''கழுத்தில் சிலுவை; நெற்றியில் குங்குமம்'' - வரவேற்பை பெற்ற பிகில் படத்தின் இரண்டாவது போஸ்டர்
நடிகர் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு பிகில் படத்தின் இரண்டாவது போஸ்டர் நள்ளிரவில் வெளியானது.
‘தெறி’, ‘மெர்சல்’ ஆகிய இருபடங்களை அடுத்து விஜயுடன் இயக்குநர் அட்லீ மீண்டும் கைகோர்த்தார். படத்துக்கு பெயரிடப்படாமல் ‘தளபதி63’ என்ற பெயரிலே படப்பிடிப்பு நடந்துவந்தது. ஏஜிஎஸ் எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்து வருகிறது.
இந்த ஆண்டு தீபாவளிக்கு இந்தப் படம் வெளியாகும் என்று ஏற்கெனவே தெரிவித்திருந்தது. இந்தப்படத்தில் நயன்தாரா, நடிகர் விவேக், டேனியல் பாலாஜி, யோகி பாபு, கதிர் உள்பட பலர் நடித்து வருகின்றனர். படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியானது. படத்திற்கு பிகில்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு பிகில் திரைப்படத்தில் செகண்ட் லுக் போஸ்டரை நள்ளிரவில் படக்குழு வெளியிட்டது.
மைக்கேல் என்ற பெயர் பொறிக்கப்பட்ட ஜெர்சி அணிந்தபடி நிற்கும் கால்பந்தாட்ட வீரர் விஜய், கையில் கத்தி, கழுத்தில் சிலுவை, நெற்றியில் திருநீறு, குங்குமம் என ரெளத்ரமாக நிற்கும் மற்றொரு விஜய் என இரண்டாவது போஸ்டர் உள்ளது. இன்று நடிகர் விஜய்க்கு பிறந்தநாள் என்பதால் அவர் ரசிகர்கள் படப்போஸ்டர்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொண்டாடி வருகின்றனர்.