”கோவம் வந்தா கைநீட்டுவாரா?”.. சுயமரியாதைக்காரி ’அம்மு’வுக்கு.. ஒரு ராயல் சல்யூட்!

”கோவம் வந்தா கைநீட்டுவாரா?”.. சுயமரியாதைக்காரி ’அம்மு’வுக்கு.. ஒரு ராயல் சல்யூட்!
”கோவம் வந்தா கைநீட்டுவாரா?”.. சுயமரியாதைக்காரி ’அம்மு’வுக்கு.. ஒரு ராயல் சல்யூட்!

சுயமரியாதைக்காரி அம்மு.

முன்கதை பின்கதை இல்லாமல் நேரடியாகவே சொல்கிறோம். அம்மு பேசுவது, குடும்ப வன்முறையை. கணவனால் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் துன்புறுத்தலுக்கு உள்ளாகும் ஒரு பெண், என்ன செய்ய வேண்டும் என்பதுதான் அம்முவின் குரல்.

படத்தில் ஒவ்வொரு காட்சியுமே முக்கியமான காட்சிகள்தான் என்றபோதிலும் இரண்டாம்பாதியை விடவும், முதல்பாதிதான் நமக்கு மிகப்பெரிய வலியை கொடுக்கிறது. அம்மு, தான் குடும்ப வன்முறைக்கு உட்படுவதை, கொஞ்சம் கொஞ்சமாக உணரத்தொடங்கும் அந்தக் காட்சிகள், பார்ப்போரையும்கூட பதைபதைக்க வைக்கிறது. அம்முவில் பாராட்டவும் பதைபதைக்கவும் ஏராளமான விஷயங்கள் இருக்கிறது என்பது ஒரு பக்கம். இன்னொரு பக்கம், படத்தில் பேசப்படும் முக்கியமான வசனங்களை இங்கு பட்டியலிட விரும்புகிறோம். அதனூடே, படத்தின் விமர்சனமும் இங்கு அமையும். ஆகவே, ஸ்பாய்லர்கள் உண்டு.

திருமணமாகிய முதல் சில வாரங்கள் மிக மகிழ்ச்சியாகவே போகிறது அம்முவின் வாழ்க்கை. அத்தனை மாதங்கள் கணவரிடமிருந்து முத்தத்தை மட்டுமே பெற்ற அம்முவின் கன்னத்தில், ஒரு நாளில் முதன்முதலில் அறையொன்று கிடைக்கிறது. எப்படி ரியாக்ட் செய்வது என்று தெரியாமல் தவிக்கும் அம்மு, தன் தாயிடம் அதை சொல்கிறார். இதைக்கேட்டவுடன், தன் மகளிடம் `நீ என்ன செஞ்ச? என கேட்கிறார் அந்த தாய். அம்மு வேகமாக, `நான் தான் தப்பு செஞ்சிருப்பேன்னு எப்படிம்மா நீ முடிவு பண்ணுன? அப்போ நான் தப்பு பண்ணிருந்தா, அவர் என்னை அடிக்கலாமா’ என்று கேட்கிறாள் அம்மு.

பின் அந்த அம்மாவே அம்முவின் நிலை புரிந்து அவளிடம் ஒரு விஷயத்தை சொல்கிறார். படத்தின் மிக முக்கியமான வசனமும் கருத்தும் இதுதான். அம்முவின் அம்மா சொல்கிறார்:

“உன்னோட அப்பா என்னை ஒருமுறை அடிச்சிருக்கிறார். அப்போ என்னோட அம்மா எங்கிட்ட `புருஷங்கிறவன் அடிக்கத்தான் செய்வான். இதுவொன்னும் புதுசா உனக்கு மட்டும் நடக்கல. உன் புருஷன் உன்னை மறுபடியும் அடிக்கிறதுக்கும் வாய்ப்பிருக்கு. இதை எந்தக் காலத்துலயும் நிறுத்தவும் முடியாது. ஆம்பளைங்களுக்கு கோவம் வரத்தான் செய்யும். ஏன்னா, அவன் வேலைக்கு போவான்; 1,008 டென்ஷன் இருக்கும். அப்போ அந்த டென்ஷனை யார்மேல காட்ட முடியும்? நம்ம மேல தான் கோவப்படுவாங்க. மொத்த காதலும் உனக்குதான் வேணும்னு நினைக்கிறள்ல… அப்போ மொத்த வலியையும் நீதான் ஏத்துக்கணும்.

ஒரு குழந்தை பிறந்தா, எல்லா பிரச்னையும் சரியாகிடும்’னு சொன்னாங்க. ஆனா எங்க அம்மா எனக்கு இதையெல்லாம் சொல்லிருக்கக்கூடாது. இதுக்கு பதிலா என்னோட அம்மா எங்கிட்ட `ஆண் என்பவன், தன்னோட மனைவிமேல கைநீட்டக்கூடாது. ஒருவேளை அவன் அடிச்சான்னா, அவன்கூட வாழ வேண்டிய கட்டாயம் அந்தப் பொண்ணுக்கு கிடையாது’னு சொல்லிருக்கணும். நான் உங்கிட்ட இதையே சொல்றேன். அம்மு, உனக்கு எது சரின்னு தோணுதோ அதை செய்” என்கிறார்.

இந்தியாவில் குடும்ப வன்முறைக்கு உள்ளாகும் பெண் ஒவ்வொருவருக்கும், அவர்களின் தாய்மார்கள் சொல்லவேண்டிய மிக அழுத்தமான விஷயம் இது. அதை அம்மு அவ்வளவு நேர்த்தியாகவும் நியாமாகவும் அறத்தோடும் பேசியிருக்கிறது. இதற்காகவே `அம்மு’வை எழுதி இயக்கிய சாருகேஷ் சேகருக்கு மனம் நிறைந்த பாராட்டுகள்.

படத்தில் இப்படி இன்னும் நிறைய அழுத்தமான வசனங்கள் உள்ளன. குறிப்பாக, தான் பாதிக்கப்படுகிறோம் என்பதை அம்மு உணர்கையில், அவள் சொல்வது `எனக்கே என் மேல மரியாதை இல்லாம போச்சு. அவர் என்ன பண்ணாலும், பொறுத்துக்கிட்டு ஒரு ஓரமா இருக்கேன்’ என சொல்வது நமக்குள்ளும் வலியை கடத்துகிறது.

படத்தின் இண்டெர்வெல் ப்ளாக்கில், அம்முவுக்கு தான் மட்டுமே தன்னுடைய பிரச்னைகளுக்கு தீர்வு என்பது புரிகிறது. அப்போது அவர் சொல்வது - `இனிமே நான் சும்மாருக்க மாட்டேன். எவனாவது வந்து என்னை காப்பாத்துவான்னு உட்கார்ந்துகிட்டு இருக்க முடியாது. எதாவது நடக்கனும்னா, நான் தான் எதாவது பண்ணனும்’ என்கிறார். அதற்குப்பின் அம்மு தொடுவதெல்லாம் அதிரடிதான். அதிரடி என்றவுடன், இவரும் அடிப்பரென நினைத்துவிடாதீர்கள். தெலுங்கு படமென்றாலும்கூட, இப்படத்தில் அப்படி நம்ப முடியாத காட்சிகளே கிடையாது. அம்மு, அந்தப் புரிதலுக்குப் தன் கணவனுக்கு பாடம் புகட்டுகிறாள். `இனி என் மேல் மட்டுமில்ல, வேற யார் மேலயும் கை நீட்டக்கூடாது’ என அறச்சீற்றம் கொள்கிறாள். அங்கிருந்து தன்னை தானே மீட்க தொடங்குகிறார் அவர்.

இடையே நிறைய ட்விஸ்ட்களும் படத்தில் உள்ளது. பாபி சிம்ஹா வருகிறார்... போலீஸ் நிலைய காட்சிகள் வருகின்றன... முகமூடி போட்ட கணவரின் சுயரூபம் கொஞ்சம் கொஞ்சமாக கழன்று விழுகிறது என்றிருக்க, அந்த நிலையில்தான் அம்மு கருவுறுகிறாள். அந்த தருணத்தில், பெண் உடல் மீது நிகழும் அரசியலையும் அம்மு பேசுகிறாள். அந்தக் குழந்தையை பெற்றெடுப்பதா, வேண்டாமா என்பதற்கு அம்மு எடுக்கும் முடிவுக்கு, இன்னொரு அப்ளாஸ்.

பொதுவாக குடும்ப வன்முறையென்பது, ஒரு நொடியில் தொடங்குவதில்லை. அதற்கு சில படிநிலைகள் இருக்கிறது. அதை அம்மு படக்குழு, மிக சென்சிட்டிவாக கையாண்டிருப்பது, மிகச்சிறப்பான விஷயம். குறிப்பாக அம்மு தன்னை தானே குற்றப்படுத்திக்கொள்ளும் சில காட்சிகள் அத்தனை எதார்த்தமாக இருக்கிறது. ரயில்வே ஸ்டேஷனில் உட்கார்ந்துக்கொண்டு, பிச்சைக்காரர் ஒருவரிடம் `அடி வாங்குற அளவுக்கு நான் என்ன செஞ்சேன்னே எனக்கு தெரில. எனக்கு தெரிஞ்சதெலாம், வெக்கமே இல்லாம அடிவாங்கிட்டு உட்கார்ந்து அழுவுறது. ச்ச… தப்பே பண்ணலைன்னாகூட, என்னை நானே திட்டிகிட்டே இருக்கேன். நான் ஏன் இப்படி இருக்கேன்? முதல்ல அவருக்கு ஏன் இவ்ளோ கோவம் வருது? கோவம் வந்தா கைநீட்டுவாரா? ஆனா அவர் கெட்டவர்னு கிடையாது… அரக்கன்னும் கிடையாது. என்னை ரொம்ப நல்லா பாத்துக்குவாரு. என்மேல அவருக்கு காதல் இல்லனுலாம் சொல்லமுடியாது. 

அப்பப்போ அவரை சுற்றி நடக்குற விஷயங்களால அவர் டென்ஷனாகி அப்படி பண்றாரு. அதனால இது முழுசா அவரோட தப்புன்னு சொல்லிட முடியாது. ஆனா என் மனசு இதை ஒத்துக்க மாட்டேங்குது. தினமும் இப்படியெல்லாம் நடக்காது. நிறைய நாள் நாங்க நல்லாதான் இருப்போம். யோசிச்சு பார்த்தா, மேக்சிமம் நாங்க நல்லாதான் இருப்போம். எப்பயாவது பிரச்னை வருதுன்னு நாம விட்டுட்டு போயிட்டா தப்புதானே? இதலாம் சகிச்சுகிட்டு நான் அவர்கிட்ட அன்பா இருந்தா, அவர் ஏதோ ஒரு நாள் திருந்துவாருல்ல… அவர் என்னை வலியே கொடுக்க முடியாத அளவுக்கு காதலிக்கணும். அந்தளவுக்கு அவர் என்னை லவ் பண்ணா போதும். அவர்தான் என்னோட உலகம்’ என்கிறார் அம்மு. இத்தனை குற்ற உணர்ச்சிக்குப் பின்னர்தான் அம்மு சீறிப்பாய்கிறாள். அதுவும் க்ளைமாக்ஸில் வைக்கப்பட்ட ட்விஸ்ட், மனசை விட்டு நீங்காதபடி இருக்கிறது.

அம்முவாக ஐஷ்வர்ய லட்சுமி. ஒவ்வொரு உணர்ச்சியையும் அவ்வளவு நேர்த்தியாக கையாள்கிறார். திருமணத்துக்குப் பின் அள்ள அள்ள குறையாத அளவுக்கு கணவனுக்கு காதலை வழங்குவது – படுக்கையறையில் கொச்சைப்படுத்தும் வார்த்தைகளை சகிப்பது - முதல்முறை கணவனை கோபத்தை காணும்போது செய்வதறியாமல் திகைப்பது – நடுவழியில் கணவனால் தனித்துவிடப்படும்போது கையில் காசின்றி ஆளில்லா சாலையில் நிற்பது – மூஞ்சுக்கு நேரே வரும் விசிறியெறியப்பட்ட தட்டை கண்டு ஒளிவது என சின்ன சின்னதாக தொடங்கி, படுக்கையறையில் பெல்ட்டில் அடிவாங்குவது வரை நம்மை உரையவைக்கிறார். க்ளைமாஸில் `உன்னை பார்த்து எனக்கு பயம் இல்ல’ என தன்னை அப்யூஸ் செய்தவனிடம் தைரியமாக பேசுவது என திரையிலும் நம் மனதிலும் நிறைந்திருக்கிறார். சொல்லப்போனால், நிமிர வைக்கிறார்.

அம்மு மட்டுமன்றி, படத்தில் இருக்கும் அத்தனை கதாபாத்திர வடிவமைப்புமே இந்த சென்சிடிவ்வான விஷயத்தை, நேர்த்தியாக கையாள்கிறது. கணவராக நடித்திருக்கும் நவீன் சந்திராவும் நடிப்பில் மிரட்டியிருக்கிறார். இவர்களுடன் பாபி சிம்ஹா, சத்யா கிருஷ்ணன், அஞ்சலி அமீர், ரகு பாபு உள்ளிட்டோரும் நம் கவனத்தை ஈர்க்கின்றனர்.

என்னடா இது, படத்தை அப்படியே இங்கேயே சொல்லிட்டீங்களே என நினைக்க வேண்டாம். இதையும் விட அழுத்தமாக, இரண்டாம் பாதியில் ஏராளமான விஷயங்களை செய்கிறாள் அம்மு. அம்மு பேசும் அரசியல் மிக முக்கியமானது. `அம்மு’ படத்தை, நல்ல படம் என சொல்வதை விட, உங்களை சற்று நிலைகுலைய வைக்கும் படமென்று சொல்லலாம். அம்மு, மனதை விட்டு நீங்காமல் நம்மை தொந்தரவு செய்வாள். அம்மு செய்யும் அந்த தொந்தரவு, ஒவ்வொருவரும் பெற வேண்டியது. ஏனெனில் இந்தியாவில் இன்னும் இன்றும் நிறைய அம்முக்கள் இருக்கிறார்கள். அவர்களும், அவர்களை சார்ந்த நாமும் மிஸ் பண்ணாம நிச்சயமா பார்க்க வேண்டிய படம் அம்மு. படம், தமிழில் அமேசான் ப்ரைமில் காணக்கிடைக்கிறது.

இதை வாசிக்கும், ஒவ்வொரு பெண்ணுக்கும் அம்முவோடு சேர்ந்து நாங்களும் சொல்கிறோம். `சரியோ தப்போ. உங்களோட எந்தவொரு முடிவையும், வேற யாரையும் எடுக்க விடாதீங்க. இது உங்க லைஃப். உங்க உடல். நீங்கதான் உங்களுக்கான முடிவுகளை எடுக்கணும்’. டாட்.

- ஜெ.நிவேதா

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com