சிவானி ஸ்டுடியோஸ் தயாரிப்பில் சுபா செந்தில் வழங்கும் படம், ‘கார்கில்’. சிவானி செந்தில் இயக்குகிறார். ஒளிப்பதிவு, கணேஷ் பரமஹம்ஸா. இசை, விக்னேஷ் பாய். இப்படத்தின் பாடல்கள் நேற்று வெளியிடப்பட்டது. தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு வெளியிட்டார்.
படம் பற்றி இயக்குனர் சிவானி செந்தில் கூறும்போது, ’தமிழ் சினிமாவில், முதல் முறையாக ஒரு நடிகர் மட்டும் திரையில் தோன்றும் புது முயற்சியை இதில் மேற்கொண்டுள்ளோம். புதிய படைப்புகளுக்கு மக்களின் ஆதரவு நிச்சயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் குறைந்த பட்ஜெட்டில் படத்தை உருவாக்கியுள்ளேன். கதை நாயகனாக ஜிஷ்னு எனும் அறிமுக நாயகன் தோன்றுகிறான். சென்னையில் இருந்து பெங்களூருக்கு காரில் செல்லும் ராஜாவுக்கு காதலியுடன் விரிசல். அந்த சின்ன விரிசல் கார்கில் போராக மாற, ராஜா போராடி வெல்லும் காதல் கதைதான் படம்' என்றார்.