“இதயத்தை பிடிச்சு இழுக்குது.. மீளவே முடியல...” - அமரன் படத்தை மனம்திறந்து பாராட்டிய சீமான்!
இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் சாய்பல்லவி இருவரின் அசாத்தியமான நடிப்பில் வெளிவந்திருக்கும் திரைப்படம் ‘அமரன்’.
2014-ம் ஆண்டு ஜம்மு-காஷ்மீரில் உள்ள 44-வது ராஷ்ட்ரிய ரைபிள்ஸ் பட்டாலியனில் பணிபுரியும் போது, ஷோபியானில் நடந்த காசிபத்ரி ஆபரேஷனில் முக்கியப் பங்கு வகித்து உயிர்நீத்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு இப்படம் இயக்கப்பட்டுள்ளது.
இந்திய ராணுவ வீரர்களின் தீரம்மிக்க வீரச்செயல்களை அடிப்படையாகக் கொண்டு காஷ்மீரின் சவால் மிக்க நிலப்பகுதிகளில் படமாக்கப்பட்டிருக்கும் அமரன் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுவருகிறது.
அமரன் திரைப்படத்தை பார்த்துவிட்டு தமிழக முதல்வர், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி பாஜக அண்ணாமலை மற்றும் அன்புமணி ராமதாஸ் முதலியோர் பாராட்டியிருந்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் திரைப்படத்தை பார்த்துவிட்டு மனம்நெகிழ்ந்து பாராட்டியுள்ளார்.
குறைகூற முடியாத ஆகச்சிறந்த படைப்பு..
சிவகார்த்திகேயன் கதாநாயகனாகவும், சாய் பல்லவி கதாநாயகியாகவும் நடித்திருக்கும் அமரன் திரைப்படம் தீபாவளியான அக்டோபர் 31 அன்று திரையரங்கில் வெளியானது. இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேசனல் நிறுவனம், சோனி பிக்சர்ஸ் இண்டர்நேசனல் புரொடக்ஷன்ஸ் மற்றும் மகேந்திரன் இணைந்து தயாரித்திருக்கும் இத்திரைப்படத்தை ரெட்ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. படம் வெளியாகி 5 நாட்கள் ஆகியிருக்கும் நிலையில் 100 கோடி வசூலை நெருங்கியுள்ளது.
இந்நிலையில் அமரன் திரைப்படத்தை பார்த்துவிட்டு சிவகார்த்திகேயன், சாய் பல்லவி, இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி மற்றும் தயாரிப்பாளர் கமல்ஹாசன் உள்ளிட்டோரை சீமான் மகிழ்ச்சியுடன் பாராட்டியுள்ளார்.
அமரன் திரைப்படத்தை பாராட்டியிருக்கும் அவர், “படம் இதயத்தை பிடிச்சு இழுத்துக்கிடுது. கடைசி 20 நிமிடத்தை பார்த்துவிட்டு அழுகாம நெகிழாம யாரும் வெளியில வரமுடியாது. முகந்தனாக நடிக்கும் வாய்ப்பு வரலாற்றில் என் தம்பிக்கு (சிவகார்த்திகேயன்) கிடைத்ததில் எனக்கு பெருமையும் மகிழ்ச்சியும், முகுந்தனாகவே என் தம்பியை பார்த்தேன்... அவ்வளவு சிறப்பாக நடித்துள்ளார்.
சாய் பல்லவி சும்மா ஒரு கதாபாத்திரத்தை கொடுத்தாலே பயங்கரமா நடிப்பாங்க, அப்படியிருக்கையில் இவ்வளவு கனமான கதாபாத்திரமெனும்போது, சிறப்பான பங்களிப்பை கொடுத்து நடிச்சிருக்காங்க.
ஒரு சிறு குறையும் சொல்ல முடியாத அளவுக்கு மிகச்சிறந்த படைப்பை ராஜ்குமார் பெரியசாமி கொடுத்திருக்கிறார். இவருக்குள் இப்படியான திறமை இருக்கிறதா என படத்தை பார்த்து வியந்துபோய்டுவிங்க, அப்படியான படைப்பை கொடுத்திருக்கிறார்.
எங்க அண்ணன் கமல்ஹாசன் தயாரித்ததிலேயே ஆகச்சிறந்த படைப்புகளில் இதுவும் ஒரு படைப்பு, இந்த நாட்டுக்கும் ராணுவ வீரர்களுக்கும் அவர் அர்ப்பணிச்ச படைப்பாகத்தான் இதை பார்க்கிறேன்” என மனம்திறந்து பாராட்டியுள்ளார்.
சீமானின் பாராட்டிற்கு நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் ராஜ்கமல் தயாரிப்பு நிறுவனம் இரண்டு தரப்பிலும் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.