“பேரழிவின் காலங்களில் பெண்கள் அனுபவிக்கும் சொல்லமுடியா துயரங்கள்” - ஆஸ்கர் நடிகையின் குரல்

“பேரழிவின் காலங்களில் பெண்கள் அனுபவிக்கும் சொல்லமுடியா துயரங்கள்” - ஆஸ்கர் நடிகையின் குரல்
“பேரழிவின் காலங்களில் பெண்கள் அனுபவிக்கும் சொல்லமுடியா துயரங்கள்” - ஆஸ்கர் நடிகையின் குரல்

நடப்பாண்டுக்கான ஆஸ்கர் விருது விழாவில் போட்டியிட்ட “எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ்” எனும் திரைப்படம், மொத்தம் 7 விருதுகளை வென்று அசத்தியது. இத்திரைப்படத்தில் நடித்த ‘மைக்கேல் யோவ்’-க்கு சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதினை வென்றதற்காக, உலகெங்கிலும் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன. முன்னதாக இவர் கோல்டன் குளோப், ஸ்க்ரீன் ஆக்டர்ஸ் கில்ட் விருது மற்றும் இன்டிபென்டன்ட் ஸ்பிரிட் ஆகிய விருதுகளையும் பெற்றுள்ளார். இந்நிலையில் தற்போது தனக்கு கிடைத்து வரும் மக்களின் கவனத்தை, மற்றொரு விவகாரத்தின் மீது திசை திருப்ப விரும்புவதாக மைக்கேல் யோவ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் பேசுகையில், “நான் கடந்த ஏப்ரல் 25, 2015-ம் ஆண்டு, எனது நண்பர் ஜீன் டோட்டுடன் நேபாளத்தில் உள்ள உள்ளூர் நிறுவனங்களுக்குச் சென்றிருந்தேன். அப்போது திடீரென எனது கால்களுக்கு கீழே உள்ள நிலம் மிகவும் சக்தி வாய்ந்ததாக குலுங்கியது. நான் இருந்த தாழ்வான கட்டடத்தின் கதவுகளுக்கு வெளியே, ஒரு பயங்கரமான நிலநடுக்கம் நாட்டை அழித்துக் கொண்டிருந்தது. அங்கிருந்து தப்பிப்பதற்காக வாசலுக்குச் செல்ல, நான் ஊர்ந்து செல்ல வேண்டியிருந்தது.

ஒருவழியாக நாங்கள் தப்பித்து வெளியே வந்தபோது, தஞ்சமடைவதற்கு எந்தக் கட்டடங்கள் போதுமான பாதுகாப்பானவை என்று தெரியாததால் மணிக்கணக்கில் சாலையிலேயே நிற்க வேண்டியிருந்தது. அன்று நான் உணர்ந்த பயம் மற்றும் பீதியை, வேறு எங்கும் உணர்ந்ததில்லை. அதன் விளைவுகள் இன்னும் என்னுடன் இருக்கின்றன. அன்றைய தினம் நிலநடுக்கத்தில் காயமடையாமல் கடந்து சென்றது எனது அதிர்ஷ்டமே.

நிலநடுக்கத்தால் எங்கள் ஹோட்டல் சேதமடைந்ததால், உள்ளே நுழைவது பாதுகாப்பாக இல்லை. எனவே நாங்கள் நேராக விமான நிலையத்திற்குச் சென்றோம். நாங்கள் சாலையில் சென்றபோது, சுற்றிலும் இடிபாடுகளையும், அழிவையும் கண்டேன். விமானம் மூலம் வெளியேறுவதற்கு முன்பாக, நாங்கள் இரண்டு இரவுகளை அங்கு கழித்தோம். திடீரென முழு வாழ்க்கையும் நிலை குலைந்து போன ஆயிரக்கணக்கான குடும்பங்களைப் போலல்லாமல், அங்கிருந்து தப்பித்து செல்ல எனக்கு மட்டும் ஒரு வீடு இருப்பது எவ்வளவு நியாயமற்றது? என்ற எண்ணம் என்னை விட்டு அகலவில்லை.

இத்தகைய பேரழிவுகள் ஏற்கனவே கஷ்டப்படுபவர்களின் வாழ்க்கையில் ஈடுசெய்ய முடியாத சேதத்தை ஏற்படுத்துகின்றன. நிலநடுக்கம் ஏற்பட்டு மூன்று வாரங்களுக்குப் பிறகு நிவாரணப் பணிகளில் உதவுவதற்காக நேபாளத்திற்குத் திரும்பியபோதும், ஒரு வருடம் கழித்து ஐக்கிய நாடுகளின் வளர்ச்சித் திட்டத்தின் நல்லெண்ணத் தூதராகத் திரும்பியபோதும் நான் இதைக் கண்டேன். 

கடந்த மாதம் துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தின் வீடியோவை பார்த்தபோது, மீண்டும் நேபாளத்தை நினைத்துப் பார்த்தேன். பூகம்பம் ஏற்படுவதற்கு முன்பே, சிரியாவில் சமூகப் - பொருளாதார நிலைமைகள் மோசமாக இருந்தன. ஏறத்தாழ 90 சதவீத மக்கள் வறுமையில் வாழ்கின்றனர். லட்சக்கணக்கான மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் தேவைப்படுகின்றன. இப்போது பலர் வீடற்றவர்களாகவும், தங்கள் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்பவோ அல்லது தங்கள் குடும்பங்களை பாதுகாப்பாக வைத்திருக்கவோ வழியின்றி உள்ளனர்.

நெருக்கடிகள் பேரழிவின் தருணங்கள் மட்டுமல்ல; அவை சமூகத்தில் ஆழமாக வேரூன்றியிருக்கும் ஏற்றத்தாழ்வுகளை அம்பலப்படுத்துகின்றன. குறிப்பாக வறுமையில் வாடுபவர்கள், பெண்கள் மற்றும் சிறுமிகள் சுமைகளுக்கு உள்ளாகின்றனர். ஒரு பேரழிவிற்குப் பின் உடனடியாக, சுகாதார வசதிகள் மற்றும் பாதுகாப்பு குறைபாடு ஆகியவை பெண்களை விகிதாச்சாரமாக பாதிக்கின்றன.

நான் நல்லெண்ண தூதராக இருந்த காலத்தில், பெண்கள் பள்ளிக்கு கடைசியாக செல்வதை நெருக்கமாகப் பார்த்திருக்கிறேன். அதேபோல் சுத்தமான குடிநீர், தடுப்பூசிகள், அடையாள அட்டைகள் மற்றும் ஆலோசனைகள் போன்ற அடிப்படை சேவைகளை கடைசியாகப் பெறுவதையும் கண்டிருக்கிறேன். இவர்களுக்கு பொதுவாக வேலை வாய்ப்புகள், கடன் வசதிகள் போன்றவை கடைசியாகவே கிடைக்கின்றன.

சிரியாவில் வரும் மாதங்களில் சுமார் 40,000 பெண்கள் சுகாதார வசதிகள் இல்லாமல் பிரசவிப்பார்கள் என ஐக்கிய நாடுகள் சபை கூறியுள்ளது. பேரிடர் காலங்களில் பெண்கள் பாலியல் வன்முறை மற்றும் தாக்குதலுக்கு ஆளாக நேரிடுவது உயர்கிறது. பேரழிவின் மீட்பு செயல்பாட்டில் பெண்களும் தலைமைப் பாத்திரங்களை வகிக்க வேண்டும். ஆனால், பரிதாபகரமாக நெருக்கடியான காலங்களில் உயிர்வாழ்வதற்கான வாய்ப்புகள் குறித்து முடிவெடுப்பதில் பெண்கள் குறைவாகவே உள்ளனர்.

பேரழிவுகளில் பெண்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாக ஆய்வுகள் காட்டுகின்றன. பேரிடரில் ஆண்களை விட, பெண்கள் பசியால் பாதிக்கப்படுகின்றனர். பெண்கள் தங்கள் சமூகத்தை நிலைநிறுத்துவதை நாங்கள் அறிவோம். அவர்களின் குரல்கள், தலைமைத்துவம் மற்றும் முழு பங்கேற்பு ஆகியவை நிலையான மீட்சிக்கு முக்கியமாகும்.

சுற்றுப்புறங்கள், பள்ளிகள், வணிக நிறுவனங்களை மீண்டும் கட்டியெழுப்பும்போது, பெண்களின் தேவைகள், முன்னுரிமைகள் மற்றும் பாதுகாப்பைக் கருத்தில் கொள்ள வேண்டும். இது பெண்களுக்கான தகவல், வேலை வாய்ப்புகள், திறன் பயிற்சி, கடன்கள் மற்றும் காப்பீட்டு வழிமுறைகள் ஆகியவற்றில் சமமான அணுகலை உறுதி செய்வதாகும். இவை அனைத்தும் நிதி ஸ்திரத்தன்மையை மீட்டெடுக்க முக்கியமானவை. அதிகாரப் பதவிகளை வகிக்கும் அதிகமான பெண்கள் முடிவெடுப்பவர்களாக இருப்பது, பாலின சமத்துவத்தைப் பாதுகாப்பதில் பங்களிக்கும்.

இது அனைத்து இடங்களிலும் பாலின அடிப்படையிலான வன்முறைக்கு பூஜ்ஜிய சகிப்புத்தன்மைக்கு பாடுபடுவதைக் குறிக்கிறது. மேலும் பெண்களின் குரல்கள் அரசாங்கம் மற்றும் சமூகத்தின் மிக உயர்ந்த மட்டங்களில் பிரதிநிதித்துவப்படுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும். நாம் தொற்றுநோய், போர் உள்ளிட்ட பேரழிவுகளால் பாதிக்கப்பட்ட உலகில் வாழ்கிறோம். அத்துடன் காலநிலை மாற்றத்துடன் போராடுகிறோம். இதனைத் தவிர்க்க முடியாததாக உணரலாம்.

ஆனால், நாம் நம்பமுடியாத தொழில்நுட்ப முன்னேற்றங்களின் காலத்தில் வாழ்கிறோம். நெருக்கடி காலங்களை எதிர்கொள்ள, தகவல் தொடர்பு தொழில்நுட்பங்கள் நமது சக்தி வாய்ந்த கூட்டாளிகளாக உள்ளன. தொழில்நுட்பமானது அத்தியாவசிய சமூக சேவைகளை இயங்க வைக்கிறது. நெருக்கடி நிலையை மேம்படுத்தி, சமூகங்களை பலப்படுத்துகிறது. பொருளாதார மீட்சியை அதிகரிக்கிறது.

உலகளவில் 2.7 பில்லியன் மக்கள் டிஜிட்டல் இணைப்பிலிருந்து விலக்கப்பட்டுள்ளனர். அவர்களில் அதிகமானோர் பெண்கள் ஆவர். உலக வங்கியின் கூற்றுப்படி, பெண்கள் தங்கள் வாழ்க்கையின் அனைத்துத் துறைகளிலும் தகவல் மற்றும் வளங்களைப் பெறுவதில் தடைகளை எதிர்கொள்கின்றனர். மேற்கண்ட டிஜிட்டல் பாகுபாட்டைக் குறைப்பது, பேரழிவிற்கு முன்னும், பின்னும் பெண்களின் தலைமை மிக உயர்ந்த மட்டத்தில் பதிக்கப்பட்டிருப்பதை உறுதி செய்வது ஆகியவை முக்கியமானதாகும்.

எனது 60 வயதில் முதல் ஆஸ்கர் விருதை வென்றேன். விடாமுயற்சியைப் பற்றி எனக்கு ஓரளவு தெரியும். மேலும் சமூகம் பெண்களிடம் என்ன எதிர்பார்க்கிறது என்பதை நான் நன்கு அறிவேன். நான் சந்தித்த நெருக்கடிகளின் முன்வரிசையில் இருக்கும் பெண் ஹீரோக்களுடன், எனது அனுபவத்தை ஒப்பிட முடியாது. உண்மையான பாலின சமத்துவத்தை நாம் அடைந்தால் மட்டுமே, வறுமை அல்லது சமத்துவமின்மை இல்லாத உலகம் குறித்த ஐக்கிய நாடுகள் சபையால் நிர்ணயிக்கப்பட்ட வளர்ச்சி இலக்குகளை அடைவது சாத்தியமாகும்” என்றார்.

உலகமே தன்னை உற்றுநோக்கும் சமயத்தில், பேரழிவின்போது பாதிக்கப்படும் பெண்கள், குழந்தைகளுக்காக குரல் கொடுத்துள்ள மைக்கேல் யோவ்-ன் செயலுக்கு பல தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com