பழங்குடியினத் தலைவரின் பயோபிக்; பாலிவுட்டில் அறிமுகமாகும் பா. ரஞ்சித் - புதிய அப்டேட்

பழங்குடியினத் தலைவரின் பயோபிக்; பாலிவுட்டில் அறிமுகமாகும் பா. ரஞ்சித் - புதிய அப்டேட்
பழங்குடியினத் தலைவரின் பயோபிக்; பாலிவுட்டில் அறிமுகமாகும் பா. ரஞ்சித் - புதிய அப்டேட்

இயக்குநர் பா. ரஞ்சித் பாலிவுட்டில் அறிமுகமாகும் புதிய படத்தின் படப்பிடிப்பு, இந்த ஆண்டு இறுதியில் துவங்கவுள்ளதாக தயாரிப்புக் குழு அறிவித்துள்ளது.

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநரான பா. ரஞ்சித், ஒடுக்கப்பட்ட மக்களின் வலி நிறைந்த கதைகளை, திரைப்படமாக இயக்கியும், தயாரித்தும் வெற்றிபெற்று வருகிறார். இவர் இயக்கத்தில் வெளிவந்த ‘அட்டக்கத்தி’, ‘மெட்ராஸ்’, ‘கபாலி’, ‘காலா’, ‘சார்பட்டா பரம்பரை’ படங்கள் வித்தியாசமான கதைக்களத்தை கொண்டு இருந்ததால், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்றது.

அதேபோல், இவரது நீலம் தயாரிப்பு நிறுவனம் தயாரித்து வெளிவந்த ‘பரியேறும் பெருமாள்’, ‘இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’ ஆகியப் படங்களும் விமர்சனரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றன. தற்போது நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ் ஜெயராம் மற்றும் துஷாரா விஜயன் நடிப்பில் ‘நட்சத்திரம் நகர்கிறது’ படத்தை பா. ரஞ்சித் இயக்கி வருகிறார்.

இந்தப்படத்தின் பணிகள் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில், பா. ரஞ்சித் பாலிவுட்டில் அறிமுகமாகும், புதிய படத்தின் படப்பிடிப்பு, இந்த ஆண்டு இறுதியில் துவங்கவுள்ளதாக தயாரிப்புக் குழு அறிவித்துள்ளது. 19-ம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்களிடமும் மற்றும் உள்நாட்டு நிலவுடமைதாரர்களிடமும் அடிமைப்பட்டிருந்த, பழங்குடி மக்களுக்காகப் போராடியவர் ஜார்கண்ட் பழங்குடியின தலைவர் பிர்சா முண்டா.

இவரின் வாழ்க்கையை இந்தியில் பா. ரஞ்சித் படமாக இயக்கவுள்ளார். இது குறித்த அறிவிப்பு ஏற்கனவே வெளியாகியிருந்த இருந்தநிலையில், இந்தப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. 'உழுபவனுக்கே நிலம் சொந்தம்' என்று அறைகூவல் விடுத்த பழங்குடியின தலைவர் பிர்சா முண்டாவின் வாழ்க்கை வரலாறு படமாக உருவாக்கவுள்ள, இந்தப்படத்தை நமா பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

'பிர்சா' என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப்படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டின் இறுதியில் தொடங்க உள்ளது. இந்தப்படத்தின் மூலம் இயக்குநர் பா.ரஞ்சித் பாலிவுட் திரையுலகில் அறிமுகமாகவுள்ளார். இந்தப் படத்திற்காக பிர்சா வாழ்ந்தப் பகுதிகளில், படக்குழு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு தகவல்களை சேகரித்து வருகிறது.

பிர்சா பிறந்த நவம்பர் 15-ம் தேதியை, பழங்குடியினர் திருநாளாக கொண்டாட இந்திய அரசு அறிவித்துள்ளநிலையில், அந்த தேதியில் படப்பிடிப்பு ஆரம்பிக்கலாம் என்று கூறப்படுகிறது.  இதனிடையே 'அறம்’ படத்தை இயக்கிய கோபி நயினார், பிர்சா முண்டாவின் வாழ்க்கை வரலாற்றை திரைக்கதையாக தான் எழுதி வைத்திருப்பதாக கூறி இருந்த நிலையில், தற்போது இந்தப்படத்தை பா.ரஞ்சித் இயக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com