கால் நூற்றாண்டுகள் கழித்தும் ஸ்டைலா.. கெத்தா.. நிற்கும் நெட்ஃப்ளிக்ஸ்! சாதனைப் பயணம் #QuickRewind

உலகின் முன்னணி ஸ்ட்ரீமிங் நிறுவனமான நெட்ஃபிளிக்ஸ் 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
25 years of Netflix
25 years of NetflixNetflix

நெட்ஃப்ளிக்ஸ்... இன்றைய தேதியில் அதிக அளவில் Contentகளை வைத்திருக்கும் ஒரே ஓடிடி தளம்.

மற்ற தளங்களைப் போல வருட சந்தா கிடையாது, மாதா மாதம் கட்டணம் செலுத்த வேண்டும். முன்பிருந்த பாஸ்வேர்ட் பகிர்வையும் வரைமுறைப்படுத்தி தடுத்திருக்கிறது. அதை எல்லாம் தாண்டியும் நெட்ஃப்ளிக்ஸ் நின்று ஆட காரணம் ஒவ்வொன்றையும் மிகத் தரமாக கொடுப்பது. கொரோனாவுக்குப் பிறகு ஓடிடி தளங்களின் வளர்ச்சி அனைவரும் அறிந்ததே.

ஆனால் நெட்ஃப்ளிக்ஸ் அதை வெறும் சந்தர்பமாகப் பார்க்காமல் சந்தையாக இந்தியாவை எப்படி கவரலாம் என்ற திட்டத்தைப் போட்டது. மற்ற தளங்கள் திரைப்படங்கள் வெப் சீரிஸ் என தலையை பிய்த்துக் கொண்டு அலையும் போது, நெட்ஃப்ளிக்ஸ் ஆவணப்படங்களின் மேல் வெளிச்சத்தைப் பாய்ச்சியது. நம்மை நடுங்க வைக்கும்படியான The Burari Deaths, நெகிழச் செய்யும் The Elephant Whisperers என நம் ஊரின் கதைகளை சர்வதேச அளவில் கொண்டு சேர்க்கிறது. சேர்ந்தே ஆங்கிலத்தில் The Social Dilemma போன்ற அட்டகாசங்களையும் கொடுக்கிறார்கள். இப்போது அவர்கள் தயாரிப்பில் இருக்கும் வீரப்பன் பற்றிய ஆவணப்படம் வரை அதற்குப் பின் இருக்கும் உழைப்பும், திருத்தமான தகவல்களும் எப்போதும் வியப்பைக் கொடுப்பவை.

இவ்வளவு பெருமைகளைக்கொண்ட நெட்ஃப்ளிக்ஸ், இந்த ஆண்டு தனது 25-வது வருடத்தில் கால்பதிக்கிறது! அப்டியே ஸ்டைலா, கெத்தா...!

இந்த நேரத்தில், இந்த கால் நூற்றாண்டு பயணத்தில், நெட்ஃப்ளிக்ஸ் கடந்த வந்த பாதையொன்றை, இங்கே பார்ப்போம்...!

1) ஆன்லைன் மூலம் டிவிடியை வாடகைக்கு விடும் சிறு நிறுவனமாக தொடங்கப்பட்டது நெட்ஃபிளிக்ஸ். அதன்படி அமெரிக்காவில் 14 ஏப்ரல், 1998 அன்று ரீட் ஹேஸ்டிங்ஸ் மற்றும் மார்க் ராண்டால்ஃப் ஆகியோரால் ஆன்லைன் மூலமாக டிவிடியை வாடகைக்கு விடும் சேவை நிறுவனமாக தொடங்கப்பட்டதுதான் நெட்ஃபிளிக்ஸ்.

Netflix
NetflixFile Image

ஆன்லைன் மூலமாக டிவிடியை ஆர்டர் செய்தால் வீடு தேடி வந்துவிடும். நெட்ஃபிளிக்ஸ் தனது சந்தாதாரருக்கு அனுப்பிய முதல் டிவிடி, ‘பீட்டில்ஜூஸ்’ (Beetlejuice) ஆகும். சுவாரஸ்யமாக, இது ஒரு வெள்ளை நிற கவரில் அனுப்பப்பட்டது. அதெலென்ன விசேஷம் என்கின்றீர்களா? நெட்ஃபிளிக்ஸின் அடையாள சின்னமான சிவப்புதான். ஆனால் இது வெள்ளை கவரில் அனுப்பப்பட்டது!

2) 2002இல் நெட்ஃபிளிக்ஸ் நிறுவனத்தின் பங்குகள் ஐபிஓ மூலம் பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டது. அந்த நேரத்தில் நெட்ஃபிளிக்ஸ் நிறுவனத்தில் 6 லட்சம் சந்தாதாரர்கள் இருந்தனர். தற்போது நெட்ஃபிளிக்ஸில் 230 மில்லியன் சந்தாதாரர்கள் உள்ளனர்.

3) 2007 ஜனவரியில் ஸ்ட்ரீமிங் சேவையைத் தொடங்கியது நெட்ஃபிளிக்ஸ். அதுவரை இணைய உலகில் ஸ்ட்ரீமிங் தளம் என எதுவுமில்லை என்பதால் நெட்ஃபிளிக்ஸ் தளத்துக்கு அதிகமான சந்தாதாரர்கள் வரத்துவங்கினர்.

4) ஸ்ட்ரீமிங் தளமாக உருவான பிறகு சர்வதேச அளவில் விரிவடையத் தொடங்கியது. கனடா, லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் தீவுகள் ஆகிய இடங்களில் முதலில் இதை விரிவுபடுத்தினர். அப்படி தொடங்கிய அந்த விரிவுப்படுத்தும் பணி, இன்று 190 நாடுகளில் டிவி சீரிஸ், டாக்குமெண்டரிஸ், சிறப்புப் படங்கள் மற்றும் மொபைல் கேம்ஸ் உடன் பல ஜானர்கள் மற்றும் மொழிகள்.... என விரிவடைந்து கொண்டேஏஏஏஏஏ இருக்கிறது!

இந்த 25-வது வருடத்தில், எங்களின் டிவிடி சேவையை முடித்துக்கொள்கிறோம். செப்டம்பர் 29, 2023-ல் இப்பயணம் முடிவடைகிறது

நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம்

5) நெட்ஃபிளிக்ஸின் ஸ்ட்ரீமிங் சேவை பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் அடுத்தக்கட்டமாக அது ஓடிடி துறைக்கு அடித்தளமிட்டது. அதே நேரத்தில் டிவிடி வணிகம் சரிய ஆரம்பித்தது. ஆனால், எதிர்பார்த்திராத அளவுக்கு ஸ்ட்ரீமிங் சேவை வெற்றியடைந்தது. இந்தப் புது முயற்சிக்குக் கிடைத்த வரவேற்பால், உலகெங்கும் ஓடிடி தளங்கள் உருவாக ஆரம்பித்தன.

6) படங்களை வெளியிடுவது மட்டுமின்றி சொந்தமாக படங்கள் மற்றும் இணையத் தொடர் தயாரிப்பிலும் இறங்கியது நெட்ஃபிளிக்ஸ். அதன்படி 2012 ஆம் ஆண்டில் தயாரிப்புத் துறையில் நுழைந்த நெட்ஃபிளிக்ஸின் முதல் தயாரிப்பு லில்லிஹாம்மர் (Lilyhammer) தொடராகும்.

7) அதற்குப்பின் ஸ்மார்ட் போனின் வருகை, ஓடிடிக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்ட ஸ்மார்ட் டிவி, குறைந்த செலவில் அதிவேக இணைய சேவை ஆகியவை நெட்ஃபிளிக்ஸின் வளர்ச்சியை சிகரத்துக்குக் கொண்டு சென்றிருந்து.

8) ஓடிடி சந்தையில் கடும் போட்டிச் சூழல் உருவானதைத் தொடர்ந்து கடந்த ஆண்டில் முதன்முறையாக பெருமளவிலான சந்தாதாரர்களை இழந்த தகவலை வெளியிட்டது நெட்ஃபிளிக்ஸ். 100 நாட்களுக்குள் 2 லட்சம் சந்தாதாரர்களை அந்நிறுவனம் இழந்திருப்பதாக அறிவித்தது. இதையடுத்து சந்தாதாரர்களை தக்கவைக்கவும் புதிய சந்தாதாரர்களை கொண்டுவரவும் கட்டணத்தை 20% முதல் 60% வரை குறைத்தது. இதற்கு இந்தியா உள்பட பல நாடுகளில் இருந்தும் அந்நிறுவனத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

9) கொரோனாவுக்குப்பிறகு கணினி தாண்டி ஸ்மார்ட்போன், லேப்டாப், டேப்லெட்டிலும் நெட்ஃபிளிக்ஸின் ஸ்ட்ரீமிங் சேவை பயனாளிகள் மத்தியில் விரிவடைந்தது.

10) நெட்ஃபிளிக்ஸ் தயாரிப்பில் உருவான பல்வேறு படங்கள், தொடர்கள் சர்வதேச விருதுகளை வாங்கி குவித்திருக்கிறது. இதுவரை நெட்ஃபிளிக்ஸ் தயாரித்த 8 திரைப்படங்கள் ஆஸ்கர் விருதுகளுக்காக சிறந்த படத்திற்கான பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. அவற்றில் ரோமா மற்றும் தி பவர் ஆஃப் தி டாக் ஆகிய இரண்டு படங்கள் சிறந்த இயக்குனருக்கான விருதுகளை வென்றது. நம் ஊரின் கதையை பேசிய The Elephant Whisperers ஆவணப்படம், ஆஸ்கரையும் அள்ளி வந்தது குறிப்பிடத்தக்கது!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com