Modern Love Chennai poster
Modern Love Chennai postertwitter

காதல் விரும்பிகள் மிஸ் பண்ணிடாதீங்க! : காதலைக் கொண்டாடுகிறதா இந்த Modern Love Chennai வெப் சீரிஸ்..?

இந்த உலகம் காதலால் ஆனது. காதல் என்பது பிரிவு, வலி, மகிழ்ச்சி, இன்பம், காமம் என எதை நோக்கி வேண்டுமானாலும் நம்மை இட்டுச் செல்லலாம். இவை எல்லாவற்றையும் மீறி காதல் என்பது ஒரு நம்பிக்கை.
modern love chennai(3.5 / 5)

ஒவ்வொரு நகரமாய் சுற்றி வந்த 'மாடர்ன் லவ்', தற்போது அனல் அடிக்கும் சென்னைக்கு வந்திருக்கிறது. ஆறு கதைகள், ஆறு இயக்குநர்கள் எப்படி வந்திருக்கிறது 'மாடர்ன் லவ் சென்னை'..?

லால்குண்டா பொம்மைகள் :

Modern Love Chennai
Modern Love Chennai JONESCLICKZ

காதல்ங்கறது ஒருதடவை தான் பூக்கும்னு எல்லாம் சுத்தாதீங்கடா, அதெல்லாம் அடிக்கடி பூக்கும். நமக்கான பூவ நம்மதான் காதுல சொருகிக்கணும் என்பதாக ரகளையுடன் ஆரம்பிக்கிறது ராஜுமுருகன் இயக்கியிருக்கும் ' லால்குண்டா பொம்மைகள்'. பிஸ்கட் கடையில் வேலை பார்க்கும் ஷோபா, அப்போதுதான் ஒரு பிரிவில் இருந்து மீண்டிருக்கிறார். அவளை மீண்டும் அடுத்த காதலுக்குள் தள்ள முயல்கிறார் வைஜெயந்தி. அந்தக் காதல் நிறைவேறியதா இல்ல மீண்டும் ஷோபாவை புதைக்குழிக்குள் தள்ளியதா என்பதாக நீள்கிறது ' லால்குண்டா பொம்மைகள்.

Modern Love Chennai
Modern Love Chennai JONESCLICKZ

கதையில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரமும் ரகளையாக, அதே சமயம் இயல்பாக எவ்வித துறுத்தலும் இல்லாமல் காமெடி செய்திருக்கிறார்கள். ' யாரு சாமி இது இந்தக் கிழி கிழிக்கறா' மோடில் பிரமாதப்படுத்தியிருக்கிறார் ஷோபாவாக வரும் ஸ்ரீ கௌரி ப்ரியா. தமிழுக்கு நல்லதொரு அறிமுகம். வைஜெயந்தியாக வரும் வசுந்தராவுக்கும் அழுத்தமானதொரு வேடம். ' ஆம்பளைகளோட வாழ முடியாது.. ஆம்பளைக இல்லாமயும் வாழ முடியாது'; ' உடம்புல மார்க்கும், உள்ளார நோவு இல்லாத பொம்பளையும் எங்கடி இருக்கா' என பல இடங்களில் ராஜூமுருகனின் வசனங்கள் ஈர்க்கின்றன. பாக்கியம் ஷங்கரின் வரிகளில், ஷான் ரோல்டனின் குரலில் ஒலிக்கும் ஜிங்கரு தங்கா, செம்ம கேட்ச்சி மெட்டு. காதல் என்பது நல்லதொரு காம்ப்ரமைஸ். ' காம்ப்ரமைஸ் பண்ணுங்க சார் லைஃப் நல்லா இருக்கும்' என்பதை அழகாகச் சொல்லியிருக்கிறது இந்த லால்குண்டா பொம்மைகள்.

இமைகள் :

நிரந்தரமாய் இருள் சூழும் வாழ்வு வாய்க்கவிருக்கும் பெண்ணுக்கும், அவள் பிரச்னை அறிந்து அவளின் வெளிச்சமாக நிறைந்திருக்க விரும்பும் ஆணுக்குமான காதலே பாலாஜி சக்திவேல் இயக்கியிருக்கும் ' இமைகள்'. நித்தியானந்தமும் தேவியும் கல்லூரி முதலே காதலர்கள். திருமணம் செய்துகொள்ளலாமா என்கிற ஆவலுடன் இருக்கும் நித்யாவிடம் தன் பிரச்னை குறித்து முதல்முறையாக பேசுகிறாள் தேவி. காதலில் இனிக்கும் எல்லா பழங்களும், காதலுக்குப் பின்னும் கடினமான திருமண சூழலிலும் இனிக்கிறதா என்பதாய் விரிகிறது இமைகள். நித்தியாந்தமாக அசோக் செல்வன். சமீப காலங்களில் அசோக் செல்வன் அளவுக்கு தான் ஏற்கும் கதாபாத்திரங்களுக்கு நியாயம் செய்யும் நடிகர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். ' உனக்காகவே வாழ்ந்துகொண்டிருக்கிறேன் , எனக்கான வாழ்க்கையை எப்போது வாழப்போகிறேன்' என கேட்கும் இடத்திலும், விட்டுவிட்டு பின் மீண்டும் நிற்கும் இடத்திலும் மனதில் பதிகிறார் அசோக். தேவியாக TJ பானுவிற்கு அழுத்தமானதொரு வேடம். நம் வாழ்வு முழுமைக்கும், நமக்காக இருப்பார் என நம்பியிருக்கும் வேளையில், நம்மை நிர்கதியாய் விட்டுவிட்டு, எல்லாமுமாய் இருந்த அந்த நபர் நம்மைவிட்டு போனால் எப்படியிருக்கும். அப்படியானதொரு துயரமான சூழலை எதிர்கொண்ட ஒருவர், கடைவீதியில் TJ பானு உடைந்து உதடுகள் விம்மி அழும் அந்தக் காட்சியை எளிதில் கடந்துவிட முடியாது. நம் இமைகளில் கண்ணீரைச் சுரக்க வைத்ததில் பானுவின் வெற்றியிருக்கிறது. ' நான் நீ போனதுக்காக அழல. ஆனா, என்னிக்குமே நீ இப்படி போகமாட்டேன்னு நம்பினேன்ல. அதுக்குத்தான் அழறேன்' பாலாஜி தரணிதரனின் வரிகளில் காதலின் நம்பிக்கை கொட்டுகிறது. தேவிக்கிருக்கும் பிரச்னையை பார்வையாளனுக்கு கடத்துவதில் வெற்றி கண்டிருக்கிறது ஜீவா ஷங்கரின் கேமரா. பின்னணி இசையிலும் பேரன்பே பாடலிலும் வின்டேஜ் யுவன்.

காதல் என்பது கண்ணுல ஹார்ட் இருக்குற ஈமோஜி:

Modern Love Chennai
Modern Love Chennai

சினிமா வழி தன் வாழ்க்கையை காதலும் காதல் நிமித்தமுமாய் வாழும் மல்லிகாவின் கதையே கிருஷ்ணகுமார் ராமகுமார் இயக்கியிருக்கும் இந்த ' காதல் என்பது கண்ணுல ஹார்ட் இருக்குற ஈமோஜி'. ஜிவி பிரகாஷின் இசையில் வரும் 'கூக்கூன்னு ' பாடல் செம்ம பெப்பி நம்பர். கௌதம் மேனனின் ரொமான்டிக் படங்களில் உடன் பணியாற்றும் ரேஷ்மா கட்டாலா எழுதியிருக்கும் இந்தப் படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்திருக்கிறார். பள்ளிக்காலம் முதல் அடுத்த சில ஆண்டுகளில் மல்லிகா சந்திக்கும் நபர்களும், அவர்கள் மல்லிகாவிற்கு காதலர்களாக மாறுகிறார்களா என்பதாக நீளும் கதையில் போதிய வலு இல்லாததால், எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாமல் அப்படியே 'ஆறுல ஒன்னு ஓக்கே ரகம்பா' வரிசையில் வந்து நின்றுவிடுகிறது. கதைக்குள் சில இடங்களில் easter eggs, நலன், கிருஷ்ணா, பரத்வாஜ் ரங்கன்கேமியோ போன்றவை இருந்தாலும், இன்னும் சற்று அழுத்தமான கதையையும், அதற்கேற்ற நடிகையையும் தேர்வு செய்திருக்கலாமோ என எண்ண வைத்துவிடுகிறது. பள்ளிப் பருவம், கல்லூரிப் பருவம், வேலைக்காலம், உடல் பருமன் காலம் என பல்வேறு கெட்டப்களில் வரும் ரீதுவர்மா, காதலை நமக்குக் கடத்துவதற்குப் பதிலாக, கடுப்புகளைக் கடத்திவிடுகிறார். வெரி சாரி ரீது.. :(

மார்கழி :

Modern Love Chennai
Modern Love Chennai

பால்ய காலக் காதல் குறித்து பேசுகிறது அறிமுக இயக்குநர் அக்சய் சுந்தர் இயக்கியிருக்கும் 'மார்கழி'. தாய் தந்தையரின் பரஸ்பர விவாகரத்திற்குப் பின் தந்தையுடன் வளர்கிறார் ஜாஸ்மின். சர்ச் வளாகத்தில் அவள் சந்திக்கும் மில்டன், அவளே அறியாமல் அவளின் முதல் ஆதர்சம் ஆகிறான். இருவருக்குமான காதலைச் சொல்கிறது பாலாஜி தரணிதரனின் எழுத்தில் உருவாகியிருக்கும் 'மார்கழி'. இளமை ததும்பும் கதைக்கு , அதைவிட இளமையாய் மெட்டுக்கள் தந்திருக்கிறார் இளையராஜா. 'நெஞ்சில் ஒரு மின்னல்' , ; ' தென்றல்' ராஜாவே எழுதி, பாடியிருக்கிறார். இரண்டுமே அவரின் ஆல் டைம் பெஸ்ட்டில் வரக்கூடிய மெட்டுகள். ஜாஸ்மீனாக சஞ்சுளா சாரதியும், மில்ட்டனாக Chu Khoy Shengம் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். முதல் முத்தம், முதல் கிரஷ், முதல் காதல், முதல் காதல் கனவு என நம் 'முதல் காதல் இணை' பற்றிய நினைவுகளை நிச்சயம் இந்த மார்கழி நினைவுபடுத்திவிடும்.

பறவைக் கூட்டில் வாழும் மான்கள் :

திருமணம் கடந்த உறவை அதனால் நேரடியாக பாதிக்கப்படக்கூடிய மூவரும் அமர்ந்து பேசிக்கொண்டால் எப்படியிருக்கும் என்பதைச் சொல்கிறது பாரதிராஜா இயக்கியிருக்கும் ' பறவைக் கூட்டில் வாழும் மான்கள்'. ரவிக்கும், ரோஹினிக்கும் இடையே மெட்ரோ ரயில் சிநேகம் காதலாய் மாறுகிறது. ரவிக்கு ஏற்கெனவே ரேவதியுடன் திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கின்றார்கள் என்பதால், ரேவதியிடம் இதைப் பற்றிச் சொல்கிறார் ரவி. ரவி, ரோஹினி, ரேவதி மூவரும் இதைப்பற்றி உரையாடுவதே இந்த கதையின் ஒன்லைன். நியூ யார்க் டைம்ஸ் வெளிவந்த கதை, நமக்கு ஏற்றவாறு மாற்றியிருக்கிறார் பிரதீப் குமார் என டைட்டில் கார்டு சொல்கிறது. ஆனால், யதார்த்தம் என்பது சற்றும் இல்லாமல், 'மாடர்ன் லவ் நியூ யார்க் ' லெவல் கதையாக முடிந்துவிடுகிறது இந்த பறவைக் கூட்டில் வாழும் மான்கள். நம்மூர் டைம்ஸ்க்கு மாத்தியிருக்கலாமேப்பா. தன் மீதமிருக்கும் வாழ்க்கை, குழந்தைகள், குடும்பம் என்கிற அமைப்பு என எல்லாமே ஒருநொடியில் முடிந்துவிடும் என்பதை அறியும் ஒரு பெண் இவ்வளவு எளிதாக அதை அணுகுகிறார் என்றால், அதற்கேற்ற திரைக்கதையை அமைத்திருக்க வேண்டும். ' இங்க எல்லாமே replaceable தான்' என்பதைத் தான் சொல்ல வருகிறார்கள் என்றால், அதையும் அழுத்தமாய் சொல்லவில்லை. ' அப்போ அது சரின்னு பட்டுச்சு, அதனால அத செஞ்சேன். இப்போ இது சரின்னு படுது, அதனால இதைச் செய்றேன்' என ரவி சொல்லுமிடம் வெறுமனே வசனமாகவே கடந்துவிடுகிறது. கிஷோர், விஜயலட்சுமி , ரம்யா நம்பீசன், டெல்லி கணேஷ் என எல்லோருமே அவர்களின் கதாபாத்திரங்களை அவ்வளவு அதியற்புதமாய் நடித்திருக்கிறார்கள். ஆனால், யதார்த்தம் என்கிற ஒற்றை சொல்லில் எல்லாமே தவிடுபொடியாகிவிடுகிறது. கவித்துவமான இரண்டு புகைப்படங்கள் மட்டுமே நம்மை ஆத்மார்த்தமாக உணரச் செய்துவிடுமா என்ன ? மெட்ரோ ரயில் பயணங்களில் படிக்கும் பழைய நாவலின் உணர்வை இந்த குறுங்கதை தந்தாலும், அதை , வெறுமனே உரையாடல் வழி நகர்த்தியிருப்பதால் நம்மை சோதிக்கவே செய்கிறது.

நினைவோ ஒரு பறவை :

பிரிந்த காதலை இணைக்க நினைவைவிடவும் வேறு துணை வேண்டுமா என்ன ?. ஆனால், அந்த நினைவே பாதி அழிந்துவிட்டால் என்ன செய்வது?. இந்த பிரபஞ்சம் உயிர்ப்புடன் இருக்க ஒரு துகள் நினைவு போதும் என்பதை காதல் திகட்டத் திகட்டச் சொல்கிறது தியாகராஜா குமாரராஜாவின் ' நினைவோ ஒரு பறவை'. ஒரு சினிமா ஷூட்டிங் மூலம் அறிமுகமாகிறார்கள் 'சாம்' & ' கே'. இனி பேசுவதற்கு ஒன்றுமில்லை என பிரிந்த போன இருவரில் ஒருவருக்கு கடந்த கால நினைவுகள் மறந்துபோகிறது. இன்னொருவருக்கோ நினைவுகள் மறக்காமல் சாபமாக தொடர்ந்து வந்து தொல்லை தருகிறது. பிரிந்துபோன இணையின் காற்று அறை எங்கும் வியாபித்திருக்க, நினைவுகள் மறத்தல் என்பது அவ்வளவு லேசுபட்ட காரியமா என்ன? . ' ஆரண்ய காண்டம்' முதலே பழைய பாடல்களை தக்க இடங்களில் பயன்படுத்தும் சாமர்த்தசாலியான தியாகராஜாவுக்கு இதில் ராஜாவே இசையமைத்திருக்கிறார். காதல் அதன் உச்சத்தில் இருக்கும் போது வரும் ராஜாவின் பின்னணி இசை, ராஜாங்கம். பூமர்த்தனமாக தோன்றலாம். இருந்தாலும் இதை இப்படித்தான் எழுதத் தோன்றுகிறது. வாமிகா 'வாவ்'மிகா. பிரமாதப்படுத்தியிருக்கிறார். 'பார்த்துடா மைக் சின்னதாகிடப்போகுது ' என நக்கல் செய்வதாகட்டும், இணையின் மடியில் அமர்ந்து அழுவதாகட்டும் வாமிகாவின் நடிப்பு அபாரம். கதைக்குள் கதை என்கிற மெட்டா பாணி திரைக்கதையை இந்த கதைக்கு தேர்வு செய்திருக்கிறார் குமாரராஜா. அதனாலேயே சில உரையாடல்கள் ஓவர் கவித்துவமாக மாறிவிடுகிறது. eternal sunshine of a spotless mind, la la land, In the Mood for Love என சில படங்களை இந்தக் குறுங்கதையின் ஒன்லைன் நினைவுபடுத்தினாலும், அவற்றிலிருந்து விலகி நிற்கவே செய்கிறது. சில கதைகள் மனதுக்கு நெருக்கமாய் இருக்கும். ஆனால், மற்றவர்களுக்கு பரிந்துரை செய்யுமளவு சிறப்பானதா என்னும் கேள்விக்கு உட்படுத்தினால், இல்லை என்ற பதிலை நம் மனதே சொல்லும். அப்படியானதொரு படைப்பாகவே எஞ்சி நிற்கிறது இந்த நினைவோ ஒரு பறவை.

வெர்டிக்ட்

இந்த உலகம் காதலால் ஆனது. காதல் என்பது பிரிவு, வலி, மகிழ்ச்சி, இன்பம், காமம் என எதை நோக்கி வேண்டுமானாலும் நம்மை இட்டுச் செல்லலாம். இவை எல்லாவற்றையும் மீறி காதல் என்பது ஒரு நம்பிக்கை. நம்பிக்கையற்ற ஒருவருக்கு , எல்லாம் முடிந்துவிட்டதென நினைக்கும் ஒருவருக்கு மிகப்பெரிய பற்றுதலைக் கொடுக்க வல்லது காதல். இந்த ஆறு குறும்படங்களும் அதை பார்வையாளனுக்குக் கடத்திவிடுவதாலேயே தமிழின் முக்கியமான ஆந்தாலஜி சீரிஸ் என்னும் பெயர் எடுத்துவிடுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com