Maharani
Maharani Maharani Season 3

Maharani Season 3 Review | ஹாட்ரிக் அடித்திருக்கிறதா இந்த 'ராப்ரி தேவி' சீரிஸ்..!

தொடரின் பெரும்பகுதி மதுவிலக்கை சுற்றியும், பழிதீர்த்தலை சுற்றியும் நடக்கிறது. இதனாலேயே முதல் பாகத்தைப் போல இல்லையே என்கிற ஏமாற்றம் கொஞ்சம் வருகிறது.
Maharani(3 / 5)

சிறையில் இருக்கும் ராணிபாரதி தன் எதிராளிகளை இந்த சீசனில் என்ன செய்யக்காத்திருக்கிறார் என்பதே இந்த சீசனின் ஒன்லைன். SONYLIVல் இந்தத் தொடரின் மூன்றாவது பாகம் இந்த வாரம் வெளியாகியிருக்கிறது.

முன்கதைச் சுருக்கம்

முதல் சீசன்

வளர்ச்சிகள் ஏதுமற்ற மாநிலமான பீகாரில் சாதி கலவரங்களுக்குப் பஞ்சமில்லை. துப்பாக்கிச் சூட்டில் முதல்வர் பீமா பாரதி படுத்த படுக்கையாகிவிட, நாற்காலி சண்டைக்கான களமும் சூடுபிடிக்கிறது. நவீன் குமார் தலைமையில் ஒரு பக்கம் அடுத்த முதல்வருக்கான உட்கட்சி பூசல் ஆரம்பமாக, பதவியை ராஜினாமா செய்கிறார் பீமா பாரதி. 'ராஜினாமா செய்துவிட்டார், ஊருக்குச் செல்லலாம்' என இரட்டிப்பு மகிழ்ச்சியடைகிறார் பீமாவின் மனைவி ராணி பாரதி. ஆனால் ராணி பாரதியை முதல்வராக்கி தன் தலையில் தானே மண்ணை வாரிப்போட்டுக்கொள்கிறார் பீமா பாரதி.

இரண்டாவது சீசன் :

பீகாரில் சிறப்பான ஆட்சியை நடத்தினாலும், உட்கட்சிஒ பூசல்கள் அதிகரித்துக்கொண்டே வருவதை ராணிபாரதியால் சமாளிக்க முடியவில்லை. எதிர்கட்சிகளின் குடைச்சல்களும் அதிகரிக்கின்றன. போதாக்குறைக்கு இப்போது சமாளிக்க வேண்டியவர்கள் பட்டியலில் கணவர் பீமா பாரதியும் சேர்ந்துவிட்டார். இப்படியானதொரு சூழலில் பீமாபாரது விஷம் வைத்து கொல்லப்படுகிறார். பழி ராணி பாரதியின் மேல் விழ, ராணி சிறை செல்கிறார்.

மூன்றாவது சீசன்

நான்காம் வகுப்பு வரை மட்டும் பள்ளிக்கூடம் சென்ற ராணி பாரதி சிறைக்குள் இருந்துகொண்டே பாடமும் பயிலத் தொடங்குகிறார். இன்னொரு பக்கம் நவீன் குமார் ஆட்சி செய்யும் பீகாரில் பூரண மதுவிலக்கு கொண்டுவரப்படுகிறது. பூரண மதுவிலக்கு என்றாலே மது மாநிலம் முழுக்க பூரணமாய் கிடைக்கும் என்று தானே பொருள். அதற்கேற்றார் போல , கள்ளச் சந்தையில் டபுள் பிராஃபிட் விலைக்கு மது விற்கப்படுகிறது. கமிஷன் கஜானா வரை செல்கிறது. இப்படியான சூழலில் வெளியே வரும் ராணி பாரதி அடுத்தடுத்து செய்யும் சம்பவங்களே இந்த சீசன்.

maharani
maharani maharani


மகாராணி தொடரின் டிரெய்லரைப் பார்த்தாலே இதை யாரை மையப்படுத்திய தொடர் என்பதை எளிதாக யூகித்து விட முடியும். ஆம், லல்லு பிரசாத் யாதவ், ராப்ரி தேவி, நித்திஷ் குமார் . பீகாரின் இந்த மூன்று முதல்வர்களை மையமாக வைத்துத்தான் இந்தத் தொடரை எழுதியிருக்கிறார் சுபாஷ் கபூர். மாட்டுத் தீவன ஊழல்; இட ஒதுக்கீட்டு போராட்டத்தில் ஒருவர் தீக்குளித்தது; லல்லு சிறை சென்றது; ராப்ரி முதல்வராக இருந்தது; ரப்பர் ஸ்டாம்ப் பஞ்சாயத்து என பல விஷயங்களை வைத்து ரீல் ரியல் கனெக்ட்டை நம்மால் புரிந்து கொள்ள முடியும். இந்த சீசனில் மதுவிலக்கை இதனுடன் இணைத்திருக்கிறார்கள். அருகிலிருக்கும் மாநிலங்களில் மது கிடைக்கும் போது, ஒரு மாநிலத்தில் மட்டும் பூரண மதுவிலக்கு என கொண்டு வந்தால் அது என்ன மாதிரியான பாதிப்புகளை எல்லாம் உண்டாக்கும் என்பதை பட்டவர்த்தனமாக போட்டு உடைத்திருக்கிறார்கள். அதனூடே ராணி பாரதியின் பழி வாங்கும் படலத்தையும் மிக்ஸ் செய்து ஒரு கலவையாக்கி தந்திருக்கிறார்கள்.

தொடரின் பெரும்பலம் கதாபாத்திர வடிவமைப்பும், அதை பூர்த்தி செய்த நடிகர்களின் நடிப்பும். முதல் சீசன் கதாபாத்திரத்துடன் ஒப்பிடுகையில் மிகப்பெரிய டிரான்ஸ்பார்மேசனை எதிர்கொள்ள வேண்டியதிருந்திருக்கும். உலகம் அறியாப் பெண்மணி கதாபாத்திரத்திலிருந்து சூது வாதுகளைக் கற்றுக்கொண்டு தூள் கிளப்பும் கதாபாத்திரம். அநாயசமாக நடித்திருக்கிறார். கௌரி ஷங்கர் பாண்டேவாக இந்த சீசனிலும் பிரமாதப்படுத்தியிருக்கிறார் வினீத் குமார்.

maharani
maharani maharani

தொடரின் பெரும்பகுதி மதுவிலக்கை சுற்றியும், பழிதீர்த்தலை சுற்றியும் நடக்கிறது. இதனாலேயே முதல் பாகத்தைப் போல இல்லையே என்கிற ஏமாற்றம் கொஞ்சம் வருகிறது. அதே சமயம், எழுத்தாளர் சுபாஷ் கபூர் சில விஷயங்களை மேம்போக்காக ஹின்ட் கொடுத்துவிட்டு அதைக் கொஞ்சம் கொஞ்சமாக பில்ட் அப் செய்து இறுதியில் அந்த முடிச்சுக்களை அவிழ்ப்பது சுவாரஸ்யமாகவே இருக்கிறது. இரண்டாம் சீசன் கிட்டத்தட்ட கணவன் மனைவி ஈகோ யுத்தமாக முடிந்துவிட இந்த சீசன் கொஞ்சம் த்ரில்லர் பாணியில் எடுத்திருக்கிறார்கள். அதுவரையிலும் மகிழ்ச்சி. "எப்ப உன் மனசாட்சி நீ பண்ற எல்லா தப்பையும் நியாயப்படுத்த ஆரம்பிக்குதோ அப்பவே நீ தலைமைப் பொறுப்புக்கு தகுதியான ஆளா மாறிட்டன்னு அர்த்தம்' போன்ற சில வசனங்கள் அருமை

அதே சமயம், தமிழ் டப்பிங் டீம் இந்த முறையும் கோட்டை விட்டிருக்கிறது. முதல் சீசனில் ராணி பாரதியை எதிர்கட்சிக்காரர்கள் ஏளனம் செய்ய, அவர் பதிலடி கொடுத்து அவர்களை வாயடைக்க வைக்க வேண்டும். ஆங்கிலத்தில், யானை நடந்து வரும் போது, நாய் குலைக்கத்தான் செய்யும் என்று வசனம் வருகிறது. இவர்கள் யானை என்று வந்ததும், 'யானை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே' என மொழியாக்கம் செய்திருக்கிறார்கள். இந்த வசனத்துக்கு எதற்கு அனைவரும் சிரிக்க வேண்டும் என்றுகூடவா யோசிக்க மாட்டார்கள்! . இப்படிப்பட்ட கோமாளித்தனங்கள் இந்த சீசனிலும் தொடர்கின்றன. " நீ அங்கேயே இரு" என தமிழ் டப்பிங் ஒலிக்க, அடுத்த காட்சியில் ஒருவர் வந்து கைதாகிறார். You need to surrender என்பதுதான் ஆங்கில சப் டைட்டில். அடுத்த காட்சி என்னவென்று பார்த்துக்கூடவா RY ஃபேக்டரி என்பதை RK ஃபேக்டரி என தமிழ் டப்பிங் செய்திருக்கிறார்கள். ஏம்பா அதுதான் அங்க போர்டுலயே இருக்கே. ராம் கிரிப்பால் யாதவ் என்பது பெயர். சரி கழுதை RK போடுவோம் என போட்டிருக்கிறார்கள். ஒரு நல்ல தொடருக்கு டப்பிங் எழுதுகிறோம் என்கிற மெனெக்கெடல் கொஞ்சம் கூட இல்லை.

ராணி பாரதியின் பழி வாங்கும் படலத்தின் சுவாரஸ்யத்திற்காக இந்த சீசனைப் பார்க்கலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com