோம் என நினைத்துக்கொண்டு எங்களுடன் துள்ளிகுதித்து ஓடியது. அப்புறம் நான்கு நாட்களில், அதற்கே ஷூட்டிங் எடுக்கிறார்கள் எனத் தெரிந்து, ஆக்சன் காட்சிக்கு ஏற்ற மாதிரி நடிக்க பழகிவிட்டது. நாய்க்கு இணையாக வேகமாக ஓடி ஓடி கடைசி ஒருவாரம் எனது முட்டிக்கு கட்டுப்போட்ட வேண்டி வந்தது. 

என்னதான் நன்றாக நடித்திருந்தாலும் சினிமா பின்னணி இல்லாமல் வரும் என்னைப்போன்ற ஆட்களுக்கு எங்களையும் படத்தையும் மக்களிடம் உரியவகையில் கொண்டு சேர்த்து மேலே வருவது கஷ்டமான ஒன்றுதான். ஆனால் கதையும் கடந்து மேலேவர ஏதோ ஒரு உந்துசக்தி தேவைப்படுகிறது வழக்கமான பார்முலாவில் கடகடவென படங்களில் நடித்துவிட்டுப்போகாமல் எதற்காக இப்படி மெனக்கெடுகிறீர்கள் என பலரும் கேட்கிறார்கள். ரசிகர்களை கொஞ்ச நாளாவது நம்ம படத்தை பற்றி விவாதம் பண்ண வைக்கணும். அதனால்தான் பார்த்து பார்த்து கதைகளை தேர்வு செய்கிறேன். அடுத்து  வெளியாக இருக்கும் ‘சிகை’ படத்தில் கூட வித்தியாசமான கதைக்களமும் கேரக்டரும் கிடைத்திருக்கிறது” என்கிறார் கதிர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com