சினிமா ஸ்டிரைக்குக்கு ஆதரவில்லை: வர்த்தக சபை அறிவிப்பு!
தயாரிப்பாளர் சங்கத் தலைவரும் நடிகர் சங்க பொதுச்செயலாளருமான விஷால் அறிவித்துள்ள சினிமா வேலை நிறுத்தத்துக்கு தமிழ் திரைப்பட வர்த்தக சபை ஆதரவளிக்காது என்று கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழ் திரைப்பட வர்த்தக சபை வெளியிட்டுள்ள அறிக்கையில், ’தமிழ் திரைப்பட வர்த்தக சபையின் மைய குழு கூட்டம் தலைவர் அபிராமி ராமநாதன் தலைமையில் நடைபெற்றது. இதில் வரும் 30-ம் தேதி நடைபெறும் வேலைநிறுத்தம் குறித்து விவாதிக்கப்பட்டது. முதலமைச்சரிடம் நேரில் சென்று திரை உலக குறைகளை சொன்னதும் அதிகாரிகளை அழைத்து அதற்கான உத்தரவுகளை பிறப்பித்தார். அதனால் வரும் 30ம் தேதி மாத்திரமல்ல, வேறு தேதியிலும் வேலைநிறுத்தத்தில் ஈடுபடமாட்டோம்’ என்று கூறியுள்ளது.
தமிழ்நாடு திரைப்பட வினியோகஸ்தர் சங்கமும் தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் கூட்டமைப்பும் ஏற்கனவே வேலைநிறுத்தத்தில் பங்கு பெறமாட்டோம் என்று அறவித்துள்ளது போல் தமிழ் திரைப்பட வர்த்தக சபையும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடாது என்று அறிவித்துள்ளது.
கூட்டத்தில் அபிராமி ராமநாதன், கலைப்புலி எஸ்.தாணு, அன்புசெழியன், சரத்குமார், சேரன், ராதாரவி உள்பட ஏராளமான தயாரிப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

