உலகமே பாராட்டும் Squid Game-ஐ கடுமையாக விமர்சிக்கும் பாகிஸ்தானியர்கள்... காரணம் என்ன?

உலகமே பாராட்டும் Squid Game-ஐ கடுமையாக விமர்சிக்கும் பாகிஸ்தானியர்கள்... காரணம் என்ன?
உலகமே பாராட்டும் Squid Game-ஐ கடுமையாக விமர்சிக்கும் பாகிஸ்தானியர்கள்... காரணம் என்ன?

'ஸ்குவிட் கேம்' வெப் சீரிஸ் வெளியான 28 நாட்களில் 11 கோடிக்கும் அதிகமானவர்களால் பார்க்கப்பட்டு உலகம் முழுவதும் பாராட்டுகளை பெற்றுவரும் நிலையில், பாகிஸ்தானியர்கள் மட்டும் விமர்சித்து வருகின்றனர்.

கடந்த செப்டம்பர் 17-ம் தேதி கொரிய இயக்குநர் ஹ்வாங் டாங்-ஹியூக் இயக்கத்தில் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது 'ஸ்குவிட் கேம்'. விளையாட்டை அடிப்படையாகக் கொண்டு சர்வைவர் கேம் பாணியில் உருவாக்கப்பட்டுள்ள இந்த வெப் சீரிஸ் வெளியான சில தினங்களிலேயே சர்வதேச அளவில் வரவேற்பைப் பெற்றது.

யூகிக்கவே முடியாத ட்விஸ்ட்டுகளால் 'ட்விட்ஸ்ட் கேம்' தொடர் என்று சொல்லும் அளவுக்கு பார்வையாளர்களிடம் ஆச்சர்யமூட்டியது. மேலும், வெளியான 28 நாட்களில் 11 கோடிக்கும் அதிகமானவர்களால் பார்க்கப்பட்டு, நெட்ஃபிளிக்ஸ் வரலாற்றில் குறைந்த நாட்களில் அதிகம் பேரால் பார்க்கப்பட்ட இணையத் தொடர் என்கிற சாதனையையும் படைத்துள்ளது.

இப்படி, `ஸ்குவிட் கேம்' உலகம் முழுவதும் ரசிகர்களிடம் பாராட்டுகளை பெற்றுவரும் நிலையில், பாகிஸ்தானியர்கள் மட்டும் இந்த தொடரை விமர்சித்து வருகின்றனர். வெப் சீரிஸில் பாகிஸ்தானியர் கேரக்டரில் நடித்திருக்கும் இந்தியர்தான் பாகிஸ்தானியர்களின் விமர்சனத்துக்கு காரணம்.

இந்த வெப் சீரிஸில் தென்கொரியாவில் சட்டவிரோதமாக குடியேறிய பாகிஸ்தான் தொழிலாளி அலி அப்துல் என்ற கதாபாத்திரம் காண்பிக்கப்படும். 'விசுவாசமான வீரராக' காண்பிக்கப்படும் இந்தக் கேரக்டர் ரசிகர்களால் வெகுவாக ரசிக்கப்பட்டது. இந்த கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் இந்தியாவைச் சேர்ந்த நடிகர் அனுபம் திரிபாதி.

இதையடுத்துதான் பாகிஸ்தான் ரசிகர்கள் பலரும், "பாகிஸ்தானியர் கதாபாத்திரத்தில் நடிக்க இந்தியர்கள் தேர்வு செய்யப்படுவது கவலை அளிக்கிறது" என்று பதிவிட்டு வருகின்றனர்.

ஒரு ட்விட்டர் பயனர் `ஸ்குவிட் கேம்' வெப் சீரிஸ் நன்றாக இருக்கிறது என்று பதிவிட்டதுடன், ``ஒரு பாகிஸ்தானி கதாபாத்திரத்தில் இந்தியர் நடிப்பதைக் காண்பது வெறுப்பாக இருக்கிறது. இந்த தயாரிப்புகள் ஏன் அசல் பாகிஸ்தான் நடிகர்களை இத்தகைய பாத்திரங்களுக்கு நடிக்க வைக்க முடியாது?

திரிபாதி நிஜ வாழ்க்கையில் ஒரு முஸ்லிம் கூட இல்லை. இதேதான் `மணி ஹெயிஸ்ட்' தொடரிலும் செய்யப்பட்டது. `மணி ஹெயிஸ்ட்' தொடரிலும் அஜய் ஜெத்தி என்ற இந்திய நடிகர் ஷாகிர் என்ற பாகிஸ்தான் ஹேக்கர் வேடத்தில் நடித்தார்" என்று பதிவிட்டுள்ளார். இப்படி பல பாகிஸ்தானியர்கள் இந்திய நடிகரை நடிக்க வைத்ததற்காக விமர்சித்துள்ளனர்.

அதேநேரம் சிலர், ஓர் இந்தியர் பாகிஸ்தானியராக நடிக்க வைத்ததுக்கு சரியான காரணங்கள் இருப்பதாக பதிவிட்டு வருகின்றனர். ஒரு பயனர், ``நெட்ஃபிளிக்ஸ் எந்த பாகிஸ்தான் கதாபாத்திரங்களையும் இதற்கு முன் இந்த கேரக்டர் போல இவ்வளவு சிறப்பாகக் காட்டியதில்லை. ஒரு பாகிஸ்தானி நடிகர் கொரியாவில் இருந்திருந்து கொரிய படங்களை புரிந்துகொண்டு நடித்திருந்தால் நீங்கள் இந்நேரம் இவ்வளவு கூச்சல் போட்டிருக்க மாட்டீர்கள். திரிபாதிக்கு வாய்ப்பு கிடைக்க, அதை நன்றாகவே செய்துள்ளார். ஒரு பாகிஸ்தானியராக இதில் என்ன கவலை?" என்றுள்ளார் .

பாகிஸ்தானைச் சேர்ந்த நகைச்சுவை நடிகர் அலி குல் பிர் என்பவரும்,  " இந்தியாவுடன் ஒப்பிடுகையில் நமது நாடும் நமது தொழிற்துறையும் மிகச் சிறியது. எனவே உடல் தோற்றத்தை தவிர்த்து ஒரு இந்திய நடிகரைத் தேர்ந்தெடுப்பதில் அர்த்தமுள்ளது. அவர் சரளமாக கொரிய மொழியையும் பேசுகிறார். இது நிச்சயமாக நடிப்பதற்கான முக்கிய தேவைகளில் ஒன்றாகும். நடிகர் திரிபாதி தனது கதாபாத்திரத்திற்கு தன்னால் முடிந்ததை செய்துள்ளார்" என்று கூறியிருக்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com