Suzhal 2 | முதல் பாகத்தின் சுவாரஸ்யத்திற்கு ஈடுகொடுக்கிறதா சுழலின் இரண்டாம் பாகம்..?
Suzhal 2(2.5 / 5)
ஒரு கொலை, அந்தக் கொலையை செய்ததாக எட்டு பேர் ஒப்புக்கொள்கிறார்கள். உண்மையான குற்றவாளி யார் என்பதே சுழல் 2.
சென்ற சீசனில் நந்தினி (ஐஸ்வர்யா ராஜேஷ்) செய்த கொலைக்காக சிறையில் இருக்கிறார் என துவங்குகிறது கதை. நந்தினி செய்தது தற்காப்பு தான், என வாதாடி வெளியே கொண்டு வர முயல்கிறார் வழக்கறிஞர் செல்லப்பா (லால்), அதற்கு ஆதரவாக தன்னாலான உதவிகளை செய்கிறார் சக்கரவர்த்தி (கதிர்). இந்த சமயத்தில் திடீரென ஒரு நாள், துப்பாக்கியால் சுடப்பட்டு அவரது வீட்டில் இறந்துகிடக்கிறார் செல்லப்பா. அதே வீட்டில் அலமாறியில் ரத்தக்கறையுடன், எந்த துப்பாக்கியில் செல்லப்பா சுடப்பட்டாரோ அதே துப்பாக்கியுடன் பிடிபடுகிறார் முத்து (கௌரி கிஷன்). முத்து கைது செய்யப்பட்டது தொலைக்காட்சிகளுக்கு கசியவிடப்பட, அதற்கடுத்து விளைவுகள் விஸ்வரூபம் எடுக்கின்றன. செல்லப்பாவை கொலை செய்தததாக ஏழு பெண்கள் வெவ்வேறு ஊர் காவல் நிலையங்களில் சரண் அடைகின்றனர். உண்மையில் செல்லப்பாவை கொன்றது யார்?, இந்த எட்டு பெண்கள் யார்? ஐஸ்வர்யா ராஜேஷ் வழக்கு என்ன ஆனது என்பதெல்லாம் தான் சுழல் 2 சீரிஸின் மீதிக்கதை.
இன்வஸ்டிகேஷன் த்ரில்லர் பொறுத்தவரை, என்ன நடந்தது என்பதைப் பொறுத்தே, கதை மீதான பார்வையாளர்களின் சுவாரஸ்யம் அதிகரிக்கும். அந்த விதத்தில் கதை துவங்கி முக்கிய கதாப்பாத்திரம் கொலை செய்யப்பட்டதும், அதன் பின்னணியை தெரிந்து கொள்ள ஏற்படும் ஆர்வம், அக்கொலையை செய்ததாக 8 பெண்கள் சரணடைந்ததும் இன்னும் அதிகமாகிறது. நடிகர்கள் பொறுத்தவரை ஐஸ்வர்யா ராஜேஷ், கதிர், அஷ்வினி நம்பியார், கொலைக் குற்றத்தை ஏற்கும் எட்டு பெண்களான கௌரி கிஷன், சம்யுக்தா, மோனிஷா ப்ளஸ்ஸி, ரினி, ஷிரிஷா, அபிராமி போஸ், நிகிலா ஷங்கர், கலைவாணி பாஸ்கர் ஆகிய முக்கிய பாத்திரங்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையை ஓரளவுக்கு சிறப்பாகவே செய்திருக்கின்றனர். லால், ஓ ஏ கே சுந்தர், சாந்தினி, மஞ்ஜிமா மோகன் போன்றோரும் கவனிக்க வைக்கின்றனர். மிக அசட்டடையாக பணியாற்றுவது, ஜூனியர் இடம் பணியாற்ற ஈகோ பார்ப்பது என சரவணன் அசத்துகிறார். மிக இயல்பான அவரது நடிப்பு முக்கியத்துவம் பெருகிறது.
எந்த ஒரு க்ளூ கிடைத்தாலும், அது அடுத்த கட்டத்துக்கு நகராமல் ஒரு சுழல் போல சுற்றி சுற்றி துவங்கிய இடத்துக்கே வருவது போல் வடிவமைக்கப்பட்டிருக்கும் திரைக்கதை நன்று. எமோஷனலான காட்சிகள், அழுத்தமாக பதிவு செய்யப்பட்டுள்ள விதமும் குறிப்பிட வேண்டியது. அஷ்டகாளிகள் கதையை, இந்த திரைக்கதைக்குள் புகுத்தி இருந்தது நல்லதொரு உணர்வைக் கொடுக்கிறது. பொது சமூகத்திற்கு ஏற்றது போல், பாலியல் குற்றங்களுக்கு பழிதீர்க்கும் கொலைகளே தீர்வு என முன் வைப்பதுதான் சினிமாவின் வரலாறு. அப்படி இல்லாமல், பழிதீர்க்கும் கொலைகள் ஒரு நாளும் யாருக்கும் மருந்தாக அமையாது. அது மேலும் நம்மை குற்ற உணர்ச்சிக்குள் தான் தள்ளும் என்பதை அழுத்தமாக சொல்லியிருக்கிறார்கள் புஷ்கர் காயத்ரி இணை. அதற்கு வாழ்த்துகள். சீரிஸின் இன்னொரு பலம், சாம் சி எஸ்ஸின் பின்னணி இசை. முதல் பாகத்தைப் போலவே, இதிலும் மனிதரின் உழைப்பு அபாரமானது.
இந்த சீரிஸின் குறைகள் எனப் பார்த்தால், எடுத்த விஷயத்தை சொல்வதில் தேவை இல்லாமல் வளவளவென இழுத்தடிப்பது. ஒவ்வொரு எப்பிசோடிலும் தேவை இல்லாமல் இழுக்கப்படும் காட்சிகள் ஏராளம். முன்பு சொன்னது போல, ஒரு சுழல் போல அமைக்கப்பட்டுள்ள திரைக்கதை மைனஸிலும் சொல்லலாம். கதை நகராமல் துவங்கிய இடத்திலேயே சுற்றுகிறது. முக்கிய கதாப்பாத்திரங்களான ஐஸ்வர்யா ராஜேஷ், கதிர் சம்பந்தப்பட்ட காட்சிகள் எதிலும் துளியும் சுவாரஸ்யம் இல்லை. ஒரு பக்கம் ஐஸ்வர்யா ராஜேஷின் ஜெயில் வாழ்க்கை, சம்பந்தமே இல்லாமல் செல்லப்பாவின் குடும்பம் சம்பந்தப்பட்ட ரகசியம், கயல் சந்திரன் பற்றிய கதை, எதேர்ச்சையாக மஞ்சிமா மோகன் ஒருவரை சந்திப்பது என பல சம்பவங்கள் நடந்தாலும், எதிலும் ஒரு லாஜிக்கோ, நம்பகத்தன்மையோ இல்லை. அதை விட சிக்கல் அதன் மூலம் கதையில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்பதே பெரும் பிரச்சனை.
”விழறதுக்கு தரைனே ஒன்னு இல்லைனா?” என வினோதமாக ஆரம்பித்து ”பேட் இருந்தா தானே பால் போட முடியும்” என சில்லித்தனமாக வரை சீரிஸ் முழுக்க பல கதாப்பாத்திரங்கள் தத்துவ சுழலில் நம்மை சுருட்டுகிறார்கள். ஆனால் அவை கேட்கையில் சிரிப்பாக தான் இருக்கிறது என்பதே சோகம். வசனங்களில் ரைமிங் சுவாரஸ்யத்தைக்கூட்டும் தான். அதற்காக, ' அரவாணி கடைல பிரியாணி சாப்பிட யாருக்கும் பிடிக்கும்' என்றெல்லாம் வசனம் எழுதுவது என்ன மாதிரியான ரைமிங் மனநிலை என தெரியவில்லை. பார்வையாளர்களை எவ்வளவு கேசுவலாக எடுத்துக்கொள்கிறார்கள் என்பதற்கு பின்வரும் வசனங்கள் உதாரணம். மூன்றாவது எபிசோடில் சரவணன் கதிரிடம் , " என்ன ஷெர்லாக் என்ன கண்டுபிடிச்சு இருக்கீங்க?" என கேட்கிறார். எட்டாவது எபிசோடில், கதிர் சரவணனிடம் , " இந்த ஷெர்லாக் ஹோம்ஸ் எல்லாம் பாத்து இருக்கீங்களா" என கேட்க, சரவணனோ, " இந்த இங்கிலீஷ் எல்லாம் பேசாதப்பா" என்கிறார். என்னங்க சார், இந்த அளவுக்கா Taken for Granted மோடுல சீரிஸ் எடுக்கணும்.
கண்டிப்பாக மையக் கதாப்பாத்திரம் தவறானவராக இருக்கப் போவதில்லை என்பது எளிதில் நமக்குத் தெரிந்ததே, ஆனால் தேவை இல்லாமல் அவர் மீது சுமத்தப்படும் நெகட்டிவ் பிம்பம் சற்றும் எடுபடவில்லை. மேலும் இறுதியில் குற்றவாளி சம்பந்தப்பட்டு வரும் ட்விஸ்ட், வலிந்து திணிக்கப்பட்ட ஒன்றாகவே இருக்கிறது.
மொத்தத்தில் முதல் பாகத்தில் இயல்பாக நகர்ந்த கதை, சுவாரஸ்யமான ட்விஸ்ட் எதுவும் இரண்டாம் சுழலில் இல்லை. மிக மேலோட்டமாக, அழுத்தமே இல்லாமல் உருவாக்கப்பட்டிருக்கிறது இந்த பாகம். ஓரளவு சுமாராக இருந்தாலே போதும் என்பவர்களுக்கு இந்த சீசன் திருப்தி அளிக்கலாம்.