'பாவக்கதைகள்' ஆந்தாலஜியில் பக்குவமான நடிப்பு... யார் இந்த பதம் குமார்?

'பாவக்கதைகள்' ஆந்தாலஜியில் பக்குவமான நடிப்பு... யார் இந்த பதம் குமார்?
'பாவக்கதைகள்' ஆந்தாலஜியில் பக்குவமான நடிப்பு... யார் இந்த பதம் குமார்?

சினிமா ஒரு விஷுவல் மேஜிக். இந்த வெள்ளித்திரையை நோக்கி எதை எதிர்பார்த்து நீங்கள் போகிறீர்களோ, அது அப்படியே கிடைக்கும் என்று சொல்ல முடியாது. நடிகராக வேண்டும் என நினைத்தவரை இயக்குநராக்கிவிடும். இயக்குநராக வந்தவரை தயாரிப்பாளராக்கிவிடும். படம் தயாரிக்க வந்தவரை நடிகராக்கிவிடும். இதற்கு பல உதாரணங்கள் உண்டு. இயக்குநர் கனவோடு சென்னை வந்த நா.முத்துக்குமார் பாடலாசிரியர் ஆனார். ஒளிப்பதிவாளராக இருந்த தங்கர் பச்சான் இயக்குநரானார். இப்படி சில உதாரணங்களைச் சொல்லலாம். அதே நேரம் பாரதிராஜா, டி.ராஜேந்தர், கமல்ஹாசன் போன்றோர் சினிமாவில் ஒன்றுக்கும் மேற்பட்ட பிரிவுகளில் தங்களுக்கான அடையாளங்களை உருவாக்கிக் கொண்டவர்கள்.

சமீபத்திய உதாரணமாக வைரல் டாக்காக இருப்பவர் பதம் குமார். 'பாவக்கதைகள்' ஆந்தாலஜி சினிமா கடந்த வாரம் நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகி பெரும் விவாதங்களை உருவாக்கியது. வெற்றிமாறன், சுதா கொங்கரா, கவுதம் மேனன், விக்னேஷ் சிவன் உள்ளிட்டோர் இணைந்து இயக்கிய இப்படத்தில் ‘லவ் பண்ணா உட்றணும்’ என்ற பாகத்தை இயக்கியவர் விக்னேஷ் சிவன்.

இக்கதையில் அஞ்சலியின் அப்பாவாக நடித்திருப்பவர் பதம் குமார். இந்த எபிசோடு குறித்து இருவேறு விமர்சனங்கள் இருந்தபோதும் பதம் குமாரின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. இறுக்கமான முகம், வில்லனுக்கே உண்டான பார்வை, குறைந்த வசனத்தில் அழுத்தமான கோவம் என இவர் தனக்கான பொறுப்பை அருமையாக செய்திருக்கிறார். ஒரு நடிகராக பதம் குமாருக்கு இதுவே முதல் படம். ஆனால், பதம் குமார் இந்திய சினிமாவிற்கு புதியவர் அல்ல. அவரது தந்தை வேணு தெலுங்கு சினிமாவில் பிரபல ஒளிப்பதிவாளர். HS வேணு என அறியப்படும் அவர், இந்திய அளவில் 160 திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். துர்க்காமா, ஜெகன் மோகினி ஆகிய படங்கள் இவரது ஒளிவண்ணத்தில் உருவானவைதான்.

தனது தந்தை HS வேணுவின் வழிகாட்டுதல் படி வளர்ந்த பதம் குமார் தந்தையைப் போல ஒளிப்பதிவாளராகவே தன்னுடைய கலைப் பயணத்தை துவங்கினார். தெலுங்கு மற்றும் கன்னட மொழிப் படங்களுக்கு பதம் குமார் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். சுபாரி, சாம்பியன் என சில இந்திப் படங்களை இவர் இயக்கினார். அதன்பிறகு வெற்றிகரமான தயாரிப்பாளராக அவதாரமெடுத்தார். தற்போது தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமாகியிருக்கிறார். தமிழில் விக்னேஷ் சிவன் இயக்குநராக அறிமுகமான சினிமா 'போடா போடி'. இப்படத்தின் தயாரிப்பாளர் பதம் குமார். தன்னை இயக்குநராக அறிமுகம் செய்த பதம் குமாரை 'பாவக்கதைகள்' மூலம் வில்லனாக அறிமுகம் செய்திருக்கிறார் விக்னேஷ் சிவன்.

பதம் குமார் இது குறித்து ஒரு பேட்டியில் கூறும்போது, "நீங்கள் என்னை இயக்குனராக்கினீர்கள். நான் உங்களை நடிகராக்குகிறேன்" என்று விக்னேஷ் சிவன் உணர்வுபூர்வமாக சொன்னதாகவும். “அதன் காரணமாகவே பாவக்கதைகளில் நடித்தேன்” என்றும் கூறியிருக்கிறார்.மேலும் “உலகஅழகி ஆவதற்கு முன்பே தனது படத்தில் நடிக்க ஒப்பந்தமானர் ஐஸ்வர்யாராய்” என்றும், பிறகு சில காரணங்களால் அது நடக்காமல் போனது என்றும் ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார் பதம் குமார்.

நிச்சயம் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக பதம்குமார் வலம் வருவதற்கான அனைத்து சாத்தியங்களும் உண்டு.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com