“பொம்பளைங்க தான் குடும்ப கவுரவத்த சுமக்குறாங்க” - மிரளவைக்கும் 'பாவக்கதைகள்' ட்ரைலர்!

“பொம்பளைங்க தான் குடும்ப கவுரவத்த சுமக்குறாங்க” - மிரளவைக்கும் 'பாவக்கதைகள்' ட்ரைலர்!
“பொம்பளைங்க தான் குடும்ப கவுரவத்த சுமக்குறாங்க” - மிரளவைக்கும் 'பாவக்கதைகள்' ட்ரைலர்!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பல முக்கிய படங்கள் ஓடிடி தளங்களில் வெளியாகி வருகின்றன., அதே போல பல முக்கிய இயக்குனர்கள் இணைந்து கலவையான ஆந்தாலஜி வகை படங்களையும் இயக்கி வருகின்றனர். அவற்றை ஓடிடி தளங்களில் வெளியிடுவது தற்போதைய புதிய ட்ரண்ட். சுதா கொங்கரா, வெற்றிமாறன், விக்னேஷ் சிவன், கவுதம் மேனன் ஆகிய நான்கு இயக்குனர்களும் இணைந்து உருவாக்கியுள்ள பாவக்கதைகள் என்ற ஆந்தாலஜி சினிமா நெட்பிளிக்ஸிஸ் இம்மாதம் 18ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் அப்படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. இதுவரை தமிழ் சினிமா உருவாக்கி வைத்திருந்த இலக்கண பிம்பங்களை இப்படம் அடித்து நொறுக்கும் என்றே தோன்றுகிறது. காரணம் இந்தத் ட்ரைலரில் வரும் காட்சிகள் ஒவ்வொன்றும் புதுமையும் அதிர்ச்சியும் கலந்ததாக உள்ளது.

பிரகாஷ்ராஜ், சாய் பல்லவி, அஞ்சலி, சிம்ரன், பவானி, கவுதம் மேனன், ஷாந்தனு பாக்கியராஜ் ஆகியோர் தோன்றும் இப்படத்தின் ட்ரைலரின் விஷ்வல் டோன் புதுமையாக உள்ளது. ட்ரைலரை அடிப்படையாக வைத்துக் கூற வேண்டுமென்றால்., இது முழுக்க முழுக்க பெண்களின் வாழ்வியலை பேசும் சினிமாவாக இருக்கலாம். பெண்கள் மீதான ஒடுக்குமுறையை அடித்து நொறுக்கும் படியான வசனங்கள் காட்சிகள் இந்த ட்ரைலரில் இடம் பிடித்துள்ளன.

காதலித்து திருமணம் செய்து கொண்டு சென்ற தன் மகளைக் காண வரும் பிரகாஷ்ராஜ் காட்சியும் அவர் பேசும் வசனமும் நெகிழ்ச்சி. அஞ்சலியின் கதாபாத்திரம் தன்பால் ஈர்ப்பாளர்கள் குறித்து பேசும் என்றே தோன்றுகிறது. காரணம் அஞ்சலியும் வெளிநாட்டுப் பெண்ணொருவரும் படுக்கையில் ஒன்றாக இருப்பது போலவும். இருவரும் முத்தமிட்டுக் கொள்வது போலவுமான காட்சிகள் இதில் இருக்கிறன. இவ்வகை காட்சிகள் அநேகமாக தமிழ் சினிமாவிற்கு புதிதுதான். நந்திதா தாஸ் நடித்த Fire, ரிது பர்னாகோஷ் தோன்றும் memories in march போன்ற சில சினிமாக்கள் தன்பால் ஈர்ப்பை மையமாக வைத்து உருவாக்கப்படிருந்தாலும் கூட அவை வேற்று மொழிப் படங்களே. தமிழில் இப்படி ஒரு துணிச்சலான கதை என்பது நிச்சயம் ரசிகர்களுக்கு புதுமையாக இருக்கும்., கூடவே சமுதாயத்தில் புதிய விவாதங்களை உருவாக்கும் சாத்தியங்களும் இந்தப் பாவக்கதைகள் சினிமாவில் உள்ளது. கவுதம் மேனனிடம் கல்பனா சாவ்லா குறித்து பேசும் பெண் பிள்ளையின் காட்சியும், தன் மகளை கையில் ஏந்தி கவுதம் மேனன் சுற்றும் ஷாட்டும் பேரழகு.

பெண்பிள்ளைகளின் கனவு, தன்பால் ஈர்ப்பு, காதல் திருமணம் செய்து கொண்ட மகள், இஸ்லாமியப் பெண்ணுக்கு காதல் கடிதம் எழுதும் சாந்தனு, “இதெல்லாம் இப்படித் தான் இருக்கனும்னு ஊரு முடிவு பண்ணுது.” என்ற பஞ்ச் வசனம் ஆகியவை எல்லாம் இப்படத்தின் மீது இருக்கும் எதிர்பார்ப்பை எகிறவைத்துள்ளது. அனைத்திலும் அதிகமாக “ஒரு குடும்பத்தோட மானம், கவுரவம், ஆணவம் இத வீட்ல இருக்க பொம்பளைங்க தான் சுமக்குறாங்க., இறக்கி வைக்கவே கூடாது வாழ்க்க பூரா.” என சிம்ரன் வசனம் பேசிய கையோடு தன்னோடு இருக்கும் சிறுமியை தள்ளிக் கொல்லும் காட்சி பேரதிர்ச்சி.

பாவக்கதைகள் நிகழ்த்தப் போகும் மாயத்தை அனுபவிக்க இம்மாதம் 18ஆம் தேதி வரை காத்திருப்போம்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com