சாதியம் எனும் துயரின் பெருவலி: 'பரியேறும் பெருமாள்' - விமர்சனம்

சாதியம் எனும் துயரின் பெருவலி: 'பரியேறும் பெருமாள்' - விமர்சனம்
சாதியம் எனும் துயரின் பெருவலி: 'பரியேறும் பெருமாள்' - விமர்சனம்

சாதியக் கொடூரத்தின் இரு வேறு அடுக்களில் உள்ள மனிதர்களின் மனதை நெருக்கமாக படம்பிடித்துக் காட்டியதன் மூலம் தமிழின் முக்கிய சினிமாக்களில் ஒன்றாக கம்பீரமான தன் நடையை தொடங்கியிருக்கிறான் ‘பரியேறும் பெருமாள். தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகில் உள்ள புளியங்குளம் எனும் கிராமம்தான் திரைப்படத்தின் களம். புறந்தள்ளியே வைக்கப்படுகிற ஒடுக்கப்பட்ட சமூகத்தின் ஓங்கி ஒலிக்கும் குரலாய் தான் மாற வேண்டும் என்பதை லட்சியமாகக் கொண்டு, “பரியேறும் பெருமாள் பி.ஏ.பி.எல் மேல ஒரு கோடு” என்றபடியே வளர்கிறார் கதை நாயகன் பரியன் என்கிற கதிர். ஆனால், அதனை கடந்து வருதல் உலகமயமாதலுக்குப் பின்பான இன்றைய காலக்கட்டத்திலும் எத்தனை ரணமானது என்பதை அழுத்தம் திருத்தமாக சொல்லியிருக்கிறார் அறிமுக இயக்குநர் மாரி செல்வராஜ். கதையை காட்சிகளாய் விரித்ததில் உள்ள மாரியின் மெனக்கெடல் போற்றுதலுக்குரியது.

‘பரியேறும் பெருமாள்’ திரைப்படம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே சாதியச் செருக்கு என்னவெல்லாம் செய்யும் எதுவெல்லாம் செய்யும் என்பதை ‘கருப்பி’ எனும் நாயின் மீதான வன்முறையில் இருந்து எளிதில் நம்மால் விளங்கிக் கொள்ள முடியும். உண்டியல் திருட்டிற்காக  ஒடுக்கப்பட்ட சமூக இளைஞர்களை சந்தேகிப்பது, கல்லூரியில் பகடி செய்வது, ‘உயர்’சாதிப் பெண்களுடன் நட்பு ரீதியிலாகக்கூட பழகுதல் கூடாது என்பது, சாதி மாறிய காதலுக்காய் பெற்றோர்களே தங்கள் மகளை கொன்று நடிப்பது என்பது படம் நெடுக ‘பகீர்’ காட்சிகள் பல.“பரியேறும் பெருமாள் பி.ஏ.பி.பி.எல் மேல ஒரு கோடு” என வெள்ளந்தியாய் அசத்தியிருக்கிறார் நாயகன் கதிர். 

எந்தவிதமான அலட்டலும் இன்றி வெகு சாதாரணமாக பரியன் கதாப்பாத்திரத்தில் பொருந்தி சிலிர்க்க வைக்கிறார். தன் தோழி வீட்டின் திருமணத்தில் கலந்துகொள்ள செல்லுமிடத்தில் சாதியின் காரணமாக தாக்கப்பட்டு, தன்மேல் சிறுநீர் தெளிக்கப்பட்டதை உணர்ந்து உடலும், மனமும் ஒருசேர வலிக்க உடைந்து அழும் காட்சியில் பார்வையாளர்களுக்கும் அறியாமலேயே கண்ணீர் வந்துவிடுகிறது. சட்டக்கல்லூரி வகுப்புகளில் ஆங்கிலம் தெரியாமல் தயங்கி பின்னர் ரவுத்திரமாவது, ‘சாதி’ பகடிகளால் நொருங்கிப் போவது, உண்மையைச் சொல்ல முடியாமல் ஆனந்தியை தவிர்ப்பது, தன்னை எதிர்க்கும் சக மாணவன் இடத்தில் அமர்ந்து திமிர் காட்டுவது, பெண்கள் கழிவறைக்குள் தள்ளப்பட்டவுடன் கண்ணீருடன் முகம் கவிழ்வது என ஒட்டுமொத்த படத்திலும் நிறைவு செய்திருக்கிறார் கதிர்.

‘பரியேறும் பெருமாள்’ படத்தின் தேவதை ஆனந்தி. ‘ஜோ’ எனும் கதாப்பாத்திரத்தில் அறிமுகமாகி, “நான் உன் தேவதையாகணும்” என பரியனிடம் சொல்லி உண்மையிலும் தேவதையாக மாறிவிடுகிறார். எந்தக் கள்ளம் கபடமும் இன்றி நாயகனுக்கு ஆங்கிலம் சொல்லித் தருவதும், அவன் மீதான பிரியத்தை வீட்டில் சொல்லி திரிவதும் என அழகாய் மிளிர்கிறார். படத்தில் கவனம் ஈர்க்கும் முக்கியமான மனிதர் கொலைகார தாத்தாவாக வரும் ‘கராத்தே’ வெங்கடேசன். “சாதிய காப்பாத்துறதுக்காக சாமிக்கு செய்ற மாதிரி செய்றேன்” எந்தவிதமான தயக்கமும், சாட்சியமுமின்றி கொலைகள் செய்து மிரட்டுகிறார். அவரே பரியனை கொல்ல முடியாமல் போனதும், வெகு சாதாரணமாக சென்று ரயில் முன் நிற்கும்போது நடிப்பில் ‘கெத்து’ காட்டியிருக்கிறார்.

கனமான காட்சிகளுடன் நகரும் படத்தில் சிரிப்பு தூவி செல்கிறார் யோகிபாபு. இவர்களோடு, பெண் வேடமிட்டு ஆடும் கலைஞராக வரும் பரியனின் அப்பா, “நான் உன் தேவதையாவனாடே” என்று செல்லமாய் கேட்கும் விரிவுரையாளர், “ரூமுக்குள்ள தூக்குப் போட்டு சாகுறதுக்கு, சண்டப்போட்டு சாகட்டும்” எனும் கல்லூரி முதல்வர் ‘பூ’ ராமு என எல்லோரும் கச்சிதமாய் தங்கள்  பங்களிப்பை நிறைவு செய்திருக்கிறார்கள். இறந்து போன நாய் நீல நிறத்தில் மீண்டும் தோன்றுவதும், அவமானப்பட்ட நாயகன் முகம் நீலமாய் மாறுவதும் தயாரிப்பாளர் பா.இரஞ்சித்தின் ‘டச்’. சந்தோஷ் நாராயணன் பாடல்களிலும், பின்னணி இசையிலும் பொறுப்பை உணர்ந்து செவ்வனே  பணியாற்றியிருக்கிறார்.

வழக்கமான காட்சியமைப்புகளின்றி நகரும் திரைப்படத்தில் பெரும் பலம் ஸ்ரீதரின் ஒளிப்பதிவு. சிறுசிறு அசைவுகளுடன் பெரும்பாலான ‘ஷாட்’களை வைத்தது, சாதியம் யாராலும் அழிக்க முடியாதளவிற்கு பெரிது என்பதை  ‘Wide ஷாட்’ மூலம் காட்டியிருப்பது, ஆனந்தி திரையில் தோன்றும்போதெல்லாம் தேவதை போன்றதோரு உணர்வைக் கடத்தியது என அசத்தலாக பணியாற்றியிருக்கிறார். அவரைப்  போலவே ஆர்.கே.செல்வாவின் படத்தொகுப்பும் அசத்தல்.

கொலை செய்யவே துணியும் ஆனந்தியின் குடும்பத்தினர் பரியன் பேசும் சில நிமிடங்களில் திருந்தி விடுவது சற்று முரணாக இருந்தாலும், அவர்களும் மனிதர்கள்தான் எனும் பார்வையில் அதனை ஏற்றுக் கொள்ள முடிகிறது. கல்லூரி வளாகத்தில் தேநீர் குவளைகளை வைத்துவிட்டு பரியன், ஜோ, அவள் அப்பா என அனைவரும் கிளம்பியதும் தூரத்தில் இருந்து கேமரா வர, திரை  குறுகி இரண்டு குவளைகளும் சம அளவு தான், எந்த பேதமுமில்லை என்பதைக் காட்டுவதோடு நிறைவாகிறது ‘பரியேறும் பெருமாள்’ திரைப்படம். ஆனால், அதனை அனைவரும் உணர்ந்து சாதியத்தை புறந்தள்ளுவதிலேயே இருக்கிறது படத்தின் உண்மையான வெற்றி.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com