‘ஓ மை டாக்’ விமர்சனம்: செல்லம் கொஞ்ச வைக்கிறானா சிம்பா?

‘ஓ மை டாக்’ விமர்சனம்: செல்லம் கொஞ்ச வைக்கிறானா சிம்பா?
‘ஓ மை டாக்’ விமர்சனம்: செல்லம் கொஞ்ச வைக்கிறானா சிம்பா?

ரியல் தாத்தா- மகன் –பேரனாக இருக்கும் விஜயகுமார், அருண் விஜய், ஆர்னவ் ஆகிய மூவர் அதே உறவுடன் ரீலிலும் நடித்திருக்கும் படம் ‘ஓ மை டாக்’. சூர்யா - ஜோதிகா தயாரித்திருக்கும் இந்தப் படம் அமேசானில் இன்று வெளியாகியிருக்கிறது.

சர்வதேச அளவில் நாய்களை வைத்து நடத்தப்படும் போட்டிகளில் நம்பர்- 1 இடத்தில் இருக்கும் பிசினஸ்மேன் வினய். அவர், வளர்க்கும் நாய் பெற்றெடுத்த குட்டிக்கு பார்வை தெரியவில்லை என்பதால், அந்த குட்டியைக் கொன்று புதைக்க உத்தரவிடுகிறார். கொலைகாரர்களிடமிருந்து கதையின் ஹீரோ (பார்வை தெரியாத குட்டி நாய்) எப்படி தப்பிக்கிறார்? ‘சிம்பா’வாக வளர்ந்து, வில்லனுக்கு எப்படி சிம்ம சொப்பனமாக கர்ஜிக்கிறார் என்பதுதான் 'ஓ மை டாக்’ திரைக்கதை.

கதையின் கிங் ‘சிம்பா’வாக வரும் நாய்தான் கதையின் 1-வது ‘நாய்’யகன். பார்க்கும்போதே கியூட்டி பியூட்டியாக வாலாட்டி ‘வாவ்வ்வ் மை டாக்’ என்று நம்மிடம் ‘பெட்’ ஆகிவிடுகிறது. கொன்று புதைக்கச்செல்லும் வில்லன்களிடமிருந்து அது தப்பிக்கும் காட்சியில் செம்ம ‘லொள்ளு’த்தனம். கண் தெரியவில்லை என்றாலும் தன்னைக் கழுவி, சுத்தப்படுத்தி மீட்டெடுத்த 2-வது நாயகன் அர்ஜுனை (ஆர்னவ்) தேடிச்செல்லும் காட்சியில் போலீஸ் மோப்ப நாய்களுக்கே டஃப் ஃபைட் கொடுக்கிறது சிம்பா. ‘கில்லி’ விஜய் வீட்டில் பதுங்கியிருக்கும் த்ரிஷாபோல் சிம்பா சில நாட்கள் அர்னவ் வீட்டில் பெற்றோருக்கு தெரியாமல் வளர்வது சுட்டித்தனத்தின் உச்சம்.

ஆர்னவ்வுடன் பள்ளிக்குச் செல்வது, ஆர்னவ் கொடுக்கும் உத்தரவுகளை நிறைவேற்றுவது போன்ற காட்சிகளில் நம்மை கண் சிமிட்டாமல் பார்த்து ரசிக்கவைக்கிறது சிம்பா. ஆர்னவ்வுடன் படிக்கும் மாணவர்களுடனும் ஓடியாடி விளையாடி, அவர்களின் இதயத்திலும் சிம்மாசனமிட்டு அமர்ந்துவிடுகிறார் சிம்பா. படத்தின் டைட்டில் கார்டு போடும்போது ’Oh My God’ என்று காண்பிக்கப்பட்டு பிறகு ‘God’ என்பது மட்டும் ‘Dog’ என்று மாற்றப்படும். உண்மையிலேயே, படத்தில் ஆர்னவ் குடும்பத்திற்கு ‘சிம்பா’ அப்படித்தான் இருக்கிறது. மாற்றுத்திறனாளிகளை புறக்கணிக்கிறவர்களின் பார்வையில்தான் குறைபாடு என்று சுட்டிக்காட்டிவிடுகிறது சிம்பா. இப்படி, படத்தில் பார்வையற்ற நாயாய் வந்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி பார்வையாளர்களின் இதயத்தை ஆக்கிரமித்துக்கொள்கிறது சிம்பா. லவ் யூ சிம்பா.



கதையின் 2-வது (அறிமுக) நாயகன் ஆர்னவ். அதாவது, அருண் விஜய்யின் மகன். சிம்பா என பெயர் வைத்து பாசமாக வளர்ப்பது, சிம்பா மீது வைத்திருக்கும் பேரன்பு, சிம்பாவின் உயிரைக் காப்பாற்ற துடிப்பது, சிம்பாவிற்கு பார்வை வருவதற்காக எடுக்கும் முயற்சிகள், அதைப் போட்டியில் கலந்துகொள்ள வைக்க போராடுவது என அருண் விஜய்யின் மகனாக மற்றொரு சிம்பாவாக நம்மை ரசிக்க வைக்கிறார். க்ளைமாக்ஸில் நம்மை நெகிழ்ச்சியுடன் கண்கலங்க வைத்துவிடுகிறார் ஆர்னவ்.

3-வது நாயகன் அருண் விஜய். தன்னுடைய பிள்ளைக்காக கடன் வாங்கி இன்டர்நேஷனல் பள்ளியில் படிக்கவைக்கும் மிடில் க்ளாஸ் தகப்பனாக, பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் குடும்பஸ்தனாக, பிள்ளைக்கு நம்பிக்கையையூட்டி வளர்க்கும் தோழனாக தி லைன் கிங் பட ‘சிம்பா’ வின் அப்பா முஃபாசாவை நினைவூட்டும் விதமாக சிறப்பாக நடித்திருக்கிறார்.

இதையும் படிக்கலாமே: ‘குற்றம் குற்றமே’ விமர்சனம்: இனியும் தாங்காது…’நாங்க மகான் அல்ல’ சுசீந்திரன் அவர்களே!

நாயகி மகிமா நம்பியாருக்கு வழக்கமான இல்லத்தரசியின் கதாப்பாத்திரம். வழக்கமான ரியாக்ஷன்களால் வில்லத்தனம் செய்கிறார் வினய். ’டாக்டர்’, ‘எதற்கும் துணிந்தவன்’ படங்களைவிட இப்படத்திற்கு பொருத்தமாக பொருந்தியிருக்கிறார் வினய். அவரின், அடியாட்களாக வருபவர்களும் கலகலப்பூட்டி கவனிக்க வைக்கிறார்கள்.

சின்ன சின்ன சுவாரஸ்யங்களால் பார்வையாளர்களை குழந்தைகளைப்போல குதூகலிக்க வைத்திருக்கிறார் இயக்குநர் சரோவ் சண்முகம். நாய்கள் பந்தயம் நடத்துவதால் வினய்யின் கார் நாய்போலவே வடிவமைக்கப்பட்டிருப்பது, காருக்குள் தொங்கும் நாய் பொம்மை, வினய்யுடன் இருக்கும் காமெடி வில்லன்களின் காதுகளில்கூட நாய் பொம்மை தொங்குவது என கிரியேட்டிவிட்டியில் தெறிக்கவிட்டிருக்கிறார். குறிப்பாக, நாய் முகர்வதற்கும் உருவத்தைக் கொடுத்திருப்பது, படத்தை முழுக்க முழுக்க கலர்ஃபுல்லாய் காட்சிப்படுத்தியிருப்பது போன்றவையும் ரசிக்க வைக்கின்றன. வசனங்களும் ஈர்க்கும்படியாக உள்ளன.

கண்களில் எடுத்து ஒற்றிக்கொள்ளவேண்டும் போல் இருக்கிறது ஒளிப்பதிவாளர் கோபிநாத்தின் கலர்ஃபுல் ஒளிப்பதிவு. ஊட்டிக்குள் நாம் அமர்ந்து படம் பார்க்கும் உணர்வு. எங்களின் நெஞ்சார்ந்த நன்றிகள் இந்த ஒளிப்பதிவாளர் கோபிநாத்திற்கு. நிவாஸ் கே பிரசன்னாவின் பின்னணி இசையும் பியூட்டிஃபுல்.

படத்தின் ஓப்பனிங்லேயே எண்டிங் என்னவாக இருக்கும் எனத் தெரிந்துவிடுவது சிக்கல் தான். ஆனாலும் ஜவ்வு போன்று இழுக்காமல் சின்ன சின்ன சஸ்பென்ஸ்களை உடனுக்குடன் உடைத்து அடுத்தடுத்து அளவான வேகத்தில் நகர்கிறது திரைக்கதை. சிம்பாவின் ஆபரேஷனுக்காக ஆர்னவ்வின் க்ளாஸ்மெட் சிறுவர் சிறுமிகள் கொஞ்சம் கொஞ்சமாக பணம் சேர்க்கும் காட்சி சிரிப்பூட்டி நெகிழ்ச்சியடைய வைத்துவிடுகிறது.

பெரும்பாலும் தமிழாசிரியர்களை கிண்டலடித்து வரும் படங்கள் மத்தியில், ஒரு இன்டர்நேஷனல் ஸ்கூலில் கதைக்கு மையமான ஒரு கருத்தை சொல்லும்விதமாக காட்சிபடுத்தியிருப்பதற்கு இயக்குநருக்கு இன்னும் இன்னும் பாராட்டுகள். இதுவரை நாய்களை வைத்து இதற்கு முன்பு எடுக்கப்பட்ட படங்களில் நாம்தான் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்பது இருந்தன. ஆனால், ‘ஓ மை டாக்’ அப்படியல்ல. நாய்களைப் பிடிக்காதவர்களுக்கும் பிடிக்க வைத்துவிடும்.

"மாற்றுத்திறனாளிகள் துன்பப்படுவதால்  இந்த உலகத்தில் வாழவே வேண்டாம்” என்று கொலை செய்வதுதான் பாலாவின்  ‘நான் கடவுள்’. அப்படித்தான், இப்படமும் ஆரம்பித்து முடிவில் அவர்களை நேசிக்கவேண்டும் என்பதை உணர்த்துகிறது.  குழந்தைகளை டார்கெட் செய்து எடுக்கப்பட்ட படம் என்பதாலேயே திரைக்கதையும் அவர்களை மையப்படுத்தியே பயணிக்கிறது. வில்லன்களை சிறுவர்களை ட்ரேஸ் செய்வது, இன்டர்நேஷனல் போட்டியில் சிறுவன் ஆர்னவ் சென்று பதிவுசெய்வது என கொஞ்சம் ஓவராகவே இருக்கிறது.

இது வெறும் குழந்தைகளுக்கான படம் இல்லை. போட்டி உலகத்தில் எப்படியெல்லாம் அச்சப்படாமல் பிரச்சனைகளை எதிர்கொண்டு தன்னம்பிக்கையோடு வெற்றிபெற வேண்டும் என்று ஊக்குவிக்கும் படம். அதற்காகவே பாராட்டலாம்.

- வினி சர்பனா

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com